அருள்ஞானம் பெற்றோர்க்கு அநந்தம் விழியென்று அறி - நீதி வெண்பா 10

நேரிசை வெண்பா

கண்ணிரண்டே யாவர்க்கும் கற்றோர்க்கு மூன்றுவிழி
எண்ணுவழி ஏழாகும் ஈவோர்க்கு - நண்ணும்
அநந்தம் தவத்தால் அருள்ஞானம் பெற்றோர்க்கு
அநந்தம் விழியென்று அறி. 10 நீதி வெண்பா

பொருளுரை:

எல்லோர்க்கும் கண்ணிரண்டே ஆயினும், கல்வி கற்றவர்க்கு மூன்று கண்களாம்;

கொடையாளர்களுக்குக் கணக்கிடப்படுங் கண்கள் ஏழாம்;

பொருந்தும் அழியாத தவம் செய்து இறைவன் திருவடி ஞானத்தைப் பெற்றவர்க்குக் கண்கள் அளவில்லாதவன என்று அறிவாயாக.

கருத்து:

மானிடருள் கற்றோரும், அவரினும் ஈகையுளாரும், அவரினும் ஞானிகளும் சிறந்தவர்.
கற்றவர்க்குக் கண்கள் இரண்டோடு கல்வியையும், ஈவோர்க்கு நகக் கண்கள் ஐந்தையும் சேர்த்து முறையே கண்கள் மூன்றெனவும், ஏழெனவும், ஞானிகள் எல்லாவற்றையும் அறிவதனால் அவர்களுக்குக் கண்கள் அநேகம் எனவும் கூறப்பட்டது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-Mar-19, 8:34 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 82

சிறந்த கட்டுரைகள்

மேலே