சாபத்தில் இருந்து மிஞ்சியோர்

#சாபத்தில் இருந்து மிஞ்சியோர்..!

நேரத்திற்கொரு பேச்சும்
வாயைத் திறந்தால்
பொய்யுமாய் திரிவோருக்கு
நாக்கில்லாது போகட்டும்
சபித்திருந்தார் கடவுள்
ஓர் நாளில்.!

எந்தப் பெண்ணெல்லாம்
அழகாய் இருக்கிறார்கள்
என்று தேடி கண்ணுற்று
சிக்கவைத்து சீரழிப்போன்
கண்கள் எல்லாம் குருடாகக் கடவது
சாபம் விட்டிருந்தார் கடவுள்
மறு நாளில்..!

அடுத்தவனை அழிக்க மட்டுமே
திட்டம் தீட்டும் மூளை எல்லாமும்
செயல் படாது போகட்டும்
சபித்திருந்தார் கடவுள்
இன்னுமொரு நாளில்..!

பிணி கண்டு
குற்றுயிராய் வருவோரிடத்தில்
நியாயமின்றியோ ஈவிரக்கமின்றியோ
நோயாளியின் சொத்தினையே
எழுதிவாங்கும் மருத்துவர்கள்
மரணிக்கக்கடவது என்று
சபித்திருந்தார் கடவுள்
இன்னுமொரு நாளில்..!

மக்களை ஏமாற்றும்
அரசியல்வாதிகள் அனைவருக்கும்
கைகால்கள் விளங்காது போகட்டும்
சபித்திருந்தார் கடவுள்
மீண்டும் ஒரு நாளில்..!

இப்படியாகத்தான்
ஒவ்வொரு தவறுக்கும்
தண்டனை சாபங்களை
வழங்கியிருந்தார்
அடுத்தடுத்த நாட்களில்..!

கடைசி சாபத்தை விடுத்து
அடுத்தநாளில் கடவுள்
பூமியில் வலம் வந்துகொண்டிருந்தார்..

30 சதம் பேர்களின்
நாக்கு அறுந்து விழுந்திருந்தது.!

20 சதம் பேர்கள்
குருடாகியிருந்தனர்..!

மூளைச் செயல்பாடின்றி
25 சதம் பேர்கள்
மரமாய் சாய்ந்திருந்தனர்..!

பிரபலமான மருத்துவர்கள்
95 சதம் பேர்கள் இறந்திருந்தனர்.!

உயிரை மட்டும் வைத்துக்கொண்டு
மேற்கூறிய
அனைத்தையுமே இழந்திருந்தனர்
95 சதவீத அரசியல்வாதிகள்..!

எந்த சாபத்திலும் சிக்காத
நேயம் மிக்க மனிதர்கள்
அழுது அரற்றிக் கொண்டிருந்தனர்
சபிக்கப்பட்டோரைக் கண்டு
அழுது புலம்பும்
சாபம் பேராமலேயே..!

அழுதும்.. அழாமலும் என்று
எஞ்சி இருந்ததில்
நிறையக் குழந்தைகளே..!

#சொ.சாந்தி

எழுதியவர் : சொ.சாந்தி (4-Mar-19, 10:03 am)
சேர்த்தது : C. SHANTHI
பார்வை : 112

மேலே