ஜகதீஷ் சந்திர போஸை ஊக்குவித்த நிவேதிதா தேவி

பாக்யா 1-2-2019 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள எட்டாம் ஆண்டு நாற்பத்தி எட்டாம் கட்டுரை : அத்தியாயம் 412

.﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽அறிவியல் துளிகள் – 412

ஜகதீஷ் சந்திர போஸை ஊக்குவித்த நிவேதிதா தேவி!

ச.நாகராஜன்

மிகச் சிறந்த இந்திய விஞ்ஞானியான ஜகதீஷ் சந்திர போஸ் (30-11-1858 – 23-11-1937) தனது கண்டுபிடிப்பை உலகிற்கு நிரூபிப்பதற்குள் பட்ட கஷ்டங்கள் கொஞ்சநஞ்சமல்ல.

இந்தியர்களுக்கு ஒன்றும் தெரியாது என்பதை நிரூபிக்கத் துடித்த பிரிட்டிஷார் அவரை அங்கீகரிக்கவே இல்லை என்பது ஒரு புறமிருக்க அவரை அவமானப்படுத்தினர்; தொல்லை கொடுத்தனர்.

இதிலிருந்தெல்லாம் அவர் மீண்டு வர உத்வேகமூட்டியவர் சகோதரி நிவேதிதை என்பது பலருக்கும் தெரியாது.


மார்கரெட் எலிஜபத் நோபிள் 1867ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 28ஆம் தேதியன்று வட அயர்லாந்தில் ஒரு ஸ்காட் குடும்பத்தில் பிறந்தார். அவரது பத்து வயதிலேயே தந்தையை இழந்தார். படிப்பை முடித்த பின்னர் ஆசிரியையாக உத்யோகம் பார்க்க ஆரம்பித்தார். 1895ஆம் ஆண்டில் அவரது 28ஆம் வயதில் ஸ்வாமி விவேகானந்தரை அவர் சந்தித்தார்; அதிலிருந்து அவர் வாழ்க்கைப் போக்கே மாறிப் போனது. 1898ஆம் ஆண்டு ஜனவரியில் அவர் இந்தியா வந்தார். அவருக்கு நிவேதிதை என்ற புதிய பெயரை ஸ்வாமி விவேகானந்தர் சூட்டினார்.

இந்தியருக்கு புதிய உத்வேகம் ஊட்ட வேண்டிய அவசியத்தை உணர்ந்த அவர் பாரதியார், அரவிந்தர் உள்ளிட்ட பலருக்கும் உத்வேகம் ஊட்டினார்.

ஜகதீஷ் சந்திர போஸ் ஒரு சிறந்த விஞ்ஞானி என்பதை அவர் ஆரம்பத்திலேயே நன்கு உணர்ந்து கொண்டார்.

ஆயிரத்தி எண்ணூற்றுத் தொண்ணூறுகளிலேயே ஜகதீஷ் சந்திர போஸ் ரேடியோ டிரான்ஸ்மிஷன் பற்றிய அரிய கண்டுபிடிப்பைக் கண்டார். அத்துடன் தாவரங்கள் வலியை உணரும் சக்தி கொண்டவை என்று அவர் கூறிய போது யாரும் அவரை நம்பத் தயாராக இல்லை.

ஆனால் நிவேதிதை அவரிடமிருந்த அபாரமான அறிவியல் அறிவை நன்கு கண்டு கொண்டு அவரை ஊக்குவித்ததோடு, அவருக்கு பண உதவியும் தங்க இடமும் கூடத் தந்தார்.

1899ஆம் ஆண்டில் பாரிஸில் விவேகானந்தரும் நிவேதிதையும் இருந்த போது ஜகதீஷ் சந்திர போஸ் அவர்களைச் சந்தித்தார்.

போஸும் அவரது மனைவி அபலாவும் விம்பிள்டனில் இருந்த நிவேதிதையின் வீட்டில் 1900ஆம் ஆண்டு தங்கி இருந்தனர்; திடீரென்று அங்கு போஸ் நோய்வாய்ப்படவே நிவேதிதையின் தாயார் மேரி நோபிள் தான் அவருக்குத் தேவையான உதவிகளை ஒரு மாத காலம் அவர் நோயிலிருந்து குணமடையும் வரை செய்தார்.

இங்கிலாந்தில் இந்தியர்களை மதிக்காத ஒரு பெரும் ராட்சஸ பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் மோத வேண்டி இருப்பதை உணர்ந்த போஸ் மிகவும் மனம் நொந்து போனார். ரவீந்திர நாத் தாகூர் அவரை மிகவும் போற்றினார்.

லண்டனிலிருந்து 1900ஆம் ஆண்டு லண்டனிலிருந்து தனது மன வேதனையை ரவீந்திர நாத் தாகூருக்கு ஒரு கடிதம் மூலமாகத் தெரிவித்தார்,இப்படி : “ நீங்கள் நான் எதிர்கொள்ள வேண்டிய கஷ்டங்களை அறிய மாட்டீர்கள். உங்களால் கற்பனையே செய்ய முடியாது. ‘தாவர உணர்வு’ பற்றிய எனது கட்டுரையை சென்ற மே மாதம் ராயல் சொஸைடியில் வெளியிடப்படுவதை வாலர் மற்றும் சாண்டர்ஸன் ஆகிய இருவரும் தடுத்து நிறுத்தினர். ஆனால் வாலர் அதைத் தனது பெயரில் நவம்பர் மாதம் வெளியிட்டுக் கொண்டார். எனக்கு இத்தன நாள் வரை அது தெரியாமலேயே இருந்தது. நான் மிகவும் நொந்து போயிருக்கிறேன். பாரதபூமியின் தூசியைத் தொட்டு வாழ்க்கையின் உற்சாகத்தை மீண்டும் பெற இப்போது இந்தியா வர விரும்புகிறேன்.”

இப்படி மனம் நொந்திருந்த போஸின் மன நிலையை நன்கு அறிந்து கொண்டு நிவேதிதை, ஆய்வு லாபரட்டரியை அமைக்க அவருக்கு உதவி செய்தார். பிரபல வயலின் மேதை ஓல் புல் -இன் மனைவியும் விவேகானந்தரின் சிஷ்யையுமான சாரா சாப்மன் புல் தந்த நன்கொடை மூலம் இந்த ஆய்வுக் கூடம் அமைக்கப்பட்டது. நிவேதிதா போஸை விட ஒன்பது வயது சிறியவர். என்றாலும் கூட 1911இல் அவர் இறக்கும் வரை போஸுக்கு உதவத் தவறவில்லை.

மிகப் பெரிய விஞ்ஞானியாக இருந்த போதிலும் கூட ஸயின்ஸ் ஃபிக் ஷன் எனப்படும் அறிவியல் புனைகதைகளை எழுதுவதிலும் அவருக்கு ஆர்வம் இருந்தது. வங்காள மொழியில் அவர் எழுதிய ‘போலடாக் தூஃபான்’ என்ற அவரது பிரபலமான கதை எப்படி ஒரு பாட்டிலில் வைக்கப்பட்டிருந்த தலைக்குத் தடவிக் கொள்ளும் எண்ணெய் ஒரு சூறாவளியைத் தடுத்து நிறுத்தியது என்பதை சுவைபடச் சொல்கிறது. எண்ணெயானது புறப்பரப்பு விசையை (Surface tension) மாற்றி நீரைத் தக்க வைத்துக் கொள்கிறது என்பது தான் கதையின் அடிப்படையான கரு. ‘நிருத்தேஷர் கஹானி’ என்ற அவரது நாவல் தான் முதன் முதலாக வங்க மொழியில் எழுதப்பட்ட ஸயின்ஸ் ஃபிக்‌ஷன் நாவல்!

இந்திய துணைக்கண்டத்திலிருந்து விஞ்ஞானக் கண்டுபிடிப்பிற்காக முதன் முதலாக ஒரு பேடண்டைப் பெற்றவர் அவரே. பிரபல விஞ்ஞானிகளான டெஸ்லா, மார்கோனி, போபாவ் ஆகியோர்களுக்குச் சமமாக இந்த சாதனையை அவர் நிகழ்த்திக் காட்டினார். எவ்வளவோ பேர் தடுத்தும் கூட அவர் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. 1920இல் ராயல் சொஸைடிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு அதில் அறிவியலில் கௌரவிக்கப்பட்ட முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார்.

தாவரங்களுக்கு உணர்ச்சி உண்டு என்பதைக் காட்ட க்ரஸ்கோகிராப் (Crescograph) என்ற கருவியை அவர் வடிவமைத்தார். தாவரத்தின் வளர்ச்சியை மிக நுட்பமாக, நுணுக்கமாக இது காட்டும். அதாவது ஒரு லட்சத்தில் ஒரு பங்கு என்ற அளவிற்கு மிக நுண்ணிய அளவில் தாவரத்தின் வளர்ச்சியை இது காட்டியதால் உலகமே வியந்து அவரை ஆச்சரியத்துடன் பார்த்தது. அவரது கருவி தாவரம் அசையும் போது அதுவும் அசைந்து துல்லியமாக தாவர இயக்கத்தைக் காட்டியது.

எதையும் நேரில் பார்க்க ஆசைப்படும் பெர்னார்ட் ஷா ஒரு முறை அவரது சோதனையைப் பார்க்க வந்தார். ப்ரோமைட் கரைசலில் முட்டைகோஸ் இலையைப் போடும் போது அந்த விஷக் கரைசலில் அது துடிதுடிக்க ஆரம்பித்ததைப் பார்த்த பெர்னார்ட் ஷா அந்த பயங்கரத்தைப் பார்க்க முடியாமல் வேதனைப் பட்டார்; சோதனையை எண்ணி ஆச்சரியப்பட்டார்.

போஸின் வாழ்க்கை இந்திய இளைஞர்களுக்கு உத்வேகம் தரும் ஒரு உன்னத வாழ்க்கை. அவரது பெருமைக்குத் தக்க அளவில் அவரை இந்திய நாடு இன்னும் அதிக அளவில் போற்றவில்லை என்பது வருந்தத் தக்க ஒன்றாகும்.


அறிவியல் அறிஞர் வாழ்வில் ..

காட்டு வளத்தைக் காக்கும் சுற்றுப்புறச் சூழல் ஆர்வலரான ஜேன் குட் ஆல் பிரிட்டனைச் சேர்ந்த ஒரு பெண்மணி.(Jane Goodall – பிறப்பு :3-4-1934 – இப்போது வயது 84). சிம்பன்ஸிகளைப் பற்றி முழுதுமாக ஆராய்ந்து இவர் சேகரித்திருக்கும் தகவல்கள் அனைவரையும் வியக்க வைக்கும். 1957ஆம் ஆண்டு ஆப்பிரிக்காவிற்குச் சென்ற அவர் ஆராய்ச்சியாளராகச் சென்றார்;திரும்பி வந்த போது காடுகளையும் விலங்குகளையும் பாதுகாக்க வேண்டும் என்ற சுற்றுப்புறச் சூழ்நிலை ஆர்வலராக வந்தார். மனிதனுக்கு மட்டுமே கருவிகளை உபயோகப்படுத்தத் தெரியும் என்பது தவறான கருத்து என்பதை அவர் ஆணித்தரமாகச் சொல்கிறார். ஒரு முறை ஒரு சிம்பன்ஸியை அவர் பார்த்துக் கொண்டிருந்த போது அது ஒரு மரக்கொப்பை உடைத்து அதை வைத்து இலைகளை ஒவ்வொன்றாக சீவி எடுத்துக் கொண்டிருந்தது. ஆக சிம்பன்ஸிகளுக்கும் கருவியைச் செய்து உபயோகப்படுத்தத் தெரியும் என்பதை அவர் கண்டார்.மேலும் மேலும் ஆராய்ந்து சிம்பன்ஸிகளைப் பற்றிய வியக்க வைக்கும் சுவாரசியமான அனைத்து விவரங்களையும் உலகிற்கு எடுத்துரைத்தார். சிம்பன்ஸிகளுக்காக ஒரு நிறுவனத்தையே தான் நிறுவியதோடு அவற்றைப் பராமரிக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தி வருகிறார். இதற்காகத் தொடர் சுற்றுப் பயணம் செய்யும் அவர் வருடத்திற்கு 300 நாட்கள் பயணத்தில் இருப்பதாகவும் கடந்த 20 ஆண்டுகளில் மூன்று நாட்கள் தொடர்ந்து ஒரே படுக்கையில் தான் படுத்ததில்லை என்றும் சொல்கிறார். In the Shadow of Man என்ற அவரது நூல் உலகளாவிய அளவில் பேசப்படும் ஒரு சிறந்த நூலாகி விட்டது. இந்த முதிய வயதிலும் அவர் வனப் பாதுகாப்பில் காட்டும் ஆர்வம் அனைவருக்கும் உத்வேகம் ஊட்டும் ஒன்று!

****

Share this:

எழுதியவர் : (11-Feb-19, 8:18 pm)
பார்வை : 18

மேலே