வாய்பேசும் வாய்ப்பொன்றே மானிடத்தின் மாட்சியாம் - வாக்கு நயம், தருமதீபிகை 111

நேரிசை வெண்பா

வாய்பேசும் வாய்ப்பொன்றே மானிடத்தின் மாட்சியாம்
வாய்பேசா வாயின் வனவிலங்கே - வாய்பேசி
வாழும் வகையுணரின் வாக்குநய நோக்குமுயர்
ஊழும் தெரியும் உடன். 111

- வாக்கு நயம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

வாயால் பேசுகின்ற சிறப்பு ஒன்றே மனித சாதியின் மாட்சியாயுள்ளது; அங்ஙனம் பேசாது நிற்பின், காட்டு மிருகங்களேயாம்;

பேச்சால் வாழ்க்கையை நடத்தி உணர்ந்தால், வாக்கு நயத்தின் அழகும் உயர்வும் முறையும் இனிது தெரியும். இப்பாடல் பேச்சு வழக்கின் பெருமை கூறுகின்றது.

நோக்கு=அழகு, கருத்து. ஊழ்=முறை, ஒழுங்கு.

உலகில் உள்ள உயிர்ப் பிராணிகள் எவற்றினும் மனிதன் உயர்ந்து விளங்குகின்றான்; அவ்வுயர்வுக்கு உரிய காரணங்களுள் தலைசிறந்து நிற்பது வாய்ப்பேச்சே; மிருகங்கள் பேச மாட்டா; மனிதன் பேசுகின்றான், அப்பேச்சு ஒழிந்தது ஆயின், அவன் நிலைமை என்னாகும்? நல்லனவற்றையே பேச வேண்டும் என்பதை நினைந்து நோக்க வேண்டும்.

தன் எண்ணங்களைப் பிறர்க்குச் சொல்லவும், பிறர் கருத்துக்களைத் தான் உணர்ந்து கொள்ளவும் சொற்களே துணை புரிகின்றன. மனிதர் ஒருவரோடு ஒருவர் அளவளாவி வாழ்தற்குப் பேச்சே இனிய சாதனமாய் இசைந்துள்ளது. பேச்சு இல்லையாயின் உலக வாழ்க்கை யாதும் நடவாது.

வாய்ப் பேச்சாலேதான் மனித வாழ்க்கை இனிது நடந்து வருகின்றது என்னும் உண்மையை உணர்ந்து கொள்ளவே ’வாய் பேசி வாழும் வகை உணரின்' என்றது.
.
இந்த அருமைப் பேற்றை எவரும் எண்ணி நோக்குவதில்லை; நோக்கின், வாக்கு நயத்தின் அருமையும் பெருமையும் தெரிந்து அதிசயம் அடைந்து போற்றுவர்.

பேசும் வன்மை மனிதனுக்குக் தனி மகிமையை விளைத்துள்ளது; அப்பேச்சிற்கு நிலையமாயிருப்பது வாக்கு, இங்ஙனம் மேன்மையான அந்த வாக்கை நன்கு போற்றி வரவேண்டும். உரையாடல் உயிராதாரமாயுள்ளமையை ஒவ்வொருவரும் ஊன்றி உணர வேண்டும் என்பது கருத்து. வாக்கு நயத்தின் ஆட்சியும் மாட்சியும் இதனால் கூறப்பட்டன.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-Mar-19, 1:02 pm)
பார்வை : 57

மேலே