நேர்காணல் – 1--------------------------நித்ய சைதன்ய யதி

காலை பிரார்த்தனை வகுப்பு முடிந்துவிட்டது. மாணவர்கள் பலர் கிளம்பிச் சென்றுவிட்டனர். நித்ய சைதன்ய யதி ஒரு மாணவரின் தோளைப் பற்றியபடி விருந்தினர்களை சந்திக்கும் பகுதிக்கு வருகிறார். விசாலமான கூடத்தின் ஒரு பகுதி பிரார்த்தனைக்கும், மறுபகுதி விருந்தினர்களுக்கும் ஒதுக்கப்பட்டிருந்தது. இப்பகுதியின் ஒரு பக்க கண்ணாடிச்சுவர் வழியாக குருகுலத்தின் சிறுகட்டிடங்களும் தேயிலைச்செடிகளும் சில ஓட்டு வீடுகளும் தெரியும். யதி தந்த நிறத்தில் ஸ்வெட்டர் அணிந்திருக்கிறார். தூய வெண்ணிறத் தாடியும் தலைமயிரும் சிலுசிலுக்கின்றன. காது கேட்பானைப் பொருத்தியபடி என்னைப் பார்த்துப் புன்னகைக்கிறார். நாற்காலியில் அமர்ந்து கால்களை திண்டுமீது வைத்துக் கொள்கிறார். அருகில் சோபாவில் நான், குப்புசாமி (ஆர்.கே.), எதிரே கோபால் (சூத்ரதாரி).



உங்கள் தந்தையைப் பற்றிக் கூறுங்கள்!

அப்பா இளம் வயதிலேயே என் மனதைப் பெரிதும் கவர்ந்த ஆளுமையாக இருந்தார். தினம் என்னை நடக்க அழைத்துச் செல்வார். மலர்களையும் பறவைகளையும் கூழாங்கற்களையும் காட்டி ரசிக்கக் கற்றுத் தருவார். இளம் வயதில் அவர் ஊட்டிய இயற்கை ஈடுபாடே அவர் எனக்குத் தந்த சொத்து. அப்பா அவர் எழுதுவதை எங்களுக்கு வாசித்துக் காட்டுவார். சாக்ரடீஸ், கதே, தோரோ, பேகன், ஆதிசங்கரர், விவேகானந்தர் முதலிய பெயர்களெல்லாம் மிக இளம் வயதிலேயே எங்கள் வீட்டில் அன்றாடப் புழக்கத்தில் இருந்தன. என் அத்தைக்கு கவிதையில் மிகுந்த ஈடுபாடு. வள்ளத்தோள், உள்ளூர் முதலிய புகழ்பெற்ற கவிஞர்களுடன் அவளுக்குக் கடிதத் தொடர்பு உண்டு. கவிஞர்களிடமிருந்து கடிதங்கள் வருவது எங்கள் குடும்பத்தில் ஒரு முக்கிய நிகழ்ச்சி.

சிறுவயதில் உங்களை அதிகம் பாதித்த சம்பவங்கள் எவை?

என் வாழ்க்கையை நிர்ணயித்தவை என நான் கருதும் இரு சம்பவங்கள் என் இளமைக் காலத்தில் நடந்தன. எங்களூரில் தீண்டாமை ஒழிப்புப் பிரச்சாரத்திற்காக மகாத்மா காந்தி வந்திருந்தார். என் தந்தை அன்று அவ்வியக்கத்தின் தீவிர ஊழியர். தாழ்த்தப்பட்ட மக்கள் பங்கு கொண்ட ஒரு கூட்டம் எங்கள் வீட்டருகே நடந்தது. அப்பா என்னை ஒரு மேஜைமீது ஏற்றி, பேசும்படி கூறினார். நான் மனப்பாடம் செய்திருந்த நாராயண குருவின் உபதேச மொழிகளை ஒப்பித்தேன். காந்திஜி பகவத் கீதையை என்னிடம் தந்து படிக்கும்படி கூறினார். சில சுலோகங்களை நான் படித்தேன். கீதையை புன்னகையுடன் நீட்டிய காந்திஜியின் முகம் வெகுகாலம் எனக்கு உத்வேகமூட்டிய நினைவாக இருந்தது. இன்றும் அழியாமலிருக்கிறது.

மற்றொரு சம்பவம் நான் ஆறாவது படிக்கும்போது நடந்தது. பழைய பத்திரிகையொன்றில் ஒரு மனிதரின் அழகிய புகைப்படம் பிரசுரமாகியிருந்தது. அவருடைய மேனாட்டு உடையும், புன்னகையும் என்னைக் கவர்ந்திருக்கலாம். அதை வெட்டி என் பாடநூலில் வைத்துக் கொண்டேன். பல வருடங்கள் அது என்னிடம் இருந்தது. அது நடராஜ குரு பாரீஸில் இருந்தபோது எடுத்துக்கொண்ட படம். பின்னர் நான் நடராஜ குருவை என் ஆதர்ச புருஷராகவும் வழிகாட்டியாகவும் கொள்ள அதுவும் காரணமாக அமைந்திருக்கக்கூடும்.

எப்போது துறவு பூண்டீர்கள்?

துறவியாக வேண்டும் என்ற எண்ணம் என் பதினைந்தாவது வயதில் உறுதியாக ஏற்பட்டது. மிக இளம் வயதிலேயே நான் தனிமை விரும்பியாக இருந்தேன். காடும் மலைகளும் சூழ்ந்த ஊர் பந்தளம். இரவும் பகலும் சுற்றியலைவது என் வழக்கம். துறவு என்பது சுதந்திரம் என நான் அறிந்திருந்தேன். மெட்ரிகுலேஷன் தேர்வு முடிவுகள் வந்ததும் வீட்டைவிட்டுக் கிளம்பிவிட்டேன். பெற்றோருக்கு ஒரு கடிதம் எழுதினேன். நான் உங்களுக்குப் பயனுள்ளவனாக, மகனுக்குரிய கடமைகளை நிறைவேற்றுபவனாக இருக்கமாட்டேன்; எனவே உங்கள் செலவில் மேற்கொண்டு படிக்கவோ, உங்கள் பரம்பரைச் சொத்தில் பங்குபெறவோ விரும்பவில்லை என்று தெரிவித்திருந்தேன். கொல்லம் வழியாக மதுரைவரை பயணம் செய்ய மட்டுமே என்னிடம் பணம் இருந்தது. டிக்கெட் எடுக்காமல் நான் பயணம் செய்வதில்லை. எனவே மதுரை ரயில் நிலையத்தில் அமர்ந்திருந்தேன். இடுப்பில் ஒன்றும் தோளில் ஒன்றுமாக இரு அரை வேட்டிகளே என் உடைமை. இத்தகைய கட்டங்களில் என் வாழ்வை நான் முற்றாக நியதியின் கரங்களில் விட்டுவிடுவதுண்டு. பின்னர் இதுபோல் உலகின் பல்வேறு மூலைகளில் அமர்ந்திருக்கிறேன். அன்று ஒரு ரயில்வே போலீஸ்காரர் எனக்கு சோழவந்தான் வரை டிக்கெட் எடுத்துத் தந்தார். அங்கிருந்து ஒரு டிக்கெட் பரிசோதகர் கோவைக்கு டிக்கெட் எடுத்துத் தந்தார். பின் ஊட்டிக்கு ஒரு வியாபாரி அழைத்துச் சென்றார். இவர்கள் அனைவருமே நான் அவசரப்பட்டு முடிவுகளுக்கு வரவேண்டாமென்றும், ஊர் திரும்புமாறும் அறிவுறுத்தினர். ஆனால் எனக்கு சஞ்சலமே இல்லை. விடுதலையுணர்வு என்னைக் களிப்பில் ஆழ்த்தியிருந்தது. அப்போது நடராஜ குரு ஊட்டியில் இல்லை. எனவே நான் ஊர் ஊராக அலைய ஆரம்பித்தேன்.

உங்கள் படிப்பு என்ன ஆயிற்று?

ஒரு முறை திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் அமர்ந்திருந்தேன். அப்போது ஒரு பாதிரியார் என்னைப் பற்றி விசாரித்தார். தன்னுடன் வரும்படி அழைத்தார். நான் மதம் மாற மாட்டேன் என்று திட்டவட்டமாகக் குறிப்பிடேன். அவர் பரவாயில்லை என்றார். அவருடன் ஆல்வாய் சென்றேன். தன் மகனின் பழைய உடைகளை எனக்குத் தந்தார். என் சான்றிதழ்கள் ஊரில் ஒரு நண்பனிடம் இருந்தன. அவற்றை வரவழைத்து பணம் கட்டி என்னை எஃப்.ஏ. படிப்பிற்குச் சேர்த்தார். எவ்வித நோக்கமும் இன்றி என்மீது பேரன்பு காட்டினார். எனக்கு மாதம் நாற்பது ரூபாய் உதவிப்பணம் கிடைத்தது. செலவுபோக மீதமும் வரும். திருவனந்தபுரம் பல்கலைக்கழக கல்லூரியில் எம்.ஏ. முடித்தேன். அன்று புராதன தத்துவம், தருக்கம், ஒழுக்கவியல் முதலியவை பாடங்கள். உளவியல் அப்போது தத்துவத்தின் ஒரு பிரிவு. நடராஜ குருவுடன் தொடர்பு வைத்திருந்தேன். ஆனால் அவர் தொடர்ந்து பயணத்திலிருந்தார்.

நடராஜ குருவுடன் உறவு வலுப்பட்டது எப்படி?

1952-இல் நான் படிப்பை முடித்ததுமே கொல்லம் ஶ்ரீ நாராயணா கல்லூரியில் என்னை வேலைக்கு அழைத்தார்கள். அங்கு உளவியல் துறைத் தலைவராகப் பணியாற்றினேன். படிப்பே என் வாழ்க்கையாக இருந்தது. நடராஜ குரு ஒருமுறை கொல்லம் வந்தார். விழாக்குழு என்னை அவருக்கு உதவியாளராக நியமித்திருந்தது. டாக்டர் ராதாகிருஷ்ணன் எழுதிய, ஒரு பிரிட்டிஷ் பதிப்பகத்தார் வெளியிட்டிருந்த பகவத்கீதை உரை அன்று மிகவும் பிரசித்தம். அதை ஒரு பந்தாவிற்காக என் கையில் வைத்திருந்தேன். நடராஜ குரு நிகழ்ச்சி முடிந்து காரில் போகும்போது அந்த நூலை வாங்கிப் புரட்டிப் பார்த்தார். பிறகு சன்னல் வழியாகத் தூக்கி வீசி எறிந்துவிட்டார். நான் பதறியவாறு காரை நிறுத்தும்படி கத்தினேன். ஓடிப்போய் நூலை எடுத்துக்கொண்டு குருவிடம் கோபப்பட்டேன். தத்துவ மேதையொருவரின் நூலைத் தூக்கிவீச அவருக்கு என்ன தகுதி இருக்கிறது என்று கேட்டேன். குரு அதில் குறிப்பிட்ட ஒரு பக்கத்தைப் புரட்டிப் படிக்கும்படி கூறினார். அதில் ராதாகிருஷ்ணன் கீதை ஒரு மத நூல் என்று கூறியிருந்தார். குரு என்னிடம் “மூன்று பேரமைப்புகள் எவை?” என்று கேட்டார். “உபநிடதம், கீதை, பிரம்மசூத்திரம்” என்று நான் பதில் கூறினேன். “இப்போது நீயே கூறினாய் கீதை மூன்று பெரும் தத்துவ அமைப்புகளில் ஒன்று என்று. எப்படி இவர் அதை மத நூல் என்று கூறலாம்?” என்று கேட்டார் குரு. தொடர்ந்து மதம் என்றால் என்ன, தத்துவத்திற்கும் மதத்திற்கும் உள்ள இணக்கமும் பிணக்கமும் எவையெவை என்று விளக்கமாகச் சொன்னார். அந்த அணுகுமுறை என்னைப் பெரிதும் கவர்ந்தது. ஆயினும் வீறாப்பாக “ராதாகிருஷ்ணன் சும்மா அப்படி எழுதமாட்டார். தகுந்த காரணங்கள் இருக்கும்” என்றேன். குரு சிரித்தார். என் கோபம் அவருக்குத் திருப்தி தந்ததாகச் சொன்னார். அவருடைய படிப்போ துறவி என்னும் கெளரவமோ அவருடன் மாறுபட்டு விவாதிப்பதற்கு எனக்குத் தடையாக இருக்கவில்லை என்பது மிக முக்கியமான விஷயம் என்றார். சிந்தனைத் துறையில் தாழ்வுணர்ச்சியே மிக அபாயகரமானது என்றும் டாக்டர் ராதாகிருஷ்ணனை அவருடைய புகழையும் பதவியையும் பொருட்படுத்தாமல் நான் ஆராயவேண்டும் என்றும் கூறினார். அவர் நூலை விட்டெறிந்தது என் மனதைப் புண்படுத்தியதைச் சொன்னேன். தானும் புத்தகங்களை நேசிப்பவன் என்றும் ஆனால் புத்தகங்கள் மீது பக்தி கொள்வதில்லை என்றும் சொன்னார். உள்நோக்கத்துடனும், கவனமின்றியும் எழுதப்படும் நூல்கள் மிக ஆபத்தானவை; அச்சேற்றப்பட்டதனாலேயே அவற்றை மதிப்பது தவறு என்று விளக்கினார்.

1956-இல் நான் சென்னையில் விவேகானந்தா கல்லூரியில் தத்துவப் பேராசிரியராக வேலை பார்த்தபோது டாக்டர் ராதாகிருஷ்ணனை சந்திக்க நேர்ந்தது…

அதற்குமுன் ஒரு கேள்வி. நீங்கள் அங்கு பணியில் அமர என்ன காரணம்? பேராசிரியர் வேலையை விரும்பினீர்களா?

இல்லை. கொல்லத்தில் பேராசிரியர் வேலையை உதறிவிட்டு சிலநாட்கள் நடராஜ குருவுடன் இருந்தேன். துறவியானது அப்போதுதான். பிறகு சுற்றியலைய ஆரம்பித்தேன். பொது இடங்களில் பிச்சைக்காரர்கள், தொழு நோயாளிகள் போன்றவர்களுடன் தங்குவேன். சென்னையில் ஒரு கடைத்திண்ணையில் இரவு தங்கினேன். மழை. நல்ல குளிர். உடைகள் போதுமான அளவு இல்லை. குளிருக்காக தெருநாய்களை ஒண்டிப் படுப்பது வழக்கம். அவை கதகதப்பாக இருக்கும். அவ்வழியாக கோயிலுக்குச் சென்ற மயிலை ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் என்னை அழைத்து விசாரித்தார். என் படிப்பு பற்றி அறிந்ததும் விவேகானந்தா கல்லூரியில் பேராசிரியராகப் பணி புரியும்படி கூறினார். எனக்கு விருப்பமில்லை. ஆனால் நவீன காலத்தின் அறிவுத் துறைகளுடன் உரிய அறிமுகம் துறவிக்கு இருந்தே ஆகவேண்டும் என்றும், நான் முறைப்படி கற்கவேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன என்றும் சொன்னார். நான் உடன்பட்டேன். கொல்லம் கல்லூரியிலிருந்து என் சான்றிதழ்களை வரவழைத்து வேலை போட்டுத் தந்தார். ராமகிருஷ்ண மடத்தின் நூலகத்தை நான் நன்கு பயன்படுத்திக் கொண்டேன்.

டாக்டர் ராதாகிருஷ்ணனை சந்தித்தது எப்போது?

1956-இல் ராதாகிருஷ்ணன் சென்னை வந்தார். தத்துவ மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒரு விருந்து ஏற்பாடு செய்திருந்தார்கள். என் மாணவர்களுடன் நானும் சென்றிருந்தேன். அங்கு அவருடன் நடந்த உரையாடலில் கீதையை அவர் மத நூல் என்று குறிப்பிட்டது ஏன் என்று கேட்டேன். ராதாகிருஷ்ணன் சிரித்தபடி “பிரசுரகர்த்தர் மிகவும் அவசரப்படுத்தினார். அவசரமாக எழுதிய நூல் அது. அதை நான் மீண்டும் சரிபார்க்க வேண்டும்” என்றார். பிறகு என் மாணவர்களிடம் திரும்பி, “உங்கள் ஆசிரியரிடம் இதைக் கற்றுக்கொள்ளுங்கள். யார் கூறினாலும் ஆராயாமல் அதை ஏற்கலாகாது” என்றார். மேற்கொண்டு ஏதும் பேச முற்படவில்லை. அப்போது உடனிருந்த பி.கே.ராவ் என்பவர் பெங்களூரிலிருந்து வெளிவந்த தத்துவ இதழொன்றில் இச்சம்பவத்தைக் குறிப்பிட்டு, டாக்டர் ராதாகிருஷ்ணன் நழுவாமல் பதிலளிக்கவேண்டும் என்று கண்டித்திருந்தார். இந்தச் சம்பவம் சென்னையிலுள்ள பிராமணப் பிரமுகர்களைக் கோபமடையச் செய்தது. அக்கோபத்திற்குக் காரணம் இதற்கு ஒரு வருடம் முன்பு பெரியார் கூட்டிய மாநாடு ஒன்றில் நான் கலந்துகொண்டதும், எங்களுக்குள் பரஸ்பரம் இருந்த நல்லெண்ணமும்தான். அவர்கள் இந்தச் சம்பவத்தைப் பயன்படுத்திக் கொண்டார்கள். கல்கத்தாவிற்கு புகார் அனுப்பப்பட்டது. அங்கிருந்த ஒரு துறவி வந்து என்னிடம் விசாரணை நடத்தினார். பிறகு என் தரப்பே சரியானது என்றும் என்னுடன் முற்றிலும் உடன்படுவதாகவும் கூறிவிட்டுச் சென்றார். ஆனால் மயிலை மடத்தின் புரவலர்களாக இப்பிராமணப் பிரமுகர்களே இருந்தனர். அவர்களைப் பகைத்துக் கொள்ள நிர்வாகத்தால் முடியவில்லை. விடுமுறை எடுத்தது சம்பந்தமாக எனக்கு மெமோ தந்தார்கள். ராஜினாமா செய்துவிட்டு ஊட்டிக்குப் போய்விட்டேன். டாக்டர் ராதாகிருஷ்ணன் கவனக்குறைவாக எழுதவில்லை என்பது இன்று உறுதியாகத் தெரிகிறது. பழைய நூல்களின் உள் முரண்களைத் தவிர்த்து பொது அம்சங்களை மட்டும் தொகுத்து அவற்றின் அடிப்படையில் (இந்து) மதத் தத்துவம் ஒன்றை உருவாக்கவே அவர் முயன்றார். நேரடி விவாதங்களுக்குப் பதிலாக நழுவும் உத்திகளே அவருடைய வழிமுறைகளாக இருந்தன. அவை பெருமளவு வெற்றியும் பெற்றுள்ளன. இன்று அவருடைய எதிர்தரப்பினர்கூட இந்தியச் சிந்தனை என்பது (இந்து) மதச் சிந்தனையே என்று நம்புகிறார்கள். நடராஜ குரு நடந்துகொண்ட முறை எனக்கு இப்போது புரிகிறது. பிறகு நாற்பது வருடம் நான் ஆற்றிய பணிகள் குருவின் இச்செயலில் இருந்த மறைமுக உத்தரவை நிறைவேற்ற முயன்றதன் விளைவே என்று கூறலாம்.

பம்பாயில் ஆய்வு மாணவராக இருந்தீர்களல்லவா?

ஆம். சில வருடங்கள் குருவுடன் ஊட்டியில் தங்கினேன். தொடர்ந்து கற்ற நாட்கள் அவை. குரு என்னை ஐந்துமணிக்கு வந்து கதவைத் தட்டச் சொல்வார். பழைய பெஞ்சுமீது பத்மாசனத்தில் அமர்ந்திருப்பார். நான் பென்சில் தாளுடன் இருப்பேன். சரளமாகச் சொல்லிக்கொண்டே போவார். பல்லாயிரம் பக்கங்கள் எழுதியுள்ளேன். ஒவ்வொரு துறையிலும் அத்துறையின் முறைமை சார்ந்த கல்வி குருவிற்கு இருந்தது. அது அவர் பெர்க்ஸனிடம் பெற்ற பயிற்சி. முறைமையில்லாத மனப் பாய்ச்சல்களை அவர் ஏற்பதில்லை. பிறகு நாங்கள் நடக்கச் செல்வோம். சமைப்போம். நன்றாக அவியல் வைக்கத் தெரியாத ஒருவனால் நல்ல அத்வைதி ஆக முடியாது என்பார் குரு! விரும்பிச் சாப்பிடுவார். ஆனால் எங்களிடம் பணம் குறைவு. பலசமயம் பட்டினி கிடப்போம். பணத்துடன் யாரேனும் வரும்வரை பேசியபடி இருப்போம்.

ஒருநாள் சார்லஸ் கிங்ஸ்லியின் நூல் ஒன்றில் ஃபிலாமின் எனும் கதாபாத்திரம் தன் குருவைவிட்டுப் பிரிந்து செல்லும் இடத்தைப் படித்தேன். எனக்கு உடனே கிளம்பிவிட வேண்டும் என்றுபட்டது. குருவிடம் கூறினேன். “எங்கே போக உத்தேசம்?” என்றார். “பம்பாய்” என்றேன். பம்பாய்க்கு ரயில் கட்டணம் ஐம்பது ரூபாய். அவர் ஐம்பது ரூபாய் தந்தார். பிறகு ஒரு ஐந்து ரூபாய். விடைபெறும்போது ஒரு ரூபாய். பம்பாயில் என் நண்பர் தன் வீட்டுக்குக் கூட்டிச் சென்றார். ஒரே அறை உள்ள வீடு. அதிலேயே சமையல், குளியல், படுக்கை. இரவில் கால்களை வெளிவராண்டாவில் நீட்டியபடிதான் தூங்குவார். ஆனால் மகிழ்ச்சியாக வாழ்ந்துவந்தார். எனக்கு செருப்பு வாங்கித் தந்தார். பகலில் அருகேயுள்ள மடத்திற்குப் போவேன். அங்கு துறவிகளுக்கு உணவும், ஒரு அணாவும் தருவார்கள். ஒருமுறை வெளியேவந்து பார்த்தபோது என் செருப்பு தொலைந்துவிட்டது. நண்பரை எண்ணி மனம் கலங்கினேன். ஒரு பணக்கார வியாபாரி தன் செருப்புகளைத் தர முன்வந்தார். நான் விளையாட்டாக ‘இன்னொருவர் ஷுவிற்குள் கால் நுழைப்பது’ என்றால் என்ன தெரியுமா என்று கேட்டேன். நான் ஆங்கிலம் பேசுவதைக் கேட்டு அவருக்கு வியப்பு. என்னை அவருடன் தங்க வைத்தார். படிக்க ஏற்பாடு செய்து தந்தார். டாடா இன்ஸ்டிட்யூட்டில் சேர்ந்தேன். பார்வையற்றோரின் உளவியல் பற்றி மூன்று வருடம் ஆய்வு செய்தேன். மகத்தான அனுபவம் அது.

பார்வையற்றோரின் உலகம் வித்தியாசமானது அல்லவா?

தவறான புரிதல் இது. அதை உணர நேர்ந்ததையே நான் மகத்தான அனுபவம் என்றேன். உலகை நாம் புலன்களால் அறிவதில்லை. மனதால்தான் அறிகிறோம். உதாரணமாக நான் ஓர் இளைஞனை பேட்டி கண்டேன். அவன் தன் எதிர்கால மனைவி பற்றிச் சொன்னான். முதல் தகுதி அழகு. ஆம்; உடலழகுதான். எப்படி அவன் அழகை அறிகிறான்? அவன் தன் மீதி நான்கு புலன்களால் பெண்களின் அழகை அறிகிறான். மதிப்பிடுகிறான், மகிழ்கிறான் என்று தெரிந்தது. எப்படி? நாம் எப்படி மதிப்பிடுகிறோம் என அவன் அறிவதில்லையே, அதுபோல நாமும் அறியமுடியாது. நாம் அவர்களை வேறுவகையான மனம் உடையவர்களாக எண்ணுவது மிகவும் தவறானது.

எப்படி நாராயண குருகுலத்தின் தலைவர் ஆனீர்கள்?

1980-இல் குரு இறப்பதற்கு முன் ஒருநாள் என்னை அழைத்தார். என்னிடம் குருகுலத்தின் பொறுப்பை ஒப்படைப்பதாகச் சொன்னார். சுதந்திரம் தடைபடலாகாது என்று என் பரம்பரைப் பெரும் சொத்தை உதறியவன் நான். மறுத்துவிட்டேன். பிறகு ஒருநாள் குரு என்னிடம் ஒரு பேனாவைத் தந்தார். சில நாள் கழித்து அதை திரும்பக் கேட்டார். திரும்ப வாங்கியதும் சிரித்தபடி, “இதைப் போல குருகுலத்தை உன்னிடம் தற்காலிகமாக ஒப்படைக்கிறேன்” என்றார். என்னால் மறுக்க முடியவில்லை. என் பொறுப்புகளை ஒழுங்காக நிறைவேற்றுவது என் வழக்கம். குருவின் உத்தரவுகள் அனைத்தையும் நான் முடிந்தவரை நிறைவேற்றியுள்ளேன். இறுக்கமற்ற நடைமுறை கொண்ட ஒரு ஞானத்தேடலுக்கான அமைப்பாகவே இக்குருகுலத்தை குரு உருவகித்திருந்தார். அப்படியே இன்றுவரை தொடர்கிறது. பல உலகநாடுகளிலும் இந்தியாவின் பல பகுதிகளிலும் கிளைகள் உள்ளன. ‘ஈஸ்ட் வெஸ்ட் யூனிவர்சிடி’ என்ற அமைப்பு பிரம்ம ஞானம் பெற விரும்புகிறவர்களுக்கு அடிப்படைக் கல்வியை அளிக்கிறது. ஆய்வு நூலகங்கள் பல செயல்படுகின்றன. இச்செயல்களுக்கப்பால் என் வாழ்க்கை ஒரு தேடலாகவும் அழகனுபவமாகவும் உள்ளது.

(1995-96-இல் ஜெயமோகன், ஆர்.குப்புசாமி, சூத்ரதாரி ஆகியோர் பதிவு செய்த நித்ய சைதன்ய யதியுடனான நேர்காணல்)

– ‘அனுபவங்கள் அறிதல்கள்’ புத்தகத்திலிருந்து

எழுதியவர் : (11-Feb-19, 5:11 am)
பார்வை : 136

சிறந்த கட்டுரைகள்

மேலே