பேதை உரைப்பிற் ஒல்லும் வகையான் வழுக்கிக் கழிதலே நன்று - நாலடியார் 71

நேரிசை வெண்பா

கோதை யருவிக் குளிர்வரை நன்னாட!
பேதையோ (டி)யாதும் உரையற்க - பேதை
உரைப்பிற் சிதைந்துரைக்கும் ஒல்லும் வகையான்
வழுக்கிக் கழிதலே நன்று.** 71

- பொறையுடைமை, நாலடியார்

பொருளுரை:

மாலைபோல ஒழுகுகின்ற அருவிகளையுடைய குளிர்ச்சி பொருந்திய நல்ல மலைகளை உடைய நாடனே!

அறிவில்லாதவனோடு ஏதொன்றும் பேசவேண்டாம்; பேசினால் அப்பேதை முறைமை தவறி எதிர் பேசுவான்; கூடுமான வழிகளால் அவன் தொடர்பிலிருந்து தப்பி நீங்குதலே நல்லது.

கருத்து:

தகுதியறியாதவரோடு பேசுதல் நல்லதன்று.

விளக்கம்:

யாதும் என்றார். நன்மையாவதொன்றும் என்றற்கு.

பேதை சிதைந்துரைக்கும் என்று தொடர்க.

சிதைதல் - இங்கு முறையினின்றுந் தவறுதல்.

பதமாகத் தப்பித்துக் கொள்ளுதல் என்றற்கு, ‘வழுக்கி' எனப்பட்டது;

கருத்துரை:

வே.ஆவுடையப்பன்

பிறர் தமக்குக் காரணத்தினாலாவது அறியாமையினாலாவது குற்றஞ் செய்தால் தாமும் அவர்க்குக் குற்றஞ் செய்யாமற் பொறுமை யுடையராயிருத்தல்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Feb-19, 9:15 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 14

மேலே