நின்று திகழும் நிலையால் மகப்பேறே என்றும் பெரும்பேறு - மக்கட் பேறு, தருமதீபிகை 62

நேரிசை வெண்பா

பெறப்படுவ யாவுமே பேறெனினும் பேறென்(று)
உறப்பெறுவ மக்கட்பே(று) ஒன்றே - சிறப்பாக
நின்று திகழும் நிலையால் மகப்பேறே
என்றும் பெரும்பே(று) இனிது. 62

- மக்கட் பேறு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

மனிதன் விரும்பிப் பெறத்தக்க பொருள்கள் பலவும் பேறெனினும், எவற்றினும் மக்கட்பேறே தலைசிறந்தது; அதுவே நிலையான இனிய பெருஞ் செல்வம் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

பேறு - செல்வம், புகழ், ஊதியம்; பெறப்படுவது பேறு எனப் பேர் பெற்று வந்தது. அரும்பெறலான அரிய பொருளையே பெரும்பாலும் இது குறித்து வரும். மக்கட்பேறு, முத்திப்பேறு எனச் சிறப்பாகச் சேர்ந்து வருதலால் அதன் கருத்தும் குறிப்பும் காணலாகும்.

இவ்வுலகில் உரிமையோடு ஒருவன் உவந்து பெறத்தக்க உயர்ந்த பொருள் மக்களே ஆகலின், ‘பேறு என்று உறப்பெறுவ மக்கட் பேறு ஒன்றே’ என உறுதியுணர வந்தது.

பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த
மக்கட்பே(று) அல்ல பிற. 61 புதல்வரைப் பெறுதல்

என்ற பொய்யா மொழியின் பொருள் நிலையும் அறிக.

ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்
மக்கட் பேற்றிற் பெறும்பே(று) இல்லை. - (முதுமொழிக் காஞ்சி

மக்களின் ஒண்மையவாய்ச் சான்ற பொருள்இல்லை. 56 நான்மணிக்கடிகை

நன்மக்களைப் பெறுதல் நங்கையர்க்கு அருமை
கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)

சூழிநீண் முகத்தன துளைக்கைம் மாவொடு
மாழைநீண் மணியிவை யெளிய மாண்பினால்
வாழுநீர் மக்களைப் பெறுதன் மாதரார்க்
காழிநீர் வையகத் தரிய தாவதே. 415 சூளாமணி, மந்திரசாலைச் சருக்கம் 177

விரிகடல் அமிழ்தமும் வேலை ஞாலமும்
செருமுகத் தழலுமிழ் சிறுகண் யானையும்
எரிமணிக் குப்பையும் எளிதின் எய்தலாம்
அருமகப் பெறுதல்மற் றரிய தென்பவே. 13 நகர் நீங்கு படலம், நைடதம்

மக்கட்பேற்றின் மகிமையைக் குறித்து நூல்கள் பல இவ்வாறு வியந்து கூறியுள்ளன. எல்லாச் செல்வங்களுக்கும் உயிராதாரமாயுள்ளமையால் பிள்ளைப்பேறு யாண்டும் பெருமையாகப் போற்றப் படுகின்றது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (11-Feb-19, 7:23 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 56

மேலே