வரம்

வரம்

தேர்தல்
மக்களாட்சியின்
திறவுகோல்.

கொள்கை
கோட்பாடுகளை
புறந்தள்ளிவிட்டு
தேசிய கட்சிகள்
விரித்த கூட்டணிக்
குடைகளில்
தஞ்சம்
புகும்
மாநிலக் கட்சிகள்
மறந்ததும்
மறைத்ததும்
எவற்றை?

தேர்தலுக்கு
முன்
கொள்கை
முழக்கமிடும்
ஏழைப் பங்காளர்கள்
நாற்காலிகளில்
அமர்ந்தவுடன்
ஏழைகளை
பரம ஏழைகளாக்கி
பணக்காரர்களை
பரம்பரை
பணக்காரர்களாக்கி
விட்டதை எடுத்து
எடுத்ததை விட்டு
கணக்கை நேர்
செய்துகொள்கின்றனர்.

வாக்குவேட்டைக்காக
எதிரெதிர்
சமயங்களை
சாதிகளை
மோதவிட்டு
பரமானந்தம்
அடைகின்றனர்.

அடுத்து வரும்
காலங்களில்
தேடாமல்
கிடைக்கும்
புதையலுக்காக
அதிபர்கள்
எதிரெதிர் கூட்டணிகளுக்கு
பாகுபாடின்றி
பஞ்சமில்லாமல்
வாரியிறைக்கிறார்கள்.
வாழ்க தாராள மயம்!

பாவம்
தேர்தல் ஆணையம்.
இதுவரை ஒரே ஒரு
தேர்தலில் கூட
வென்றதே இல்லை.

வாக்குச்சீட்டு
என்றாலும்
வாக்கு இயந்திரம்
என்றாலும்
கிழிபடுபவர்கள்
இது மட்டும்.

ஒப்பந்ததாரர்களிடம்
துல்லியமான
ஒப்பந்தம்.
எதிர்கட்சிகளை
வீழ்த்துவதில்
கணிணியை மிஞ்சும்
ஆளுமை.
இயற்கை ஆர்வலர்களை
சிறையில் அடைப்பதில்
பெருமிதம்.
எழுத்துரிமைக்காக
போராடியவர்களை
சுட்டு வீழ்த்தியதில் சுகம்.
வயலில் வாழவேண்டியவர்களுக்கு
வீதியே விதி...
கயிறே துணை.
இரவில் அல்ல
பகலிலேயே
பெண்கள்
நடமாடிட
தயக்கம்.
இளைஞர்களின்
இன்றைய பொழுதுகள்
களவு...
நாளைய பொழுதுகள்
அர்ப்பணிப்பு.

கையிடம்
கைகளையும்
காவிகளிடம்
சாவிகளையும்
மாறிமாறி
பந்தாடப்படும்
தேசம்
மனிதர்களுக்கு
கிட்டுவதேயில்லை.

இதோ
இன்னொரு
தேர்தல் திருவிழா.

கூட்டணிகள்
தேர்தல் அறிக்கைகள்
முழக்கங்கள்
சூறாவளி பயணங்கள்
வசைபாடுகள்
கற்றைகள் விநியோகம்
தேர்தல் ஆணையத்தின்
வழக்குப் பதிவுகள்
ஆட்சி மாற்றம்
அய்யோ
பார்த்து பார்த்து
நூலாகப் போய்விட்டது.

மாற்றம் மாறாதது
என்பது
மக்களுக்கு
எப்பொழுதும்
ஏமாற்றமே.

மாற்றத்திற்காக
ஒரே ஒருமுறை
இவர்களை
மக்கள்
வாங்க முடிந்தால்
வாங்க முடிந்தால்
தேசம்
மக்களுக்கே.

- சாமி எழிலன்

எழுதியவர் : சாமி எழிலன் (11-Feb-19, 6:49 pm)
சேர்த்தது : Saami Ezhilan
Tanglish : varam
பார்வை : 57

மேலே