அழகென்றுரைக்கும் அமிர்துடையார் யாண்டும் தொழநின்று உயர்வர் - அழகு, தருமதீபிகை 72

நேரிசை வெண்பா

வேண்டார்க்கும் வேண்டினர்க்கும் வேறுபா(டு) ஒன்றின்றிக்
காண்டோறும் இன்பம் கனிதலால் - பூண்ட
அழகென்(று) உரைக்கும் அமிர்துடையார் யாண்டும்
தொழநின்(று) உயர்வர் தொடர்ந்து. 72

- அழகு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

விரும்பினும் விரும்பாவிடினும் காண்பவர் எவர்க்கும் அழகு இன்பம் தருதலால் அந்த அமுதினை யுடையவர் எங்கும் உயர்ந்து விளங்குவர் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

அன்புரிமையும் நண்பும் இலராயினும் கண்டவரெவரும் காதல் கொண்டு களித்து நிற்கும்படி அழகு அளித்து வருதலால் ’காண்தோறும் இன்பம் கனியும்' என வந்தது.

அதன் இயல்பும் உயர்வும் கருதி அழகை அமிர்தம் என்றது. அமிர்தம் உண்டார்க்கு இன்பம் தருதல்போல் அழகு கண்டார்க்கு இன்பம் தரும்.

அந்தக் காட்சியின்பம் எல்லா இன்பநலங்களையும் மறந்து எவரும் தன்னை விழைந்து நோக்கும்படியான மாட்சிமையுடையது.

கலித்துறை
(மா விளம் விளம் விளம் மா)

அடல டர்ந்துயர் தானவர் அலையிடை தவழும்
கடல்க டைந்துகொள் அமுதமும் கடையென இகழ்ந்தே
உடல மைந்தெழு மோகினி அழகினை உவந்து
படல மைந்தனர் அழகெதிர் படாதவர் எவரே.

அழகின் அதிசய மகிமை இதனால் இனிது புலனாம்.

இங்ஙனம் எல்லாரையும் தன் வசப்படுத்தும் அழகினையுடையார் உலகம் மகிழ உயர்ந்து திகழ்வராதலால், தொழ நின்று உயர்வர் தொடர்ந்து' என நேர்ந்தார்.

தன்னையுடையானைத் தொழுதகு தன்மையனாய் அழகு ஆக்கியருளும் என்பது இதனால் கூறப்பட்டது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (11-Feb-19, 7:27 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 21
மேலே