உடல்சிறியர் என்றிருக்க வேண்டா – மூதுரை 12

நேரிசை வெண்பா

மடல்பெரிது தாழை மகிழினிது கந்தம்
உடல்சிறியர் என்றிருக்க வேண்டா - கடல்பெரிது
மண்ணீரும் ஆகா(து) அதனருகே சிற்றூறல்
உண்ணீரும் ஆகி விடும். 12 – மூதுரை

பொருளுரை:

தாழம்பூ இதழ்களினால் பெரிதாயிருக்கின்றது, மகிழம்பூ இதழ்களினால் சிறிதாயிருந்தாலும் நறுமணத்தில் தாழம்பூவை விட இனிமையாக இருக்கின்றது,

கடல் பெரிதாயிருக்கிறது; ஆனாலும் அதன் நீர் உடம்பின் அழுக்கைக் கழுவுவதற்குத் தக்க நீராக ஆகாது;

அக்கடலுக்குப் பக்கத்தில் சிறு மணற்குழியில் சுரக்கும் ஊற்று நீர் குடிக்கத் தகுந்த நீருமாகும்;

அதனால், ஒருவரை உருவத்தினாலே சிறியவரென்று மதியாமல் இருக்க வேண்டாம்.

தாழை என்பது தென்னையையும் குறிக்கும் சொல்லாகும். தென்னை மடல் பெரிதாக இருப்பினும் அதற்கும் சிறிதும் மணமில்லை என்றும் பொருள் கொள்ளலாம்.

மண்ணுதல் - கழுவுதல்,

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-Feb-19, 8:25 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 84

சிறந்த கட்டுரைகள்

மேலே