குடிதழைக்க வந்த குலமகனும் இந்தப் படிதழைக்க வந்த பதியும் - மக்கட் பேறு, தருமதீபிகை 68

நேரிசை வெண்பா

குடிதழைக்க வந்த குலமகனும் இந்தப்
படிதழைக்க வந்த பதியும் - முடிதழைக்க
வந்த மணிபோல் வரிசை மிகப்பெற்று
முந்த உயரு முதல். 68

- மக்கட் பேறு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

குடி தழைத்து விளங்கத் தோன்றிய புதல்வனும், இவ்வுலகம் செழித்து விளங்க வந்த அரசனும் சிறந்த புகழடைந்து முடிமணி போல் உயர்ந்து விளங்குவர் என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல், குடிக்கும் படிக்கும் குலமுதல் கூறுகின்றது.

பதி - அரசன். முடி- கிரீடம். தழைத்தல் - செழித்து விளங்குதல்.

குடியை வளமுறச் செய்து உயர் நிலையில் நிறுத்துபவன் உத்தம புத்திரனாய் ஒளிபெற்று நிற்பான்; படியை நலமுறப் பாதுகாத்தருளும் அரசன் எல்லாராலும் காத்தற் கடவுளாய் ஏத்தப்படுவான்; ஆதலால் இருவரும் ஈண்டு இணைத்துப் போற்ற வந்தார். கரும கருத்தாக்களின் உரிமை கருதி உணர உற்றது.

முடி ஆட்சி போல் குடி ஆட்சியும் அரிய பல குண மாட்சிகளை யுடையது என்பது தெளிய குடியாளும் குலமகனைப் படியாளும் அரசனோடு ஒப்ப வைத்தது.

மடியின்றி முயன்று மதியூன்றிப் பேணினாலன்றிக் குடித்தனமும் துரைத்தனமும் செழித்து விளங்கா. குளமும் கடலும் போலச் சுருக்கமும், பெருக்கமும் உடையனவாயினும் இரு வகை நிலைகளிலும் தலைமையாளர் ஒரு முகமான நிலைமையாளரே யாவர். பிறப்புரிமையைச் சிறப்புறச் செய்யவேண்டும் என்பதாம்.

குடி உயரக் கோல் உயரும், கோல் உயரக் கோன் உயரும் என்றமையால் குடிமகனுக்கும் கோமகனுக்கும் உள்ள உறவுரிமை உணரலாகும். ஆள்வினைகளின் அமைதி கூறிய படியிது.

முடிமணி போல் உயரும் என்றது குடியும் படியும் நலமுறச் செய்த இவர் புகழ்மிகப் பெற்று உலகம் போற்ற உயர்ந்து விளங்குவர் ஆதலால் அவ்வுயர் நிலை தெளிவாக உணர வந்தது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Feb-19, 7:57 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 16

மேலே