அகாபெருமாளின் ‘தமிழறிஞர்கள்’---------------------நூலறிமுகம்

இலக்கியப் படைப்பாளிகளுக்கும் அறிஞர்களுக்கும் ஒரு பெரிய வேறுபாடு உண்டு, இலக்கியப்படைப்பாளி வாழ்நாள் முழுக்க தனக்கான நினைவுச்சின்னங்களைத்தான் உருவாக்குகிறான் என்று சுந்தர ராமசாமி ஒரு கட்டுரையில் சொல்கிறார். அந்நினைவுச்சின்னமும் அழிந்துபோகுமென்றால் அவன் நல்ல படைப்பாளி அல்ல என்றே பொருள். அது ஆழமான ஆக்கம் என்றால் அதற்கு எப்படியும் வாசகர்கள் தேடிவருவார்கள். ஆனால் அறிஞர்களின் நிலை அது அல்ல. ஓர் அறிவியக்கத்தில் திருப்புமுனைகளை உருவாக்கியவர்கள், முன்னோடியான பார்வைகளை உருவாக்கியவர்கள் அடிக்கடி நினைவுகூரப்படுகிறார்கள். எஞ்சியோர் ஒரு பெரும்பரப்பின் பகுதியாக மாறிவிடுகிறார்கள். அந்த அறிவியக்கத்தின் பகுதிகள் அவர்கள், ஆனால் தனித்து அறியப்படுவது மிக அரிது.

பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டில் தமிழகத்தில் நிகழ்ந்த மிகப்பெரிய அறிவியக்கங்கள் நான்கு. ஒன்று தமிழியக்கம். இரண்டு, சைவமறுமலர்ச்சி இயக்கம். மூன்றாவதாக தலித் இயக்கத்தை சொல்லலாம். நான்காவதாக திராவிடக் கருத்தியக்கம். சைவ மறுமலர்ச்சி இயக்கம் ஞானியார் சுவாமிகள், பாம்பன்சுவாமிகள், ஜே.எம். நல்லுச்சாமிப்பிள்ளை, ஆறுமுகநாவலர் ஆகிய நால்வரை முன்னோடிகளாகக் கொண்டது. தலித் இயக்கம் அயோத்திதாச பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா ஆகியோரை முன்னோடிகளாகக் கொண்டது. திராவிட இயக்கம் ஈ.வே.ராமசாமி அவர்களிடமிருந்து தொடங்குவது. இவை ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை, ஒன்றை ஒன்று சார்ந்து வளர்ந்தவை. ஒரு தளத்தின் அறிஞரை நாம் இன்னொரு தளத்திற்கும் பொருத்திக்காட்டமுடியும்.

இவற்றில் ஆற்றல்கொண்டதும், ஆழ்ந்த பாதிப்பை உருவாக்கியதும் தமிழியக்கமே. தமிழ்ப்பதிப்பியக்கம், தனித்தமிழ் இயக்கம், தமிழிசை இயக்கம் என்னும் மூன்று பகுதிகள் கொண்டது தமிழியக்கம். தமிழியக்கமும் சைவமறுமலர்ச்சியும் இணையாக, கொண்டும் கொடுத்தும் வளர்ந்தன. பின்னர் தமிழியக்கம் நேரடியாகவே திராவிட இயக்கத்தால் எடுத்தாளப்பட்டது. ஒப்புநோக்க விலகி நிற்பதும் மிக விரைவிலேயே விசையழிந்து மறைந்ததும் தலித் இயக்கமே. அது மீண்டும் தொடங்குவதற்கு ஐம்பதாண்டுகால இடைவெளி இருந்தது. தமிழியக்க முன்னோடிகளையே பொதுவாக இன்று தமிழறிஞர்கள் என்னும் பொதுப்பெயரால் சுட்டுகிறோம்.

தமிழியக்கம் அதன் வெற்றிகளை பண்பாட்டுக்கு அளித்துவிட்டு இன்று வலுவிழந்து வரலாறாக ஆகிவிட்டிருக்கிறது. மாபெரும் தமிழறிஞர்கள் என இன்று எவரையும் சுட்டும்நிலை இல்லை. இருப்பவர்கள்கூட சென்றகாலத்தின் நிழல்நீட்சிகள்தான். ஆகவே இன்று நாம் பெரும்பாலான தமிழறிஞர்களை மறந்துவிட்டிருக்கிறோம். நேற்றைய வரலாற்றின் பகுதிகளாகவே அவர்களை கருதுகிறோம். உ.வே.சாமிநாதய்யர், மறைமலை அடிகள் போன்ற சிலர் மட்டுமே இன்று நினைவுக்கு வருகிறார்கள். அவர்கள் தமிழ்ப் பதிப்பியக்கம், தனித்தமிழியக்கம் போன்றவற்றின் முன்னோடிகள் என்பதனால். எஞ்சியவர்களை அரிதாக பாடநூல்களில் காண்கிறோம். அவர்களின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்படும்போது கேள்விப்படுகிறோம். எஞ்சியோரை நாம் அறிவதே இல்லை.

ஆனால் பண்பாடு என்பது நினைவுகூர்தல், நினைவில் நிறுத்தல் வழியாகவே வாழ்கிறது. தமிழ் மரபு என்பது அதை மெல்லமெல்ல கட்டமைத்த அறிஞர்கள் இன்றி தொகுத்துக்கொள்ளப்பட இயலாத ஒன்று. அ.கா.பெருமாள் அவர்களின் இந்நூல் சென்றகாலத் தமிழறிஞர்களைப்பற்றிய சுருக்கமான வாழ்க்கைக்குறிப்புகளால் ஆனது. ஆனால் வெறும் தகவல்களாக இல்லாமல் ஆர்வமூட்டும் வாழ்க்கைச்சித்திரங்களாக இவற்றை எழுதியிருக்கிறார் அ.கா.பெருமாள். பத்தாண்டுகளுக்கு முன் தமிழினி மாத இதழில் தொடராக வெளிவந்தவை இவை, இப்போதுதான் நூல்வடிவம் கொள்கின்றன.

சி.வை.தாமோதரம்பிள்ளை, சே.ப.நரசிம்மலு நாயுடு, மனோன்மணியம் சுந்தரனார், வெள்ளக்கால் ப சுப்ரமணிய முதலியார், ஜே.எம்.நல்லுச்சாமிப்பிள்ளை, பின்னத்தூர் அ.நாராயணசாமி அய்யர், செல்வக்கேசவராய முதலியார், அரசன் சண்முகனார், எல்.டி,.சண்முகனார். பரிதிமாற்கலைஞர், பா.வே. மாணிக்க நாயகர், வ.உ.சிதம்பரனார், மறைமலை அடிகள், கவிமணி தேசிக வினாயகம் பிள்ளை, சி.கே.சுப்ரமணிய முதலியார், மு.இராகவையங்கார், கே.என்.சிவராஜபிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார், பண்டிதமணி கதிரேசன் செட்டியார், வ.வே.சு.அய்யர், தமிழவேள் உமா மகேஸ்வரனார், வ.சு.செங்கல்வராய பிள்ளை, ந.மு.வெங்கடசாமி நாட்டார், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை, எஸ்.வையாபுரிப்பிள்ளை, பி.ஸ்ரீ.ஆச்சார்யா, தி.வை.சதாசிவப் பண்டாரத்தார், சுவாமி விபுலானந்தர், ஆண்டி சுப்ரமணியம், வ.சுப்பையா பிள்ளை, யோகி சுத்தானந்த பாரதி, தேவநேயப் பாவாணர், அ.சிதம்பரநாதன் செட்டியார், கி.வா.ஜெகன்னாதன், கா. அப்பாத்துரை, மா.இராசமாணிக்கனார், பெரியசாமித்தூரன், ஆ.முத்துசிவன், புலவர் கா.கோவிந்தன், வ.சுப.மாணிக்கம் என்னும் நாற்பது தமிழறிஞர்களைப் பற்றிய குறிப்புகள் இந்நூலில் உள்ளன.

இப்பட்டியலே ஒருவகை பார்வையை அளிக்கிறது. இதில் பெரும்பாலும் பிள்ளைவாள்களும் முதலியார்களும்தான் இருக்கிறார்கள். அய்யர்களும் அய்யங்கார்களும் குறைவு. இது அன்றைய தமிழியக்கத்தின் பண்பாட்டு உள்ளடக்கத்தை சுட்டுவது. இதில் தொடர்ச்சியாக பிற்பாடு பேசப்பட்டவர்களின் பெயர்களில் இருந்து சாதியொட்டு பின்னாளில் அகற்றப்பட்டுள்ளது. பேசப்படாதவர்கள் அந்நாளில் வெளிவந்த அவர்களின் நூல்களில் இருந்ததுபோலவே இப்போதும் சாதிப்பெயர்களுடன் சுட்டப்படுகிறார்கள். இந்நூலில் ஈழத்துத் தமிழறிஞர்களை அ.கா.பெருமாள் சுட்டவில்லை. முழுமையான ஒரு தொகுப்பை நிகழ்த்தமுடியாமலாகலாம், முக்கியமானவர்கள் விடுபடக்கூடும் என்னும் அச்சம் காரணமாக இருக்கலாம். ஆறுமுகநாவலரில் இருந்து தனிநாயகம் அடிகளார் வரையிலான ஈழத்து அறிஞர்களின் வரலாற்றுச் சுருக்கத்தை இன்னொருவர் எழுதலாம். [ஆனால் விபுலானந்தர் இந்நூலில் இருக்கிறார்]

வாசித்துச்செல்கையில் பல செய்திகள் வியப்பும் திகைப்பும் ஊட்டுவன. வாழ்நாளெல்லாம் தமிழ் நாடகவியலைப் பற்றி பேசிய பேரறிஞர் ஆண்டி சுப்ரமணியத்தை நான் இந்நூல் வழியாகவே கேள்விப்படுகிறேன். தமிழ் நூல்களின் காலவரையறை மற்றும் தொகுப்பில் பெரும்பங்காற்றியவரான கே.என்.சிவராஜபிள்ளையும் ஆண்டி சுப்ரமணியமும் ஒரே ஊரில் பிறந்தவர்கள். நாகர்கோயில் அருகே இன்றும் சிற்றூராகக் கருதப்படும் பீமனேரி. அக்காலத்திலேயே ஆண்டி சுப்ரமணியம் ஐரோப்பிய நாடகவியலை ஆழ்ந்து கற்றிருக்கிறார். தொடர்ச்சியாக எழுதியிருக்கிறார். ஆனால் அன்றைய கல்வித்துறை அவருடைய நூல்களை முற்றாகவே அழியவிட்டது. சென்னை பல்கலைக்கு பிரசுரத்திற்காக A Theatre Encyclopedia என்றபேரில் அவர் சமர்ப்பித்த நாடகவியல் கலைக்களஞ்சியம் 6000 துணைத்தலைப்புக்கள் கொண்டிருந்தது. அதை அவர்கள் பலகாலம் வைத்திருந்து செல்லரித்து அழியவிட்டுவிட்டார்கள். அது தமிழியக்கமும் செல்லரிக்க ஆரம்பித்ததன் குறியீடு. உலகின் வேறெந்தs சூழலிலாவது ஒரு பல்கலைகழகம் இப்படி ஒரு அக்கறையின்மையை காட்டுமா என்று தெரியவில்லை.

அன்றும் இன்றும் தமிழ்ச்சூழல் மாறவில்லை என்பதை செல்வக்கேசவராய முதலியார் சொல்லும் வரி காட்டுகிறது. ‘பண்டைத்தமிழ்ப் பனுவல்களை பதிப்பிப்பது என்றால் கையிலுள்ள பொருளைக்கொண்டுபோய் நட்டாற்றில் வலிய எறிந்துவிட்டு வெறுங்கையை வீசிக்கொண்டு வீடுபோய் சேர்வதே முடிவான பொருள் என்பது உணர்ந்து எச்சரிக்கையாக இருப்பார்க்கு இன்னலொன்றும் இல்லை.”

சென்ற காலத்தைப் பற்றிய கனவுகளை எழுப்புகின்றன இதில் வரும் செய்திகள். பி.ஸ்ரீ.ஆச்சாரியா பற்றிய குறிப்பில் திருநெல்வேலி முத்தையாபிள்ளையின் புத்தகக்கடையில் மாலைநேரத்தில் அவர் நண்பர்களுடன் கூடுவதுண்டு என்றும் அந்தச் சபை கடைச்சங்கம் எனப்பட்டது என்றும் ஒரு வரி வருகிறது. அந்த கடையைப் புனைந்து உள்ளத்தில் எழுப்பச்செய்கிறது.சட்டென்று, அந்த ஆளுமைகளின் தனித்தன்மைகள் நோக்கியும் செல்கிறது அ.கா.பெருமாளின் பார்வை. பி.ஸ்ரீ. நன்றாகவே சம்பாதித்தார். ஆனால் மாபெரும் செலவாளி. க.நா.சு போலவே காபியில் போதை கொண்டவர் என்று வரும் வரி வழியாக அவரை அருகில் பார்த்த உணர்வு உருவாகிறது.

தமிழ்ப்பேரறிஞர் கே.என்.சிவராஜபிள்ளை காவல்துறை உயரதிகாரியாக திருவிதாங்கூர் அரசில் பணியாற்றியவர், ஒரு கொலைவழக்கில் நேர்மையாக இருந்தமையால் வேலையை விடவேண்டியிருந்தது என்னும் செய்தி ஒரு முழு வாழ்க்கை வரலாற்றுக்குரியது. பின்னர் விறகுக்கடை நடத்தியிருக்கிறார். அது நஷ்டத்தில் முடிய பீமனேரியிலும் நாகர்கோயிலிலும் வாழ்ந்திருக்கிறார். அக்காலத்தில் கன்யாகுமரிக்கு வரும் தமிழறிஞர்கள் அனைவருமே கவிமணியைச் சென்று சந்தித்திருக்கிறார்கள். எவருமே கே.என்.சிவராஜபிள்ளையை சந்தித்ததில்லை என்கிறார் அ.கா.பெருமாள். அதற்குக் காரணம் தமிழ்ச்சங்கம் என்பது கற்பனையே என அவர் எழுதியதுதான் என ஊகிக்கிறார்.

கற்பனைகொண்ட ஓர் எழுத்தாளன் சிறுகதைகளாக எழுதித்தள்ளவேண்டிய அளவுக்கு வாழ்க்கைச் சித்திரங்கள் ஒற்றைவரிகளாக இறைந்துகிடக்கும் நூல் இது. தமிழ்ச்சொற்பிறப்பியல் அகரமுதலி தயாரிக்க உதவிகோரி திருப்பனந்தாள் ஆதீனம் செல்லும் தேவநேயப் பாவாணருக்கு அங்கே நிகழ்ந்த சிறுமை ஓர் உதாரணம். பிராமணப் பந்தி முழுமையாக முடிந்தபின் மாலை மூன்று மணிக்கு அவருக்கு உணவளிக்கப்படுகிறது. மடாதிபதியை அவர் சந்திக்கையில் அருகே உ.வே.சாமிநாதய்யர் இருக்கிறார். ஏற்கனவே தேவநேயப் பாவாணரை நன்கறிந்தவர் என்றாலும் உ.வே.சாமிநாதய்யர் அவரை தனக்குத் தெரியாது என்று சொல்லிவிடுகிறார். புண்பட்டு உளக்கொதிப்புடன் தேவநேயப் பாவாணர் திரும்பிச்செல்கிறார். உ.வே.சாவின் இணையற்ற பங்களிப்பைப் பற்றிச் சொல்லும் அதே ஆய்வுநோக்குடன் இதையும் சொல்லிச் செல்கிறார் அ.கா.பெருமாள்.

இன்னொரு உதாரணம், திருநெல்வேலியைச் சேர்ந்த சொர்ணம் பிள்ளை என்பவர் இன்னிலை என்னும் நூலின் சுவடியை வ.உ.சியிடம் கொடுத்து அது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று என்று சொல்லியிருக்கிறார். அதற்கு வ.உ.சி பெரும்பணமும் கொடுத்திருக்கிறார். வ.உ.சி அதை பதிப்பித்தபின்னர் மயிலை சீனி வெங்கடசாமி, மு.அருணாச்சலம் போன்றவர்கள் அது போலிநூல் என நிறுவினர். அந்தச் சுவடி பழஞ்சுவடிபோல போலியாக தயாரிக்கப்பட்டது. இந்த சொர்ணம் பிள்ளை அனந்தராம அய்யரை ஏமாற்றி கைந்நிலை என்னும் நூலையும் பதினென்கீழ்க்கணக்கு என பதிப்பிக்கச் செய்திருக்கிறார். பின்னர் அது கண்டுபிடிக்கப்பட்டது.

இன்றைய நோக்கில் அந்த சொர்ணம் பிள்ளை சாதாரணமானவர் அல்ல. அவரும் பெரிய தமிழறிஞர்தான். தமிழறிஞர்களுக்கே சந்தேகம் வராதபடி அவர் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களை எழுதியிருக்கிறார். போலிச்சுவடி செய்வதிலும் தேர்ந்திருக்கிறார். தமிழாய்வுச்சூழலை நன்கு அறிந்து அன்றைய பதிப்புவெறியை பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். உண்மையில் இன்றிருக்கும் பழந்தமிழ் நூல்களில் நாம் இன்னமும் கண்டுபிடிக்காத சொர்ணம் பிள்ளையின் கைவரிசைகள் உள்ளனவா? எனக்கென்னவோ இன்னா நாற்பது,இனியவை நாற்பது மேல் ஓர் ஐயம்.

நம் சூழலில் ஓர் அலையென எழுந்து நாம் இன்று சிந்திக்கும் முறையை வடிவமைத்து மறைந்துபோன ஒரு மாபெரும் அறிவியக்கத்தை அதன் சிற்பிகளின் ஆளுமைகள் வழியாக சித்தரிக்கும் முக்கியமான நூல் இது.











ஜெ மின்னஞ்சல் 28.02 2019

எழுதியவர் : (28-Feb-19, 3:48 pm)
பார்வை : 17

மேலே