குடிவிளக்கி நிற்கும் குலமகன் கொடிவழிக்குக் காட்டாகக் காட்டல் - மக்கட் பேறு, தருமதீபிகை 66

நேரிசை வெண்பா

குடிவிளக்கி நிற்கும் குலமகன் என்றும்
படிவிளக்கும் பானுவெனப் பாரோர் - கொடிவழிக்குக்
காட்டாகக் காட்டக் கவினுற்(று) அரும்புகழின்
தேட்டாக நிற்பன் தெளி. 66

- மக்கட் பேறு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

தான் தோன்றிய குடியைத் துலக்கி யருளும் குலமகன் உலகை விளக்கும் சூரியன் போலச் சீரிய நிலையில் சிறந்து மனுக்குலத்துக் கெல்லாம் அவன் ஓர் இனித்த உவமையாளனாய் ஒளி மிகுந்து உயர்வான் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

இப்பாடல், குடி விளக்கும் புதல்வனது நிலைமை கூறுகின்றது.

படி - பூமி. எல்லாப் பொருள்களும் படிந்திருப்பது.

பானு - சூரியன். எங்கும் பிரகாசிப்பவன் என்னும் ஏதுவான் வந்தது. குலவிளக்கன் நிலவிளக்கன் என நேர்ந்தான்.

உலகத்தில் தொடர்ந்து பிறந்து வருகின்ற மனித சந்ததிகளுக்கு என்பதை பாரோர் கொடி வழி என்றது.

காட்டு- ஒப்பாக எடுத்துக் காட்டுவது. கருதிய கருத்தை உறுதிபெற உணர்த்தற்கு உதாரணமாக உரைப்பது.

குல பரம்பரையை குடி என்றது. ஆண்மை, அருள், அருந்தவம் முதலிய பெருந்தகைமைகளால் ஒருவன் சிறந்து விளங்கின் அவன் பிறந்த குடியை உலகம் உவந்து புகழும்; சிறப்பான அப்பிறப்பாளனை யாண்டும் பெருமையாகப் பாராட்டிப் பேசுவர்; பிள்ளை பிறந்தால் அப்படிப் பிறக்கவேண்டும் என அவனை யாரும் ஒப்புமை காட்டுவர்; ஆதலால் தன் குடிவிளக்கும் குலமகன் உலகுக்கெல்லாம் ஒர் நல்ல உதாரண புருடனாய் ஒளிபெற்று விளங்குவான் என்று நம்பப்படுகிறது.

தன் மரபைத் துலக்கிய மகனை உலக சந்ததிகட்கெல்லாம் தலைமையாகக் கருதி மக்கள் வந்தனை செய்து வருவர்.

தாம் பிறந்த குடியை மகிமைப் படுத்திய பகீரதன், மார்க்கண்டன் முகலாயினோரைக் தலைமைப் புதல்வராக உலகம் இன்றும் புகழ்ந்து போற்றி வருவதை ஈண்டு உணர்ந்து ஒவ்வொருவரும் தம் நடவடிக்கைகளால் அவர்தம் குடியை மகிமைப் படுத்த வேண்டும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-Feb-19, 8:07 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 20

சிறந்த கட்டுரைகள்

மேலே