கண்டு மகிழ்கின்ற காமருருக் கொண்டிருத்தல் பண்டு புரிந்த பயன் - அழகு, தருமதீபிகை 75

நேரிசை வெண்பா

நல்லார் இருவர் நயக்கும் அழகமைந்து
பல்லாரும் போற்றும் படிபடிந்து - எல்லாரும்
கண்டு மகிழ்கின்ற காமருருக் கொண்டிருத்தல்
பண்டு புரிந்த பயன். 75

- அழகு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

நல்ல குணசீலர் நயந்து மொழியும் அழகு அமைந்து, பலரும் போற்றும்படி நடந்து, எல்லாரும் மகிழுமாறு இனிய உருவம் எய்தியிருப்பது முன்னம் செய்த புண்ணியப் பயனேயாம் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

காமர் – அழகு, உரு - வடிவம். இப்பாடல் அழகு இன்னபடி இசைந்திருக்க வேண்டும் என்கின்றது. இசைவு இசை நோக்கி நின்றது.

நன்மையான தன்மையுடையாரை நல்லார் என்றது. அவர் உலகில் அரியராதலின் தொகை சுருங்கி இருவர் என நின்றார், வெறும் உடலழகை மட்டும் அவர் உவந்து கொள்ளார்; உயிரழகையே நயந்து காண்பராதலால் நல்லார் நயக்கும் அழகு என அந்நயம் தெரிய வந்தது.

இங்ஙனம் அரிய அழகு அமையப் பெற்றவன் பலரும் போற்ற இனியனாய் ஒழுக வேண்டும் என்பது ’பல்லாரும் போற்றும்படி படிந்து' என்றதனால் அறியலாகும். அப்படிப் படிந்து ஒழுகின் இப்படியில் உள்ளார் எல்லாராலும் எப்படியும் அவன் ஏத்தப்படுவான்.

இவ்வாறு நல்ல அழகும், நயத்தகு பண்பும் உடையனாய் ஒரு மகன் தோன்றின், சிறந்த புண்ணிய சீலன் என உலகம் உவந்து புகழ அவன் உயர்ந்து விளங்குவான் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

பண்டு புரிந்த பயன் என்றது இத்தகைய நல்ல பிறப்பு எளிதில் அமையாது என அதன் சிறப்பைக் கண்டு தெளிய வந்தது. எழிலும் குணமும் விழுமிய தவப்பயன்கள் எனப்படும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-Feb-19, 10:39 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 35

சிறந்த கட்டுரைகள்

மேலே