அக்கா - தம்பி

நீண்ட நாள்
தெரியாமலே இருந்த உறவு ...
தெரிந்தபின் நீண்ட நாள்
தொடரமுடியாத உறவு ...

நெடுந்தூரம் நம் உறவு பயணப்படவில்லை எனினும்
நெடுஆழம் வரை ஆழ்ந்து பயணப்பட்டதாகவே நினைத்தேன் ...

சில வார்தைகள் பேசி மகிழ்ந்த போதே
சிலர் நம் உறவை சிறை வைக்க நினைத்தனர் ...

அவிழ்க்கமுடியா சங்கிலியால் கட்டியபோதும்
அன்பெனும் ஆயுதம் ஏந்தி மீண்டும் பயணித்தோம் ...

நன்முறையில் வளர்ந்து வந்த நம் உறவு
சிலர் கண்பட்டுப்போனதாலே என்னவோ
சிறிய விரிசல்
பேசப்படாத வார்த்தைகள்
சில மௌனங்கள்
இவையாவும் ஒன்று திரண்டு
பிரிவை நோக்கி நம்மை பிரயாணிக்க வைத்தது ...

புதிய வரவாக உன் வாழ்வில் வந்த
புதிய உறவு ...
நம் சிறிய உறவின் தடுப்புச் சுவரை
கடினமான ஆயுதத்தால் தகர்த்தது ...

அஸ்திவாரம் ஆடிப்போனது ...
என் மன அமைதியும் அஸ்தியாக கரைந்து போனது ...

புதுச்செடியில் புது பூ பூப்பதால்
இந்த பழைய செடி கேட்பாரற்று கைவிடப்பட்டது ...
சில நேரம் மட்டும்
உயிர் இருக்கிறதா என அறிய
தண்ணீர் தெளித்து சோதிக்கப்பட்டது ...

உன் புது உறவு வருகை
எனக்கும் மகிழ்ச்சி தான் ..
எனக்கும் அது புது உறவு தானே ...

வலி பொறுக்காமல்
உன்னிடம் காரணம் கேட்டால்
அலுவல் பணி என்று
உதடு ஒட்டாத
பொய் ஒன்றை சொல்கிறாய் ...
பொய்யலே என் அன்பை கொல்கிறாய்...

மழை பெய்த நாட்கள் தொலைந்தது..
பரவாயில்லை தூறல் மட்டும் தூறிக்கொண்டிருந்தது ஆறுதலுக்காக ..
ஆனால் இன்றோ வானமே பொய்த்து போனது ...

உன் வருகையை எண்ணி
வானத்தை அண்ணார்ந்து
பார்த்தபடியே
கழிகிறது என் அன்றாடம் ........

போதும் அக்கா
முடியவில்லை என்னால்
ஒரு முடிவு சொல்..
இல்லையேல்
முடித்து கொள்...
முடிவின்றி கொல்லாதே!

எழுதியவர் : குணா (வருண் மகிழன்) (7-Mar-19, 4:48 pm)
சேர்த்தது : வருண் மகிழன்
பார்வை : 740

மேலே