சீரொழுகு சான்றோர் சினம் - மூதுரை 23

நேரிசை வெண்பா

கற்பிளவோ டொப்பர் கயவர் கடுஞ்சினத்துப்
பொற்பிளவோ டொப்பாரும் போல்வாரே - விற்பிடித்து
நீர்கிழிய எய்த வடுப்போல மாறுமே
சீரொழுகு சான்றோர் சினம். 23 - மூதுரை

பொருளுரை:

கீழ்மையான குணமுடையவர்கள் கடும் கோபம் கொண்டு வேறுபட்டால், கல்லில் ஏற்பட்ட பிளவு போல் திரும்பச் சேர மாட்டார்கள்.

அப்படி வேறுபட்ட போது சிலர் பொன்னின் பிளவுக்கு ஒப்பானவர்கள், ஒருவர் சமாதானம் செய்தால் சேர்ந்து கொள்வார்கள்.

சிறந்த குணத்தைக் கடைப்பிடிக்கும் சான்றோர் களுடைய கோபம் வில் கொண்டு அம்பினால் நீர் பிளக்க எய்த பிளவுபோல மனக்காயம் அப்போதே நீங்கும்.

கருத்து:

கோபத்தினால் வேறுபட்ட பொழுது மிக்க குணக் குறைவு உடையவர் எக்காலத்துங் கூடார்;

இடைப்பட்ட குணக்குறைவு உடைய ஒருவர் சமாதானம் செய்து கூட்டக் கூடுவர்.

தலையாய குணமுடையோர் பிரிந்த அப்பொழுதே கூடுவர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Feb-19, 5:51 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 258

மேலே