சொல்பவோ மேன்மக்கள் தம்வாயால் மீட்டு – நாலடியார் 70

நேரிசை வெண்பா

கூர்த்துநாய் கௌவிக் கொளக்கண்டும் தம்வாயாற்
1பேர்த்துநாய் கௌவினார் ஈங்கில்லை - நீர்த்தன்றிக்
கீழ்மக்கள் கீழாய சொல்லியக்காற் சொல்பவோ
மேன்மக்கள் தம்வாயால் மீட்டு. 70

- சினமின்மை, நாலடியார்

பொருளுரை:

சினம் மிகுந்து நாய் தமதுடம்பை வாயினால் கடித்துத் தசையைப் பிடுங்குதலைப் பார்த்து அதற்கு எதிராகத் தமது வாயினால் திருப்பி நாயைக் கடித்தவர் இவ்வுலகத்தில் இல்லை;

அதுபோல, தகுதியான சொல் அல்லாமல் கீழ்மக்கள் தாழ்வான சொற்களைச் சொன்னால் மேன்மக்கள் தம் வாயினால் திருப்பி அத் தாழ்வான சொற்களையே சொல்வார்களோ?

கருத்து:

கீழ்மக்களுக்கு எதிராக மேன்மக்கள் ஒருகாலும் தாழ்வான சொற்களைத் திருப்பிச் சொல்ல மாட்டார்கள்.

விளக்கம்:

திரும்ப வாயாற் கடிப்பது இல்லாமை போலத் திரும்பித் தாழ்வான சொற்களால் பேசமாட்டாரென்பது ஒப்புமை. இப்பா எடுத்துக் காட்டு உவமையணியாம்.

கூர்த்து - மிகுத்து; சினத்தை மிகுத்து. நீர்த்து - நீர்மையுடையது;

தகுதியான சொல் சுருக்கமாகவும் தாழ்வான சொல் பலவாகவும் வருதலின் ‘நீர்த்து' என ஒருமையாகவும் ‘கீழாய' எனப் பன்மையாகவும் சுட்டப்பட்டன.

"எதிர்மறை யெச்சம் எதிர்மறை முடிபின" 2 வாதலின், சொல்பவோ என நிறுத்தினார்;

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Feb-19, 9:09 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 38

மேலே