பெண்மையின் பெருமை

அன்று அடுப்பூதியவள்
இன்று அரபு நாடு செல்கிறாள்
தொடரட்டும்
இவள் நீண்ட பயணம்
பல தேசியம் கடந்தும்
இவள் சுதேசியம் வெல்லட்டும் ...

மஞ்சள் குலைந்த முகத்தில்
இன்று மீசை முளைத்து
பல பாரதிகள் வருகிறார்கள்
இன்னும் பலர் வரட்டும்
இவள் புகழ் பரவட்டும் ...

திசை தெரியாமல்
குடிசையில் குனிந்து நடந்தவள்
இன்று எல்லாத் திசைகளிலும்
திசை காட்டியாய் திகழ்கிறாள்
திரியட்டும்
தீச்சுடர் எறியட்டும்...

தலை குனிந்து பல
தலைமுறைகள் தொலைந்தவள்
இன்று தலைநிமிர்ந்து
புது தடயம் பதிக்கிறாள்
பதிக்கட்டும்
புதுப்பிக்கட்டும் ...

பள்ளி வாசல் அறியா
பேதையாய் இருந்தவள்
இன்று பல பாட புத்தகத்தில்
தவிர்க்க முடியா பாடமாய் இருக்கிறாள்
படரட்டும்
இவள் பறந்து செல்லட்டும் ...

சிறகொடிந்து சிறை கொண்டிருந்த இவள்
இன்று சிறகடித்து பறக்கிறாள்
மகிழட்டும்
இம்மரபு தொடரட்டும் ...

சடங்கு சம்பிரதாயங்களில்
சட்டையிழந்த இவள்
இன்று சாதனை சாட்டையை
எக்குத்திக்கும் சுழற்றி அடிக்கிறாள்
அடிக்கட்டும்
சிலர் அடங்கட்டும் ...

விதி என்று அழுது
நொந்து போனவள்
இன்று வீதியெங்கும் வீரநடை போடுகிறாள்
புது விதையாய் எங்கும் விதைக்கப்படுகிறாள்
துளிரட்டும்
மலரட்டும்
மரமாகட்டும்
அம்மர நிழலில் இன்னும்
பலர் வந்து இளைப்பாறட்டும் ...

கட்டுப்பாடுகளுக்குள் கலையிழந்த அவள்
இன்று காட்டாற்று வெள்ளமாய்
கரை உடைந்து வருகிறாள்
உடையட்டும் தடை
உதைபடட்டும் தடைக்கல் ...

பேறு காலத்திலும்
போர் வாலையே
பெற்றுடுக்கும் உங்களை
இத்தனை நாள்
அடக்கி வைத்திருந்த
இம்முட்டாள் சமூகத்தை
உன் எச்சில் உமிழ்ந்து
சுத்தம் செய்திடு ...

பெண்டிர்
உம் புகழ் பாட
நான் பெருங்கவிஞனும் இல்லை
என் சிறு கவியில் அடங்க
நீர் குறும் பொருளும் அல்ல ...

பாரதி கண்ட
புதுமைப் பெண்ணாய்
ஒவ்வொருவரும்
ஓடி வாருங்கள் ...
உங்களை தடுக்க
தடைகள் இனி ஏதும் இல்லை ...

இனி பிறக்கும்
ஒவ்வொரு சிசுவும்
இனி தோன்றும்
ஒவ்வொரு கருவும்
நிச்சயம்
பெண்ணாய் பிறப்பதில்
பெருமை கொள்ளும் ...

எழுதியவர் : குணா (வருண் மகிழன்) (8-Mar-19, 3:57 pm)
சேர்த்தது : வருண் மகிழன்
Tanglish : penmayin perumai
பார்வை : 5508

மேலே