இன்சொல் மகவொன்று இலனேல் அவன்வாழ்வு புன்சொல் அடையும் - மக்கட் பேறு, தருமதீபிகை 63

நேரிசை வெண்பா

தெண்டிரைசூழ் ஞாலமெலாம் சேர ஒருகுடைக்கீழ்க்
கொண்டரசாய் நின்று குலாவினும் - கண்டனைய
இன்சொல் மகவொன்(று) இலனேல் அவன்வாழ்வு
புன்சொல் அடையும் புலந்து. 63

- மக்கட் பேறு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

கடல்சூழ்ந்த உலகம் முழுவதையும் தனி அரசாளும் சக்கரவர்த்தியே ஆயினும் இனிய மழலைச் சொல் பேசி அமையும் புத்திரப்பேறு இலனாயின் அவன் வாழ்க்கை பொலிவிழந்து இழிவுறும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

தெள்ளிய அலைகளையுடைய கடலை தெண் திரை என்றது. அரச திரு மிகவும் சிறந்தது; எவரும் எளிதில் அடைய முடியாதது; அத்தகைய உயர்ந்த பேற்றைப் பெற்றுச் சிறந்த செங்கோலுடன் பெருமித நிலையில் பேரரசனாய்ப் பெருகியிருந்தாலும் பிள்ளைப்பேறு இலனாயின் அவன் எள்ளப்படுவான் என்றதனால் இப்பேற்றின் தனிமகிமை இனிது புலனாம்.

குழந்தைகளுடைய மழலைமொழி இனிமை சுரந்து எவர்க்கும் இன்பம் பயக்குமாதலால், ’கண்டு அனைய இன்சொல் மகவு" என அவற்றின் இன்பநிலை தெரியவந்தது.

அரசரெல்லாரும் அடிதொழ ஏகச் சக்கராதிபதியாய் அகிலமும் ஆளினும், புத்திரப்பேறு இல்லையானால் மலடன் என எவரும் இகழ்ந்து கூறுவர்; அதுவுமன்றி வழிமுறையே வந்து கோல் தாங்கும் குலமகன் இன்மையால் குடி குலைந்து போமாதலால், அவன் வாழ்வு ‘புலந்து புன்சொல் அடையும்' என்றார்.

பூமண்டல முழுவதும் உடையராயிருந்தும் ஒரு புதல்வன் இல்லாமையை நினைந்து எத்தனை அரசர்கள் மறுகிப் புலம்பி அரிய வேள்விகள் ஆற்றி அலமந்துள்ளனர்? தசரதன் முதலாயினோர் சரிதங்களெல்லாம் இங்கே சிந்தனைக்கு உரியன.

நேரிசை ஆசிரியப்பா

படைப்புப் பலபடைத்துப் பலரோ(டு) உண்ணும்
உடைப்பெருஞ் செல்வ ராயினும் இடைப்படக்
குறுகுறு நடந்து சிறுகை நீட்டி
இட்டுந் தொட்டுந் கவ்வியுந் துழந்தும்
5 நெய்யுடை யடிசின் மெய்பட விதிர்த்தும்
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை யில்லைத் தாம்வாழு நாளே. 188 புறநானூறு

கலிநிலைத் துறை
(மா விளம் விளம் விளம் மா)

உந்து நீர்க்கடல் உடுத்தபார் முழுவதும் ஒருங்கே
வந்து தாள்தொழும் அரசியல் வளமெலாம் பெறினும்
இந்தி ராதியர் பெரும்பதத் திருக்கையெய் திடினும்
மைந்தர் இன்றியே வாழ்வது வாழ்வுமற் றன்றே. - பிரமோத்தர காண்டம்

நேரிசை வெண்பா

பொன்னுடைய ரேனும் பொருளுடைய ரேனுமற்(று)
என்னுடைய ரேனும் உடையரோ - இன்னடிசில்
புக்களையும் தாமரைக்கைப் பூநாறும் செய்யவாய்
மக்களையிங் கில்லா தவர். - நளவெண்பா

மக்கட்பேறு எத்தனை மாட்சியுடையது என்பது இவற்றால் அறியலாகும். பிள்ளைகளே பெரும்பாக்கியங்கள் என்பது கருத்து.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-Feb-19, 9:41 am)
பார்வை : 17

மேலே