இளமையெழில் என்றும் இனிதாய் இசைந்து முருகன் அருகாது நின்றான் - அழகு, தருமதீபிகை 77

நேரிசை வெண்பா

இளமையெழில் என்றும் இனிதாய் இசைந்து
வளமை புதுமை மலிந்து - உளமை
ஒருகாலும் குன்றா(து) உறலால் முருகன்
அருகாது நின்றான் அமர்ந்து. 77

- அழகு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

இளமையும் எழிலும் இனிமையாய் இசைந்து, புதுமையும் வளமையும் நாளும் பொலிந்து, விழுமிய நிலைமை ஒருபோதும் குன்றாமல் ஒளி வளர்ந்து உள்ளமையால் முருகன் என்றும் ஒரு நிலையாய்ப் பெருமிதமாய் நின்று விளங்குகின்றான் என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடலில், அழகுத் தெய்வத்தின் நிலைமை கூறப்படுகின்றது.

உளமை - உளதாம் தன்மை, அருகல் - சுருங்கல். முன்பு ஆறு கவிகளிலும் அழகின் பெருமை கூறப்பட்டது.

இளமையும் அழகும் மனித நிலையில் மிகவும் இனியன. உலகப் பொருள்கள் எவற்றினும் இளமைக்கு ஒரு தனி மதிப்பு உண்டு. கத்திரிப்பிஞ்சு, வெள்ளரிப்பிஞ்சு எனச் சுவை நுகர்விலும் இளமையை விழைதலை அனுபவ நிலையிலும் அறிகின்றோம்,

எல்லாருக்கும் இனிமையான இத்தகைய இளமை விரைவில் மாறுகின்றது. முருகன் ஒருவன் மட்டும் ஒரு நிலையாய் என்றும் குன்றாத இளமையுடையனாய் இனிதமைந்துள்ளான்.

’என்றும் இளையாய்! அழகுடையாய்! ஏறூர்ந்தான் ஏறே!' என இப்பெருமானது அதிசய இளமையை வியந்து மேலோர் துதிசெய்து நின்றனர்.

இளையோன், சேய், குமரன், குழகன், செவ்வேள் என்னும் பெயர்கள் இளமை எழில்களைக் குறித்து வந்தன. முருகு என்னும் மொழி அழகு, இளமை, இனிமை, மணம், தெய்வத்தன்மை முதலிய விழுமிய பல பொருள்களை யுடையது. அவ்வுயர் நலங்கள் யாவும் ஒருங்கேயுடையவன் முருகன் என நின்றான்.

முருகவேள் அன்ன உருவுகொள் தோற்றம் - பெருங்கதை 1- ௪௨

முருகச் செவ்வி முகந்து - மணிமேகலை 5

எனப் பேரெழிலுக்கு முருகனையே நூலோர் பலரும் உவமை கூறியுள்ளனர்.

இளமையும் எழிலும் ஒரு நிலையே மருவி மிளிர்கின்ற இந்த அதிசய அமைதி உலக முழுவதையும் எளிதே வசம் செய்துள்ளது.

பகைமை மூண்டு போர் முகத்தில் நேர்ந்து நெடிது போராடிய சூரனும் ஒரு முறை இக்குமரனது உருவ எழிலை நோக்கி உள்ளம் உருகினான். அழகில் மயங்கிய அவன் இகலையும் மறந்து புகலடைய விழைந்து புகழ்ந்து போற்றினான். அவ்வீரன் வியந்து மொழிந்தன. சில அடியில் வருவன.

அறுசீர் விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

7724.
சீர்க்கும ரேசன் கொண்ட
..திருப்பெரும் வடிவம் தன்னில்
ஏர்க்குறும் ஒளியும் சீரும்
..இளமையும் எழிலும் எல்லாம்
ஆர்க்குள உலகில் அம்மா
..அற்புதத் தோடும் பல்கால்
பார்க்கினும் தெவிட்டிற்(று) இல்லை
..இன்னுமென் பார்வை தானும். 437

7728.
அண்ணலார் குமரன் மேனி
..அடிமுதல் முடியின் காறும்
எண்இலா ஊழி காலம்
..எத்திறம் நோக்கி னாலும்
கண்ணினால் அடங்கா(து) உன்னிற்
..கருத்தினால் அடங்கா(து) என்பால்
நண்ணினான் அமருக்(கு) என்கை
..அருளென நாட்ட லாமே. 441

7729.
திருகிய வெகுளி முற்றும்
..தீர்ந்தன செருவின் ஊக்கம்
அருகிய(து) உரோமம் புள்ளி
..ஆயின விழியில் தூநீர்
பெருகிய(து) இவன்பால் அன்பு
..பிறந்தன தமியேற்(கு) உள்ளம்
உருகிய(து) என்பு தானும்
..உலைமெழு(கு) ஆகும் அன்றே. 442

7730.
போயின அகந்தை போதம்
..புகுந்தன வலத்த(து) ஆன
தூயதோர் தோளும் கண்ணும்
..துடித்தன புவனம் எங்கும்
மேயின பொருள்கள் முற்றும்
..வெளிப்படு கின்ற விண்ணோர்
நாயகன் வடிவம் கண்டேன்
..நற்றவப் பயன்ஈ(து) அன்றே. 443

7731.
சூழுதல் வேண்டும் தாள்கள்
..தொழுதிடல் வேண்டும் அங்கை
தாழுதல் வேண்டும் சென்னி
..துதித்திடல் வேண்டும் தாலும்
ஆழுதல் வேண்டும் தீமை
..அகன்றுநான் இவற்(கு)ஆள் ஆகி
வாழுதல் வேண்டும் நெஞ்சம்;
..தடுத்தது மானம் ஒன்றே. 444

- சூரபன்மன் வதைப் படலம், உத்த காண்டம், கந்தபுராணம்

முருகனது உருவ அழகில் ஈடுபட்டுச் சூரன் இப்படி உரையாடி யிருக்கின்றான். இந்த அழகிய மொழிகளால் அவன் உளம் பரவசமாகி யுள்ளமை உணரலாகும். என் மனம் இவ்வழகனுக்கு ஆளாக விழைகின்றது; மானம் இடையே தடுக்கின்றதே! என்று மறுகி நின்றது அக்குல வீரனது இயல்பான நிலைமை தெரிய வந்தது.

அழகு பகைவரையும் வசப்படுத்தும் என்பது இதனால் அறியலாகும். அதன் கனிவும் கவர்ச்சியும் கரையிடலரியன.

'உருவு திரு ஊட்டும்’ 106 பழமொழி, என்னும் பாடலும் ஈண்டு உணர உரியது. அழகிற்கு இனிய நிலையமாய் உள்ளமையால் இளமையும் இணைத்து எண்ண நேர்ந்தது.

’இளமையில் நான் எப்படி இருந்தேன்! இப்பொழுது இப்படியானேன்’ என்று மனிதன் முதுமையில் இளமையை நினைந்து இ்ரங்கி ஏங்குகின்றமையால் இதன் விழுமிய நிலைமை புலனாம்.

இங்ஙனம் நிலை திரிந்து மாறுபடுகின்ற இளமை யாதொரு வேறுபாடுமின்றி ஒரு படியே நிலைத்திருக்கின்றமையால் முருகன் எழில் நிலையில் தலைசிறந்து மிளிர்கின்றான்.

என்றும் புதுமையாய் ஒளிர்கின்ற அந்த அதிசய அழகு இங்கே துதி செய்ய வந்தது. பல நலங்களும் இனிது வாய்ந்த பொழுது அழகு தனி உயர்ந்து விளங்கும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Feb-19, 10:07 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 63

மேலே