மிக்கவெழில் வாய்ந்தோனை வானவரும் ஒக்கப் புகழ்வர் உவந்து - அழகு, தருமதீபிகை 71

நேரிசை வெண்பா

தேடரிய செல்வமாய்த் தெய்வத் திருவாகிப்
பாடமைந்து நிற்கும் பரிசினால் - பீடமைந்த
மக்களுள்ளே மிக்கவெழில் வாய்ந்தோனை வானவரும்
ஒக்கப் புகழ்வர் உவந்து. 71

- அழகு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

அழகு என்பது யாரும் விரும்பும் இனிமையும் திவ்விய மகிமையும் உடையது; அதனையுடைய மகனை அமரரும் விழைந்து நோக்கி ஒருங்கே உவந்து புகழ்வர் என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல் அழகின் தகைமை கூறுகின்றது.

பொன், மணி, நிலம் முதலிய பொருள்களை எல்லாரும் முயன்று தேடி விரைந்து பெறுதல் போல் அழகை எவரும் எளிதில் பெற முடியாதாதலால் அது அரிய செல்வம் என வந்தது.

அதன் திவ்விய மகிமை கருதி அழகை தெய்வத்திரு என்றது. மனிதன் எண்ணியபடி எய்த முடியாமல் புண்ணியப் பயனாய்ப் பொருந்தி யுள்ளமையான் அப்புனித நிலை தெரிய இந்த இனிய பெயரை அஃது எய்தி நின்றது.

பாடு – மாண்பு, பரிசு- இயல்பு. பீடு - பெருமை. அதன் அருமை பெருமைகளை துணுகி உணர அழகைத் தேடரிய செல்வம், தெய்வத் திரு எனப் புகழ்ந்து பாடியது.

எழில் - இளமை நலம் கனிந்த இனிய அழகு. கொழுந்து விட்டு நாளும் கிளர்ந்து எழுதலால் எழில் என இயைந்து வந்தது. தினமும் புதுமையாய் வளர் நிலையில் உள்ளது என்பதாம்.

சிறந்த பிறப்பினையுடைய மக்களுள்ளே அழகு உடையவன் உயர்ந்து விளங்குகின்றான்; அவனைத் தேவரும் புகழ்ந்து போற்றுகின்றார்; கண் எதிரே கண்ட அப்புண்ணியப் பேற்றை எண்ணி உயர்க எனப்படுகிறது.

மனிதப் பிறப்பு நல்வினையினால் அமைந்தது; அத்தகைய அரிய பிறவியில் அழகிய உருவமுடையனாய் வருதல் பெரிதும் அருமையாம்.

கலிநிலைத் துறை
(மா விளம் விளம் விளம் மா)

கருவி மாமழை கனைபெயல் பொழிந்தென வழிநாள்
அருவி போல்தொடர்ந்(து) அறாதன வரும்பிணி அழலுள்
கருவிற் காய்த்திய கட்டளைப் படிமையிற் பிழையா(து)
உருவின் மிக்கதோர் உடம்பது பெறுதலும் அரிதே. 2752

- பெறுதற்கு அருமை, முத்தி இலம்பகம், சிந்தாமணி

அரும்பெறலான மக்கட் பிறப்பில் அழகுப் பிறப்பு அடைதல் மிகவும் அரிதாம் என இஃது உணர்த்தி நிற்கின்றது. இத்தகைய அருமையுடைய அது கருமம் உடையானுக்கே வரும் எனப்பட்டது;

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (10-Feb-19, 8:46 pm)
பார்வை : 16

மேலே