காதல்

வளமான அழகிய
செம்பவள பெரும் மொட்டாய்
கதிரவனின் கிரணங்கள் தொட்டணைய,
மலர்ந்திடும் தாமரைப்பூப்போல ,
உன் கண்களிரண்டும் மலரக்கண்டேனடி,
உந்தன் காந்த கருவிழிகள் இரண்டும்
அதில் சிரித்து பேசுவதுபோல கண்டேனே!

உந்தன் விழிகளின் அழகில் மயங்கினேன் நான்
மலரின் மது உண்ட வண்டுபோல -மயக்கம்போய்
கண் விழித்தேன், உந்தன் சிற்றிடையில் என் பார்வை
பட்டுவிட , அங்கு இடையை நான் கண்டேனல்லன்
கொடிமின்னலைக்கண்டேன் , இல்லை இல்லை
வண்ண வான வில்லையல்லவோ கண்டேன் நான் ஆங்கு!

இப்படியே உன் இடையில் மயங்கி நான் மீண்டும்
பார்க்கையிலே இடையே இல்லாமல் இருந்ததே
உன்னிடையைப் பார்த்து பார்த்து என் மனமோ
கானகத்து புள்ளி மானைப்போல துள்ளி குதிக்க
சிற்றிடையாளே உன்னை நடமாடி பார்க்க
ஆசையும் வந்தது , அதற்கு ஜதி பாட நான்
இதோ உந்தன் கமலக்கண்களின் முன்னே ;
வா, வா வனிதாமணியே ஆடிடுவோமே
காதல் சரசம், இன்பம் பொங்கும் இவ்வேளையில்
இனிய இந்த காலை வேளையிலே
இந்த முல்லைமலர் தோட்டத்திலே நம் காதலுக்கு
செண்பகமே சாட்சியாய் மலர்ந்திருக்க
நம்மைப் பாத்து புன்னகைத்து.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (13-Feb-19, 9:50 am)
Tanglish : kaadhal
பார்வை : 438

மேலே