மூளை ஆற்றலைக் கூட்டச் சில வழிகள்

திருநெல்வேலியிலிருந்து வெளிவரும் ஹெல்த்கேர் மாத இதழில் ஜனவரி 2019 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

எளிதான வழிகள் மூலம் மூளை ஆற்றலை மேம்படுத்துங்கள்

மூளை ஆற்றலைக் கூட்டச் சில வழிகள்!

ச.நாகராஜன்


மூளையைப் பற்றி அறிவியல் விஞ்ஞானிகள் ஆராய ஆராய அவர்களுக்கு வியப்பு தான் மேலோங்குகிறது. நூறு பில்லியன் (ஒரு பில்லியன் என்றால் நூறு கோடி) இணைப்புகள் உள்ளன என்று கூறி அவை எப்படி ஒன்றுடன் ஒன்று தகவல்களைப் பரிமாறிக் கொள்கின்றன என்பது பிரமிக்க வைக்கும் ஒரு விஷயம் என்று அவர்கள் கூறுகின்றனர். இந்த மூளை ஆற்றலை மேம்படுத்த வழிகள் உண்டா என்ற கேள்விக்கு உண்டு என்றே அறிவியல் பதிலைத் தருகிறது. சில வழிகளை இங்குக் காண்போம்: முதலாவது எளிய வழி : மூளை ஆற்றலை மேம்படுத்துவது எப்படி என்பது சம்பந்தமான ஏராளமான புத்தகங்கள் வெளியாகியுள்ளன; கட்டுரைகளும் ஆயிரக் கணக்கில் படிக்க உள்ளன. பணம் கொடுத்து வாங்க முடிந்தோர் இவற்றை வாங்கிப் படித்து முன்னேறலாம்; இல்லை என்றாலும் கவலை இல்லை; அவ்வப்பொழுது நூலகங்கள் சென்று இந்தப் புத்தகங்களைப் படிக்கலாம்; அல்லது இணையதளத்தில் உள்ள ஏராளமான வலைத் தளங்களில் பல ஆக்கபூர்வமான யோசனைகளைப் படிக்கலாம்; அவற்றைக் கடைப்பிடிக்கலாம்.

இரண்டாவது வழி: ஸ்பீட் ரீடிங். வேகமாகப் படிப்பது, குறிப்புகளை உடனுக்குடன் எடுப்பது என்ற அணுகுமுறை உங்களுக்கு இரட்டிப்பு மடங்கு அறிவைத் தரும். மூன்றாவது வழி : இது யோகா வழி. யோகம் கூறும் சுவாசப் பயிற்சியைக் கற்றுக் கொண்டால் மூளை ஆற்றல் மேம்படும். எப்படி? ஆழ்ந்து சுவாசிப்பதால் இரத்தத்தில் ஆக்ஸிஜன் அதிகமாகிறது; அதுவே மூளைக்கு அதிக ஆக்ஸிஜனைத் தருகிறது.மூக்கினால் ஆழ்ந்து சுவாசித்தால் உங்களின் உதரவிதானம் நன்கு விரிவு படுவதை நீங்களே உணர முடியும். அதன் மூலம் அதிகமாக சுவாசக் காற்று உங்கள் நுரையீரலைச் சென்றடைவதையும் நீங்கள் அறிய முடியும். பலமுறை இப்படி ஆழ்ந்து சுவாசிப்பதால் மனத்தில் ஏற்பட்டுள்ள இறுக்கம் போய் ஒரு ஓய்வு உணர்வு உங்களுக்கு ஏற்படும். இந்த அருமையான உணர்வு உங்கள் மூளையைத் திறனுடன் சிந்திக்க வைக்கும். நல்ல சிந்திக்கும் ஆற்றலே முன்னேற்றத்திற்கு வழி அல்லவா! அதைப் பெற முடியும்! அடுத்து நான்காவது வழி யோகா கூறும் தியான முறை : கண்களை மூடிக் கொண்டு உங்கள் சுவாசத்தைக் கவனிப்பது நல்ல ஒரு வழி முறை. தசைகளை இறுக்கி விட்டு அதை தளர்ச்சி அடையச் செய்வதும் ஒரு நல்ல வழிமுறை. மனம் அங்கும் இங்கும் அலை பாய்ந்தால் மீண்டும் அதை உங்கள் சுவாசத்தை நோக்கிக் கவனிக்க வையுங்கள்.கவன சக்தியும், ஒருமுகக் குவிப்பும் அதிகமாக இதுவே நல்ல வழிமுறை! ஐந்து முதல் பத்து நிமிடங்கள் தினமும் இதைச் செய்தால் மனம் தெளிவாகும். பல பிரச்சினைகளுக்கு அறிவார்ந்த தெளிவான முடிவுகளைக் காண முடியும்.



அடுத்து ஐந்தாவது வழி : எப்படி உட்கார்கிறோம் என்பதும் முக்கியம் தான்! உடலின் நிலை உங்களின் மூளை ஆற்றலை – சிந்திக்கும் திறனை நிர்ணயிக்கிறது. உதாரணத்திற்கு உங்களை நீங்களே ஒரு சிறிய சோதனை செய்து பார்த்துக் கொள்ளலாம். கடினமான ஒரு கணக்கை எடுத்துக் கொண்டு கூரையையும், ஜன்னலின் வழியாக வெளிப்புறங்களையும் பார்த்துக் கொண்டு, படுத்துக் கொண்டு செய்து பாருங்கள்; அந்தக் கணக்கு முடியாது; ஆனால் அதே சமயம் நேராக நிமிர்ந்து உட்கார்ந்து கண்களைக் கூர்மையாக அதன் மீது பதித்துக் கொண்டு கணக்கை ஆரம்பியுங்கள். எளிதில் முடிந்து விடும். இப்படி உடல் நிலைப்பாடு எதிலும் முக்கிய அங்கம் வகிக்கிறது. ஆம், பாடி லாங்க்வேஜ் முக்கியமே! அடுத்து ஆறாவது வழி: Phosphotidyl Serine (PS) மீது கவனம் செலுத்துங்கள். இந்தத் துணை மருந்து கற்கும் ஆற்றலை அதிகப்படுத்துவதாக மருத்துவ சோதனைகளும் ஆய்வுகளும் தெரிவிக்கின்றன். நினைவாற்றல் குறைப்பாடுகளையும் இது நீக்குகிறது. பக்க விளைவுகள் ஏதும் ஏற்படாது. ஆகவே இதைப் பயன்படுத்தலாம். அடுத்து ஏழாவது வழி: வல்லாரையைச் சிறிதளவு அன்றாடம் சாப்பிடலாம். இந்த அரிய மூலிகை மூளை ஆற்றலை மேம்படுத்துகிறது; நினைவாற்றலை அதிகரிக்க வைக்கிறது. இது எந்த ஆயுர்வேத மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். பிரம்மி என்று சம்ஸ்கிருதப் பெயரைக் கொண்ட இது பிரம்மி டானிக்காகவும் மாத்திரைகளாகவும் கிடைக்கிறது. வல்லாரை சூட்டைக் கிளப்பும். ஆகவே ஒரு ஆயுர்வேத மருத்துவரை அணுகி எப்படி எப்போது எந்த அளவில் சாப்பிடலாம் என்பதைக் கலந்து ஆலோசித்து இந்த அரிய மூலிகையைப் பயன்படுத்துங்கள். அடுத்து எட்டாவது வழி: சிந்தனை ஆற்றலை மேம்படுத்தும் நல்ல பழக்க வழக்கங்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். ரூபிக் க்யூப் (Rubik’s Cube) போன்ற சில பிரச்சினை தீர்க்கும் விளையாட்டுக்களை சில வாரங்கள் பழகிப் பாருங்கள். எதையும் ஒரு புதிய அணுகுமுறையுடன் பார்க்க இந்த சிந்தனை பழக்கங்கள் வழி வகுக்கும். பழக்கத்திற்கு உள்ள அபார பலத்தின் காரணமாக நாளடைவில் பிரச்சினைகளைத் தீர்க்கும் உங்கள் அணுகுமுறையே நல்ல முறையில் மாறி விடும். அடுத்து ஒன்பதாவது வழி :டெட் டைம் அல்லது வேஸ்ட் டைம் எனப்படும் (Dead Time and Waste time) பயன்படுத்தாத நேரம் பற்றிக் கவனியுங்கள். காரில் அல்லது பஸ்ஸில் செய்யும் போது நீங்கள் சும்மா உட்கார்ந்திருப்பீர்கள். மணிக்கணக்காக டாக்டரின் டிஸ்பென்ஸரியில், அரசு அலுவலங்களில், வங்கியில் இன்னும் இது போன்ற இதர இடங்களில் ஒன்றுமே செய்யாமல் சும்மா இருக்கும் நேரங்களைக் கணக்கில் எடுங்கள். குறைந்த பட்சம் ஒரு வருடத்தில் 200 மணி நேரம் இப்படிச் செலவிடப்படுவதை நீங்கள் அறிவீர்கள். இதை எப்படிப் பயன்படுத்துவது என்பதைத் திட்டமிடுங்கள். புத்தகம் படிப்பது அல்லது புத்தகத்தை ஆடியோ டேப்பில் கேட்பது என்பதிலிருந்து நூற்றுக்கணக்கான பயனுள்ள வழிகளை நீங்களே தொகுக்கலாம்; அதைப் பயன்படுத்தலாம்.


அடுத்து பத்தாவது வழி: புதிதாக ஒரு மொழியைக் கற்பது. இது வயதாகும் போது ஏற்படும் மூளை ஆற்றல் குறைபாட்டை நீக்க வல்லது. புதிய பரிமாணங்களை அறிய இது வழி வகுக்கிறது. இது ஒரு நல்ல மூளைப் பயிற்சி. தமிழில் முகம் இல்லை என்று சம்ஸ்கிருதம் அறிந்தோர் சொன்னால் அதைச் சொல்ல உனக்கு வாய் இல்லை என்று நீங்கள் கூற முடியும். (இந்த இரு மொழிகளை அறிந்தால் தானே இப்படிச் சொல்ல முடியும்) ஆங்கிலத்தில் afraid. ஸ்பெயின் மொழியிலோ fear! அடுத்து பதினொன்றாவது வழி எழுதுவது. எதையும் எழுதிப் பார்ப்பது பல வழிகளில் உங்கள் மனதை மேம்படுத்துகிறது. எது முக்கியம் என்பதை இது புலப்படுத்துவதோடு மட்டுமின்றி மீண்டும் நினைவிற்குக் கொண்டுவருவதை எளிதாக்கவும் எழுதும் முறை பயன்படுகிறது. படைப்பாற்றல் திறனையும் இது ஊக்குவிக்கிறது. டயரி எழுதுவது, நல்ல பல விஷயங்களைக் குறிப்புகளாக எழுதி வைத்துக் கொள்வது, கவிதை எழுதல் அல்லது பிடித்தமான கவிஞர்களின் கவிதைகளைத் தொகுத்தல் என்று இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். செலவே இல்லாத எளிய இந்த வழிமுறைகளைக் கடைப்பிடிக்க ஆரம்பியுங்கள்; ஒரு சில மாதங்கள் சென்ற பிறகு உங்களை நீங்களே மதிப்பீடு செய்யுங்கள். எப்படி மூளைத் திறனைக் கூட்டியுள்ளீர்கள் என்பது உங்களுக்கே தெரியவரும். உங்களுடன் பழகும் இதர நண்பர், உறவினர், குடும்பத்தினர் உங்களின் ஆற்றல் திறனை வியப்பது ஒரு போனஸும் கூட! *****

Share this:

எழுதியவர் : (11-Feb-19, 8:44 pm)
பார்வை : 95

சிறந்த கட்டுரைகள்

மேலே