ஆய்ந்து தெளிந்த அறிஞர் தமதுள்ளே தோய்ந்துலகம் இன்பமுறச் சொல்லுவார் - கவிஞர், தருமதீபிகை 220

நேரிசை வெண்பா

ஆய்ந்து தெளிந்த அறிஞர் தமதுள்ளே
தோய்ந்துலகம் இன்பமுறச் சொல்லுவார் - சாய்ந்துநின்று
சோரப் புலவரயல் சொன்னதையே பன்னிவசை
கூரப் புகல்வர் குறி. 220

- கவிஞர், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

ஆராய்ந்து தெளிந்த அரிய புலவர் தம் அகத்தே கூர்ந்து நோக்கி அனுபவமாய் ஓர்ந்துணர்ந்த உண்மைகளையே உலகம் நன்மையுற இனிமையாக உவந்து சொல்லுவர்; புன்மையான சோரப்புலவர் பிறருடைய கருத்துக்களைக் கள்ளமாகக் கவர்ந்து எள்ளலுடன் சொல்லி இழிந்து நிற்பர் என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல் புலமைச் சோரத்தின் புலைமை கூறுகின்றது.

தனது மதிநலத்தைப் பண்படுத்திக் தானாக ஆராய்ந்து சொல்வதே மேன்மையாம்; அங்ஙனமின்றிப் பிறர் கருதியுரைத்த கருத்துக்களையே கரவாக எடுத்து மறைவாக வெளியிடுதல் மிகவும் கீழ்மையாம். ஆவதை அறியாமல் போவது புலையாகும்.

தன் சொந்த அறிவிலிருந்து வருவது இனிய ஊற்றில் ஊறும் நீர்போல் இன்பம் பயக்கும்; அயலாருடையதை மயலாக அள்ளிக் கொள்வது இட்டு வைத்த கட்டுக்கடை நீராய் ஒட்டி ஒழியும்.

முன்னோர் நூல்களையும் மேலோர் எண்ணங்களையும் சால்பாக ஆராய்ந்து நேர்மையுடன் தானாகவே நூல் செய்யவேண்டும்; அதுவே சீர்மையாம்.

'ஒரு புலவன் நெடுங்காலம் ஆய்ந்து தெளிந்து அருமையாக வெளியிட்டுள்ள அறிவுநலங்களைச் சிறிது களவாடி உருக்குலைத்துத் தான் கண்டதாக உலகம் காணச் செய்ய முயல்வது பெரிதும் பரிதாபமாகின்றது.

தான் முயன்று தேடிய பொருள் அறமும் இன்பமும் அருளும், களவில் கவர்ந்தது பழியும் துன்பமும் பயக்கும். அது போல் அறிவுப் பொருளையும் கருத வேண்டும்.

கள்ளம் புரிந்து சுவை காணவே, உள்ள அறிவின் உழைப்பு ஒழிந்து போவதால் நல்ல கருத்துக்களைத் தானாகக் காணமுடியாதபடி வீணே இழித்து அது மெலிந்து தொலைகின்றது.

கள்ளத்தனம் தன் நல்ல உள்ளத்தைக் கெடுத்து விடுதலால் அது பொல்லாக் கொலையாய்ப் புலையாடி நிற்கின்றது.

’Imitation is suicide’ ‘பிறர் நூலைக் கவர்ந்து செய்தல் தற்கொலையாம்' என எமர்சன் என்னும் அமெரிக்கப் பெரியார் கூறியுள்ளதும் ஈண்டு அறியற்பாலது.

பிறப்புரிமையில் தனக்கு வாய்த்த அறிவைப் பாழ்படுத்தி விடலால் கலைச் சோரம் கொலைச் சாரமாய்க் குறிக்க நேர்ந்தது.

"மலைச்சாரல் வனம்முதலாத் தனிவழியே வருவாரை
வழிம றித்துப்
புலைச்சோரர் பொருள்கவர்வார் பொல்லாதார் எனப்புகல்வர்;
புலக்கண் இன்றிக்
கலைச்சோரம் புகுந்துசிலர் களவாகப் பிறர்நூலுட்
பலக வர்ந்து
நிலைச்சோரம் புரிகின்றார் நெடுஞ்சோரர்; இவர்க்குநேர்
நிலத்தில் யாரே? - இந்தியத்தாய் நிலை

புலமையில் சோரம் புரிதல் புலைமையாம் என்றதனால் அதன் நிலைமையும் தீமையும் நெடிது புலனாம்.

பிறருடைய அறிவுப் பொருள்களைக் களவாடித் தமதாகக் காட்டித் தருக்கி நிற்பாரை அவரது நீர்மை நிலை தெரிய, சோரப் புலவர் என்றது, அவர் சீர்மையுற வேண்டும்.

உனக்கு வாய்த்த அறிவை நேரிய முறையில் கூர்மையாகப் பயன்படுத்து. அதனால், சீரிய நிலைமை செழித்து வரும்.

உத்தமக் கவிஞனாய் உயர்ந்து கொள்ளுக; சித்தத்தைக் கெடுத்துச் சீரழியாதே என்பது கருத்து.

நேரிசை ஆசிரியப்பா

வலமழு வுயரிய நலமலி கங்கை
நதிதலை சேர்ந்த நற்க ருணைக்கடல்
முகந்துல(கு) உவப்ப உகந்த மாணிக்க
வாசகன் எனும்ஒரு மாமழை பொழிந்த
5 திருவா சகம்எனும் பெருநீர் ஒழுகி,
ஓதுவார் மனம்எனும் ஒண்குளம் புகுந்து,
நாவெனும் மதகில் நடந்து, கேட்போர்
செவிஎனும் மடையில் செவ்விதிற் செல்லா
உளம்எனும் நிலம்புக ஊன்றிய அன்பாம்
10 வித்தில் சிவம்எனும் மென்முளை தோன்றி
வளர்ந்து கருணை மலர்ந்து
விளங்குறு முத்தி மெய்ப்பயன் தருமே. - நால்வர் நான்மணிமாலை 16

தெய்வக் கடலிலிருந்து முகந்து மாணிக்கவாசகன் என்னும் கார்மேகம் திருவாசகம் என்னும் திவ்விய மழையைப் பொழிந்தது; அது உலகம் உய்யப் பரவியுள்ளது என உருவகித்து வந்திருக்கும் இந்த அருமைக் கவியை உரிமையுடன் ஊன்றியுணர்ந்து பொருள் நிலைகளை ஓர்ந்து தெருள் நலங்களைத் தேர்ந்து கொள்க என்றும், புனிதக் கவிஞரிடமிருந்து விளைந்து வருகின்ற இனிய கவிகள் மனிதக் குலம் இன்புற அமுத தாரைகளாய் மருவியுள்ளன என்றும் கூறுகிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (11-Feb-19, 12:20 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 34
மேலே