அனைத்தும் சிறப்புப்பெறும்

உள்ளத்திலிருந்து
ஊற்றெடுக்கும் அன்புக்கு
ஆயிரம் பெயர்களிருந்தாலும்
ஏழைகளிடம் தான்
எப்போதும் நிறைந்திருக்கும்,
அதுபோல அறிவு
அறிஞர்களிடம் தான் அதிகம்
அடைக்கலமாகும்

உனது அறிவீனத்தை
உண்மையாக நீ
உணர்ந்திருந்தால்
அது தான் உனக்கு
அறிவைப் பெற முதல்படி,
அறிவின் எதிரில் என்றும்
அறியாமை தலை கவிழும்

அறிவுதான் முக்கியம்
அநுபவம் தேவையில்லையென
இளைஞர்களும்,
அநுபவம் இருந்தால் போதும்
அறிவு முக்கியமில்லையென
முதியவர்கள் நினைப்பதற்கும்
மூளைதானே காரணம்

உணர்ச்சி அறிவை
வெல்வது இயல்பு,
உணர்ச்சியை அறிவால்
வெல்வதுதான் சிறப்பு,
அறிவே இன்பம், அறிவே ஆற்றல்
அறிவே அணிகலனென
அனைத்துக்கும் பொறுப்பு

அறிவு மனிதனை
மானுடத்தன்மையிலிருந்து
மேலும் உயர்த்த வேண்டும்,
இதயத்தோடு கலக்க வேண்டும்
சிந்திக்க வைக்க வேண்டும்
அப்போதுதான் செயல்பாடு
அனைத்தும் சிறப்புப்பெறும்

எழுதியவர் : கோ. கணபதி. (10-Mar-19, 3:24 am)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 32

மேலே