இப்பொழுது புரிகிறது

இப்பொழுது புரிகிறது!
———————————-
அறியாவயதில் எப்பொழுதோ படித்த
ஆங்கிலச் செய்யுள் ‘எலிஜி’ என்
எண்ணத்தில் உதிக்கிறது—அதை
எழுதிய புலவன் ‘தாமஸ்கிரே’ யின்
‘வாழ்வின் அநித்திய’ மனம்
வகையாய் இன்று புரிகிறது !

அர்தராத்திரியில் அபுபென் ஏடம்கண்ட
அழகிய தேவதையின் பொற்சுவடியின்
பொருள் புரிகிறது! இன்னொரு அபுவாக,
பொன் ஏட்டில்என் பெயர் இடம் பெற
மனம் ஏங்குகிறது! மாசற்ற
மனிதநேயம் வளர்க்க மனம் விரும்புகிறது !

‘பாதச்சுவடுகள்’ என்ற பாட்டின்
பொருள் புரிகிறது !இறைவன் என்றும்
நம்முடன், நம்செயலில் என்பது விளங்குகிறது !
நம்பிக்கை வாழ்வில் வருகிறது-பிறந்ததின்
பயன் தெரிகிறது! கீதையின் பொருளும்
புனித பைபிளின் உரையும் புரிகிறது!

புத்தனின் ஞானம் புரிகிறது
போதிமரத்தின் மேன்மைப் புலப்படுகிறது
காந்தி போல் வாழ மனம் விரும்புகிறது—என்னை
காயப்படுத்தியவரையும். காப்பாற்றத் தோன்றுகிறது
ஒரு கன்னத்தில் அடித்தவர்க்கு
மறு கன்னத்தைக் காண்பிக்கத்தோன்றுகிறது .

கடவுளே வந்தழைத்தாலும்
‘கடமையை முடித்துவருவேன்’ என்ற
கவிஞன் வழி. செல்ல மனம் துடிக்கிறது!
காலையில் தோன்றும் கதிரவனைக்
காத்திருந்துக் காணப்பிடிக்கிறது!
காக்கைக் கரையுமுன் விழி மலர்கிறது !

அந்தி மாலையில் தோன்றும் நிலவு
அந்தமில்லா அழகாய் தெரிகிறது
ஓயாமல் பாய்ந்துவரும் கடலலைகளிலே
ஓர் ஓவியனின் தூரிகை வண்ணம் இருக்கிறது!
ஷெல்லி, கீட்ஸ்,வேர்ட்ஸ்வொர்த்,
கம்பன் , இளங்கோ யாவரும்
ஓரினம் என மனம் பறை சாற்றுகிறது.
ஓயாமல் அலையும் மனம் அவர்களுள்
இணைந்து மறைய துடிக்கிறது!
இயற்கை இன்பம் எத்தனை எத்தனையோ!
எத்தனையோ கோடி கட்சிகள் இங்கு-எனினும்
‘எத்தனைக்கோடி இன்பம்’ என்ற பாரதி கட்சி நான்.

எழுதியவர் : சாந்தா வெங்கட் (3-Mar-19, 10:52 pm)
சேர்த்தது : சாந்தா
பார்வை : 163

மேலே