உறுமகார் மக்களென ஏம்பி இருந்தார் இசைந்து - மக்கட் பேறு, தருமதீபிகை 61

நேரிசை வெண்பா

மக்கட் பிறப்பை வழிவழியாய் மாண்புறுத்திப்
பக்கம் அழிந்து படாவகைநின்(று) - ஒக்கவே
ஓம்பி வரலால் உறுமகார் மக்களென
ஏம்பி இருந்தார் இசைந்து. 61

- மக்கட் பேறு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

உலகில் மக்கள் என விளங்கி நிற்கும் குழுவினர் வழிவழியே தொடர்ந்து வளர்ந்து வரக் கிளர்ந்து வருதலால் பிறந்த பிள்ளைகள் மக்கள் என்னும் அச்சிறந்த பெயரை அடைந்து நின்றனர் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

மகார் – பிள்ளைகள், ஏம்புதல் - உறுதித்துணையாய் உதவுதல்.

இம்மண்ணுலகில் எண்ணிடலரியபடி பலவகை உயிரினங்கள் பரவியுள்ளன. அவ்வெல்லாவற்றுள்ளும் மனிதர் சிறந்த பிறப்பினராய் உயர்ந்து விளங்குகின்றனர். அவர் யாண்டும் மக்கள் என வழங்கப்பட்டு வருகின்றனர்.

மாவும் மாக்களும் ஐயறி வினவே
மக்கள் தாமே ஆறறி உயிரே. – தொல்காப்பியம்;

என தொல்காப்பியனர் இவரை அறிவு நிலையில் தலை சிறந்தவராகக் குறித்திருக்கிறார்.

இங்ஙனம் உலகில் உயர்ந்த மக்கள் வகுப்பு என்றும் குன்றாமல் மேலும் மேலும் பெருகி வருவதற்குக் காரணம் பிறந்து வரும் பிள்ளைகளேயாம்; பிள்ளைப்பேறு இல்லையாயின், மக்கட் கூட்டம் ஒக்கத் தேய்ந்து உருவற மாய்ந்துபோம்; அங்ஙனம் அழிந்து போகாவண்ணம் குழந்தைகள் தொடர்ந்து பாதுகாத்து வருதலால் சிறப்புரிமையாக மக்கள் என அவர் குறிக்க நின்றார்.

மனித உலகத்தை மாட்சிமைப்படுத்தி இனிது வளர்த்து வருவது ஈன்ற குழந்தைகளே; ஆகவே அத்தோன்றல்களின் அருமை பெருமைகளை ஊன்றி யுணர்ந்து நன்றியறிவோடு நயந்து பேணி நலம் பல புரிக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (10-Feb-19, 8:17 pm)
பார்வை : 32

சிறந்த கட்டுரைகள்

மேலே