பெற்றவரை யாரும் புகழ அருமை புரிமகவே பேரும் புகழும் பெறும் - மக்கட் பேறு, தருமதீபிகை 65

நேரிசை வெண்பா

உற்ற குடியை உயர்த்தி உறுங்கிளைகள்
சுற்றி மகிழ்ந்து சுகம்துய்க்கப் - பெற்றவரை
யாரும் புகழ அருமை புரிமகவே
பேரும் புகழும் பெறும். 65

- மக்கட் பேறு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

தான் பிறந்த குடியைச் சிறந்த நிலையில் உயர்த்தி, சுற்றத்தாரைச் சுகம் பெறச் செய்து, தன்னைப் பெற்ற தாயையும் தந்தையையும் உலகம் புகழ்ந்து போற்றும்படி அமைந்து ஒழுகுவோனே உயர்ந்த குலமகன் என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல், மகனுக்கு உரிய சில கடமைகளை உணர்த்துகின்றது.

குலமகனுக்குப் பல பொறுப்புகள் உள்ளன. உற்ற குடியை உயர்த்தி என்றது தான் தோன்றிய குடி செல்வம், கல்வி, சீர்மை, நீர்மை முதலியவற்றால் தாழ்ந்திருந்தாலும் ஊன்றி முயன்று உயர்மேன்மை உடையதாய் அதனை ஒளிபெறச் செய்யவேண்டும் என்றும், கிளைகள் சுகம் துய்க்க என்றது தாய்வழியிலும் தந்தை வழியிலும் உற்ற உறவினர் உவந்து வாழ உதவி புரிய வேண்டும் என்றும் சொல்கிறார்.

குடிக்கும், குலத்திற்கும் இன்னவாறு நன்னயம் செய்தவன் ஈன்றார்க்கு இயற்ற வுரியதை இறுதியில் குறித்தார்.

பெற்றவர்- தாய் தந்தையர்.

இந்தப் பிள்ளையைப் பெறுதற்கு அன்னையும் பிதாவும் என்ன தவம் செய்தார்களோ என்று உலகம் உவந்து புகழும்படி ஒரு குலமகன் நலமுற ஒழுகி வரவேண்டும்; அவ்வாறு வரின் இருமையினும் பெருமை மிகப்பெற்று அவன் இன்புறுவான் எனப்படுகிறது.

என்ன நோன்பு நோற்றாள்கொல் இவனைப் பெற்ற வயிறுடையாள்
என்னும் வார்த்தை எய்துவித்த இருடிகேசா! – திருமொழி

என்று இராமனைக் கண்ட மாதவர்கள் மகிழ்ந்து புகழ்ந்தது போல் தன்னைப் பார்த்தவர் தன்னுடைய பெற்றோரை ஆர்த்தியோடு போற்றுமாறு ஆற்றி யருள்பவனே சீர்த்தி மிகப் பெறுவான்; அவனே நல்ல குலமகனாவான் என்பதாம்.

செம்மலைப் பயந்த நற்றாய்
..செய்தவம் உடையள் என்பார்:
எம்மலைத் தவம்செய் தாள்கொல்?
..எய்துவம் யாமும் என்பார்: - சிந்தாமணி

எனச் சீவகனைப் பார்த்தவர் இவ்வாறு வியந்து புகழ்ந்து விழைந்து பேசியுள்ளனர். உற்ற மகனது உயர்நலங்களை நோக்கியே.பெற்றோரை இவ்வண்ணம் வையத்தார் உவந்து போற்றுவர்; காரிய மதிப்பால் காரணம் துதி யுற்றது.

அறிவு, ஒழுக்கம், அமைதி, ஆண்மை, ஈகை முதலிய குண நலங்களுடையனாய் இனிது ஒழுகி, ஈன்றவர்க்கு ஆன்ற மதிப்பை அருளிச் சான்றோனாய் விளங்குபவனே வான்தோய் புகழுடன் மருவி நிற்பான். அந்நிலைமையைத் தலைமையாகப் பெறுபவனே மகன் என்னும் மகிமைப் பெயர்க்கு உரியவனாவான் என்பதாம்.

மகன்தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை
என்னோற்றான் கொல்லெனும் சொல். 70 புதல்வரைப் பெறுதல்

என்னும் இப்பொதுமறையை ஒவ்வொரு மகனும் உள்ளம் பதித்து உரிமையை உணர்ந்து உறுதியுடன் ஒழுகி ஒளி புரிந்துவரின் இவ்வையம் எவ்வளவு திவ்விய மக்களையுடையதாய்ச் செவ்விய நிலையில் உயர்ந்து சீர்மிகுந்து சிறந்து விளங்கும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-Feb-19, 10:35 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 30

மேலே