கலையறிவை மேலோர் கருத்தூன்றிப் பேணின் பலரும் விழைந்து பயில்வார் - கவி, தருமதீபிகை 210

நேரிசை வெண்பா

கலையறிவை மேலோர் கருத்தூன்றிப் பேணின்
பலரும் விழைந்து பயில்வார் - தலைமையுளார்
பேணா(து) ஒழியின் பிழையாய் உலகும்பின்
காணு(து) ஒழியும் கழிந்து. 210

- கவி, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

கலைஞானங்களை மேலோர் கருதிப் பேணின் உலகமக்களும் அதனை உவந்து பயின்று உயர்ந்து கொள்வார்; அவர் பேணாது ஒழிவரேல் பலரும் அவற்றைக் காணாமல் இழிந்து போவர் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

செல்வம், அதிகாரம் முதலியவற்றால் உயர்ந்து நிற்போரை மேலோர் என்றது. அரசன் எவ்வழி அவ்வழி குடிகள் என்பது வழங்கு மொழியாகும், உலக நிலையில் சிறந்து நிற்கின்ற இவரைப் பின்பற்றியே பொதுமக்களும் நடந்து வருவர்.

தலைமையான இவர் கலையறிவைப் போற்றி நல்ல நூல்களை விழைந்து பயின்று புகழ்ந்து பேணிவரின், எல்லாரும் கல்வி நலனை உவந்து கற்று உயர்ந்து திகழ்வர். பெரியராயுள்ள இவர் கலையை உரிமையுடன் பேணாது ஒழியின் பிறரும் அதனை மதியாது இழிவர்.

’கலையறிவைத் தலைமக்கள் பயிலாராயின், பொது சனங்களால் அது இகழப்படுகின்றது' என்று கோல்டுஸ்மித் என்னும் ஆங்கில அறிஞர் கூறிய வாசகம் ஈண்டு அறிய உரியது.

கலையையும் கலைஞரையும் மேலோர் கருதிப் பேணாவிடின் அந்நாடு மூடமாம்; அப்பழியும் பாவமும் தலைமையாளராய் நிலவியுள்ள தம் தலையிலேயே ஏறுகின்றமையால் அவர் நிலைமை தெரிந்து நெறி செய்யவேண்டும்.

பண்டு அரசர் விழைந்து பாதுகாத்து வந்த இந்நாட்டுக் கலைஞானம் இன்று நாதியற்று நிற்கின்றது.

தமிழ்க்கலை தொன்று தொட்டே சிறந்த நிலையில் செழித்து வளர்ந்துள்ளது; இருந்தும் அதனை உவந்து விழைந்து பயில்வார் பெரும்பாலும் இன்று குறைந்திருக்கின்றனர். இக்குறை நீங்கிய போதுதான் இந்நாடு சிறை நீங்கிச் சிறந்து விளங்கும்.

தம் முன்னோர் தமக்கு வைத்துப் போயுள்ள அரிய கருவூலங்களை உரிமையாக உவந்து கொள்ளாமல் நம்மவர் கண் குருடுபட்டுச் சிறுமையாய் ஒதுங்கி உழலுதலைக் கருதும் தோறும் பெரிதும் பரிதாபமாகின்றது.

அறுசீர் விருத்தம்
(மா விளம் விளம் விளம் விளம் காய்)

துங்க யானைமுன் படுத்தினும் படுத்துக சுடர்மணிப் பகுவாய்வெம்
சிங்கம் வாயிடைச் செலுத்தினும் செலுத்துக தென்புலத் தவர்கோமான்
வெங்கண் மாநர கத்திடை வீழ்த்தினும் வீழ்த்துக விடையேறும்
எங்கள் நாயக தமிழறி யாருடன் இயம்புதல் தவிர்ப்பாயே.

என்னை யானைக் காலால் இடரச் செய்தாலும் சரி. இல்லை நரகத்திலேயே வீழ்த்தி விட்டாலும் சரி. ஒன்றே ஒன்றை மட்டும் செய்து விடாதே. அதாவது தமிழின் அருமை அறியாதவர்கள் முன்னிலையில் என்னை பாடல் சொல்லும் நிலையில் வைத்து விடாதே என்று விண்ணப்பித்துக் கொண்டிருக்கிறான் ஒருகவிஞன்; இக்கவிதையிலிருந்து இந்நாட்டுக் கவிஞர் தமிழ் மொழியை அந்நாளில் போற்றி வந்துள்ள நிலைமை புலனாம்.

அரிய பொருள்கள் அமைந்து இனிய சுவைகள் நிறைந்து விழுமிய நிலையில் விளைந்திருக்கின்ற கவி நயங்களைக் கருதி நுகர்த்து உறுதி நலங்களைப் பெறுவதே அரிய பிறவிக்கு உரிய பயனாம்.

நேரிசை ஆசிரியப்பா

பூமணி யானை பொன்னென வெடுத்துத்
திங்களும் புயலும் பருதியுஞ் சுமந்த
மலைவருங் காட்சிக் குரிய வாகலின்
இறையுடைக் கல்வி பெறுமதி மாந்தர்
ஈன்றசெங் கவியெனத் தோன்றிநனி பரந்து
பாரிடை யின்ப நீளிடைப் பயக்கும்
பெருநீர் வையை வளைநீர்க் கூடல்
உடலுயி ரென்ன உறைதரு நாயகன். செய்யுள் 2, கல்லாடம்

கவியின் இயல்பையும், அதனை இயற்றும் கவிஞரது உயர்வையும் கல்லாடர் இங்ஙனம் வியந்து சொல்லியிருக்கிறார், பூமணி முதலிய மங்கல மொழிகளை முதலில் அமைந்து, அரிய சீவகதி போல் இனிய நீர்மை பொலிந்து மனிதவுலகம் உய்யக் கவிகள் இனிது உதவி வருகின்றன.என இதில் வந்துள்ளன என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (11-Feb-19, 12:09 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 24

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே