மனிதல்ல புனிதனாகுங்கள்

மனிதல்ல புனிதனாகுங்கள்


தவறு என்பது

தெரியாமல் செய்வது

தப்பு என்பது

தெரிந்தே செய்வது

ஏதோ ஒரு காரணத்திற்காக

அனாதைகளாக விடப்பட்ட

சிசுக்களின் பெற்றோர்கள்

மனிதர்களா? இல்லை இல்லை

பொறுப்பைத் தட்டிக் கழித்தவர்கள்

எப்போதும் எப்போதும்

என் கணிப்பில் விலங்குகளே !

தெருநாய் கூட ஒன்றல்ல

பல குட்டிகளை ஈன்றிடினும்

குட்டிகளை அன்போடு

அரவணைத்து

அவைகள் தாமே முயன்று

இரை தேடும் வரை போராடுகிறது

மழலையைக் குப்பையாக்கினான்

மனிதன் விலங்கானபோது

குப்பையில் இருக்கும்

குழவியை அள்ளியெடுத்து

பசிக்குப் பால் வார்த்து

பாசக்கரம் நீட்டி

நோய்க்கு ஒளடதம் புகட்டி

தோழனாய் தட்டிக்கொடுத்து

வாழ்க்கைக்கு வழிவகுத்து

அச்சிசுவுக்கு வழிகாட்டிய

உதவும் கரங்கள் தெய்வமன்றோ !

யாரோ தட்டிக்கழித்த

பொறுப்பை மனமுவந்து

ஏற்று தன் வாழ்வையே

சமூக சேவைக்காக அர்ப்பணிக்கும்

எந்தவொரு மனிதனும்

தெய்வம் தான்!!

அன்னை தெரசாவும்

நான் கண்ட தெய்வம் தான்!!

இறக்கத்தான் பிறந்தோம் அதுவரை

இரக்கத்தோடு இருப்போம் அன்னையின்

இந்த சீரிய வரிகளை

இரக்க வேதமாய்

மனதில் பதித்து

மனநோயாளிகளை எங்கு காணினும்

அவர்களை ஏளனம் செய்யாமல்

மனமுவந்து அவர்களை

மனநலக் காப்பகத்தில் விடுங்கள்

மனநோய் என்பது

மனிதனின் தவறு

வாழ்வின் தவறு

சுற்றுப்புறத்தின் தவறு

சொந்தங்கள் கைவிடப்பட்டு

சுயசிந்தனை ஏதுமின்றித்

சுற்றித்திரிபவரைக் கண்டால்

ஒதுங்கிப் போகாதீர்கள்

ஒருவேளை உணவு தந்து

உங்களை மனிதனாக்க

இல்லை இல்லை

அவர்களின் தெய்வமாக்கப்

புனிதனாக்க முயற்சியுங்கள் !!


-பாரியூர் தமிழ்க்கிளவி

எழுதியவர் : (24-Feb-19, 3:34 pm)
சேர்த்தது : PULAVARSUMATHI
பார்வை : 43

மேலே