நானும் சென்னைப் புத்தகக் காட்சியும்

நவீன விருட்சம்
அழகியசிங்கர்

காலச்சுவடிலிருந்து ஞானக்கூத்தன் கவிதைகள் முழுத் தொகுதி வாங்கியபின் இன்னும் சில புத்தகங்களையும் காலச்சுவடில் வாங்கினேன். சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை என்ற அம்பையின் சிறுகதைத் தொகுப்பு. இன்னொரு புத்தகம் செல்லம்மாள் நினைவுக் குறிப்புகள் 1993. மூன்றாவதாக நான் வாங்கியப் புத்தகம் பா வெங்கடேசனின் வாராணசி (மயக்க நிலைத் தோற்றங்கள்) என்ற புத்தகம்.

இங்கு ஒரு புத்தகத்தைப் பற்றி குறிப்பிடுவது மேம்போக்கான நிலையில்தான். ஒரு புத்தகத்தைப் புரட்டிப் பார்த்துவிட்டு தோன்றுவதை எழுதுகிறேன். ஆனால் ஒரு புத்தகத்தை முழுவதும் படித்துவிட்டு என்ன தோன்றுகிறதோ அதை எழுத வேண்டும். புத்தகம் போதனையைப் புகட்டுகிறதா? இல்லை எழுதுபவரின் மனநிலையைப் பிரதிபலிக்கிறது.

கதைகளும் நானும் என்ற தலைப்பில் அம்பை இப்படி எழுதி உள்ளார்: üமேகங்கள் பொங்கி எழுந்து எழுதச் சொன்னதாயும் காலையில் சன்னலைத் திறந்ததும் பறவைகளாய்க் கதைகள் வந்ததாயும் சில எழுத்தாளர்கள் கூறியிருக்கிறார்கள். அவர்கள் ஆண் எழுத்தாளர்கள் என்பது வேறு விஷயம். இப்படிப்பட்ட அற்புதங்கள் எதுவும் எனக்கு நேராவிட்டாலும் உள்ளிருந்து புற உலகைப் பார்ப்பதற்கான சன்னல் எனும் திறப்பு தொடர்ந்து என் வாழ்க்கையின் முக்கிய அங்கமாக இருந்து வருகிறது,ý என்று கூறுகிறார். இத் தொகுப்பில் தொண்டை புடைத்த காகம் ஒன்று என்ற முதல் கதையைப் படித்து முடித்துவிட்டேன். எந்தவித சலனத்தையும் பிரதிபலிக்காமல் எழுதுகிற நடை அம்பைக்கு. முழுத் தொகுப்பு படிக்க வேண்டும். 168 பக்கங்கள் கொண்ட இப் புத்தகம் விலை ரூ.195.

இன்னொரு புத்தகம் பா வெங்கடேசனின் வாராணசி. இதற்கு மயக்க நிலைத் தோற்றங்கள் என்றும் எழுதியிருக்கிறார். 192 பக்கங்கள் கொண்ட இப் புதினத்தையும் வாங்கினேன். பொதுவாக பா வெங்கடேசன் நூல்களை வாங்கி வைத்துவிடுவேன். ஆனால் போருக்குத் தயாராவதுபோல் தயாராக வேண்டும், அவர் புத்தகங்களைப் படிக்க. இந்த அனுபவத்தை கோணங்கியும் ஏற்படுத்துகிறார்.

இந்த நாவலில் எந்த இடத்திலும் பாராவாகப் பிரிக்கப்படவில்லை. அப்படியே ஓட்டமாக ஓடுகிறது நாவல். எங்காவது முற்றுப்புள்ளி இருக்கிறதா என்று பார்த்தால் அதுவும் தெரியவில்லை. கமா மட்டும் அங்கங்கே தென்படுகிறது.

பக்கம் 21ல் இப்படி எழுதியிருக்கிறார் :
'...அவள் இல்லாத வாராணசி அல்லது வாராணசி இல்லாத அவள் அல்லது ஒரு புள்ளியில் அவளும் வாராணசியுமேயில்லாத ஒரு வெற்றுத்தாளாக லோத்தர் உத்தேசிக்கும் பயிற்சியின் கீழ் அவரால் அந்தப் புகைப்படத்தை ஒரு போதும் பார்க்கவே முடியாது,..' இப்படியே போய்க்கொண்டிருக்கிறது. 192 பக்கங்கள் கொண்ட இப் புத்தகம் விலை ரூ.195.





மூன்றாவது புத்தகம் செல்லம்மாள் நினைவுக் குறிப்புகள் 1993. இது ஒரு வாழ்க்கை வரலாறு புத்தகம். செல்லம்மாள் என்பவர் எழுதியிருக்கிறார். இதற்கு முன்னுரை அம்பை எழுதியிருக்கிறார்.

இந்தப் புத்தகத்தின் பின் அட்டையில் இப்படி எழுதப்பட்டிருக்கிறது. 'செல்லம்மாவின் வாழ்க்கைக் குறிப்புகள் ஒரு பண்ணின் குடும்பம் குறித்த தொடர்ந்த மனத்தாங்கலனின் ஆவணம் மட்டுமல்லாமல் சிறு பெண்களாகவும் மனைவிகளாகவும் விதவைகளாகவுமுள்ள பெண்கள் எதிர்கொள்ளும் துன்பங்கள், அவமதிப்புகள், பேசமுடியாமல் ஊமையாக்கப்படும் அவலங்கள் இவற்றின் ஒலியில்லாக் கூக்குரலாகவும் இருக்கின்றன.' என்று எழுதப்பட்டிருக்கிறது. ஒரு சாதாரண பெண்மணியின் வாழ்க்கை வரலாறைப் படிக்க வேண்டுமென்று தோன்றுகிறது. 160 பக்கங்கள் கொண்ட இப் புத்தகம் விலை ரூ.180.







SHARE

எழுதியவர் : (12-Feb-19, 4:35 am)
பார்வை : 52

மேலே