பலமுடன் உழைப்பான்

உழுபவன் தன்னைத் தொழுதிடப் பழகு
செழிப்புடன் வாழ்வாய் என்றும் அழகு
பழிப்பவர் கண்டால் பக்குவப் படுத்து
பழிதனைத் துடைத்து பாரினில் உயர்த்து.

மற்றவர் உண்ண மண்ணில் கிடப்பான்
உற்ற தொழிலாய் உழவைக் கொள்வான்
பற்றுடன் என்றும் பயிரினை வளர்ப்பான்
உற்ற பசியினை உதறியே எறிவான்.

வெயிலும் மழையும் வேண்டியே நிற்பான்
பயிரினை உயிரினும் மேலாய் காப்பான்
இயற்கை சதிகள் அழிவினைத் தருனினும்
செயற்கை சிரிப்பால் சிந்தை நிறைவான்.

பழமை போயினும் புதுமை பிறப்பினும்
உழவே உலகின் உயரியத் தொழிலாம்
வளமை பெருகிட வாய்க்கால் வெட்டி
உழவன் பயிரிட உற்றன செய்வீர்.

ஆளும் அரசும் அவனைப் பேணி
வாழும் வழிவகை நன்றாய் செய்யின்
நாளும் நலமாய் நிலைத்து வாழ்வான்
பாழும் பசியினைப் போக்கியே மீள்வான்.

நீர்நிலை பெருக்கி நதியினை நீட்டி
ஏர்முனை கொண்டு நிலமதை உழுதிடும்
ஓர்நிலை வளர்த்து உயர்ந்து நின்றால்
பாரே போற்ற பலமுடன் உழைப்பான்..

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (9-Feb-19, 3:13 pm)
பார்வை : 68

மேலே