புல்லறிவாளர்க்குச் செய்த உபகாரம் – மூதுரை 15

நேரிசை வெண்பா

வேங்கை வரிப்புலிநோய் தீர்த்த விடகாரி
ஆங்கதனுக் காகார மானாற்போல் - பாங்கறியாப்
புல்லறி வாளர்க்குச் செய்த உபகாரங்
கல்லின்மே லிட்ட கலம். 15 - மூதுரை

பொருளுரை:

வரிகளையுடைய வேங்கைப் புலியின் விட நோயைப் போக்கிய, விட வைத்தியன் அப்பொழுதே அப்புலிக்கு இரையானது போல, நன்றியறிவு இல்லாத அற்ப அறிவினர்க்கு செய்த உதவி கல்லின் மேல் விழுந்த மண் பானை போல அழிந்து உதவி செய்தவனுக்கே துன்பத்தை விளைக்கும்.

கல்லின் மேலிட்ட கலம் என்பதற்குக் கல்லின் மேலே தாக்கிய மரக்கலம் போலும் எனப் பொருள் சொல்லினும் பொருந்தும்.

கருத்து: தீயோர்க்கு உதவி செய்தால் துன்பமே உண்டாகும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Feb-19, 10:05 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 53

மேலே