காந்தம் இரும்பைக் கவர்வதுபோல் யாவரையும் ஏந்தெழில் ஈர்க்கும் இயல்பு - அழகு, தருமதீபிகை 73

நேரிசை வெண்பா

காந்தம் இரும்பைக் கவர்வதுபோல் யாவரையும்
ஏந்தெழில் ஈர்க்கும் இயல்பினால் - மாந்தர்
அழகின் வசமாய் அவசமாய் நின்று
கிழமை புரிவர் கிளர்ந்து. 73

- அழகு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

இரும்பைத் தன்பால் ஈர்த்துக்கொள்ளும் காந்தம் போல் மாந்தரை அழகு வசப்படுத்தி உள்ளமையால் யாவரும் அதில் பரவசராய் உரிமை பாராட்டி உவந்து நிற்கின்றார் என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல் அழகின் அற்புத ஆற்றல் கூறுகின்றது.

வலிய முரடரும், கடிய நெஞ்சரும், கொடிய வஞ்சரும் அழகில் மயங்கி உளமுருகி நிற்பர் என்பது இரும்பு என்ற குறிப்பால் அறிய வந்தது.

எவ்வளவு பொல்லாதவராயினும் தம் வன்கண்மையெல்லாம் தாமே நீங்கி அழகின் எதிரே இனிய நீரராய் எளிதமைந்து அமர்வர் என்பது காந்தம் என்ற உவமையால் ஓர்ந்து கொள்ளலாம்.

அவசம் - தன் வசமிழந்து பரவசமாய் நிற்றல், கிளர்ந்து - உள்ளக் கிளர்ச்சியுடையராய் உவந்து.

அயலவரும் அன்புரிமையுடன் நண்பு மீதூர்ந்து அழகனுக்கு உளமகிழ்வாய் ஆதரவு செய்வர் என்றதனால் கிழமை புரிவர் என்றது. உயிரினங்களெல்லாம் உள்ளம் களித்து உரிமை சுரந்து ஊழியம் புரியும் என்றமையால் அழகின் மகிமையும் மாட்சியும் அரிய பல ஆட்சியும் எளிது தெளிவாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-Feb-19, 9:44 am)
பார்வை : 33

சிறந்த கட்டுரைகள்

மேலே