கஜா புயல்

எத்தனை இடர்கள் வந்து
எமையிங் கழித்த போதும்
வித்தென முளைத்து நின்று
விந்தை பலவும் செய்வோம்.
இத்தரை தழைத்து நிற்க
உழைக்கும் வலிமை பெற்று
செத்தென பெருக வைத்து
சிறப்புடன் வாழ்வு கொள்வோம்.


காற்றென கஜாவும் இங்கே
கலங்கிட வைத்த பின்னும்
தோற்றிடப் போவ தில்லை
துடிப்புடன் எழுந்து நிற்போம்
ஆற்றலை விழிக்க வைத்து
அழிந்ததை தோற்று வித்து
கூற்றுவன் கலங்கி ஓட
கவலைகள் மறந்து வாழ்வோம்.


உழைத்த உழைப்பை யெல்லாம்
உறிஞ்சியே அழித்த பின்னும்
பிழைத்திடும் வழிகள் கண்டு
பெரும்பொருள் சேர்த்து வைப்போம்
பிழைகளைக் களைந்து என்றும்
பெருமைகள் கொண்டு சேர்ப்போம்
நுழைந்திடும் இடர்கள் யாவும்
நொறுங்கிட வழிகள் செய்வோம்.

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (9-Feb-19, 3:16 pm)
பார்வை : 36

மேலே