சேயின் செயலால் குடிக்கென்றும் உய்தி யவனே யுணர் - மக்கட் பேறு, தருமதீபிகை 64

நேரிசை வெண்பா

மனிதன் குடிவாழ்வை மாட்சி யுறுத்தி
இனிது முயல இசைத்துக் - கனிவுமிகச்
செய்வதெலாம் சேயின் செயலால் குடிக்கென்றும்
உய்தி யவனே யுணர். 64

- மக்கட் பேறு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

ஒரு மனிதனது குடிவாழ்க்கையை மாட்சிமைப்படுத்தி அவனைப் பலவகையிலும் முயற்சியில் ஊக்கியருள்வது புதல்வனேயாதலால் அக்குடிக்கு அவனே உயிராதாரம் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

சேய் – குழந்தை, உய்தி - உறுதி நலம்,

பொன் மணி முதலிய அரிய செல்வங்கள் பல நிறைந்திருப்பினும் மகவு இல்லையாயின், அக்குடி மிகவும் சிறுமையாக எண்ணப்படும்; பொருள் வளம் இலனாயினும் குழவி ஒன்று உளதேல் அது பெருமை பெற்று விளங்கும்; ஆதலால், 'குடிவாழ்வை மாட்சி யுறுத்தி' என அதன் ஆட்சி நிலை தெரிய வந்தது.

பெற்ற தந்தை பிள்ளையைக் கண்டு உள்ளம் உருகுகின்றான்; உவகை யுறுகின்றான். கல்வி செல்வம் முதலிய நலங்களில் அவனை வளம்பெறச் செய்யவேண்டும் என்று விழைவு மீக்கூர்ந்து விரைந்து முயல்கின்றான். இங்ஙனம் உள்ளக் கிளர்ச்சியும் ஊக்கமும் உடையனாய் ஆக்கம் தேடி வருதற்குப் பிள்ளையே காரணம் ஆகலின், 'இனிது முயல இசைந்து' என்றார்.

குடிக்கு உய்தி அவனே என்றது ஒருவன் குடிவாழ்க்கை ஒளி மிகப் பெற்று வழிமுறையே நெடிதோங்கி வருதல் புத்திரனாலேயே ஆதலின் அவ்வரவு நிலை உய்த்துணர வந்தது.

அந்தப் புத்திரனும் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கி, பெற்றோரையும் முதுமைக் காலத்தில் நன்கு பேணி வர வேண்டும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Feb-19, 9:48 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 10

சிறந்த கட்டுரைகள்

மேலே