ராசாவே உன்ன நெனச்சி

#ராசாவே உன்ன நெனச்சி..

ஆத்தோரம் வயலோரம்
அந்திசாயும் அந்நேரம்
காத்தாட அவனோட
காலாற நடக்கையிலே
படபடன்னு மனசுக்குள்ளே
பட்டுப்பூச்சி சிறகடிக்கும்..!

தோப்பிருக்கும் தொரவிருக்கும்
மா கொய்யா பழுத்திருக்கும்
அணில் கிளியும் கடித்திருக்கும்
அதை மாமன் ருசிச்சித்தர
அடைத் தேனும் கலந்ததுபோல்
ஆஹா..ஹா.. இனித்திருக்கும்..!

புல்லு வெளஞ்ச வரப்பிருக்கும்
நெல்லுமணி கனத்திருக்கும்
ஆத்து தண்ணி குளிச்செழுந்த
காத்துரசி உடல் சிலிர்க்கும்
மாமன்மடி சாஞ்சிக்கிட்டா
மனசெல்லாம் பூரிக்கும்..!

பம்பு செட்டு எறைச்சிருக்கும்
தொட்டித்தண்ணி நெறைஞ்சிருக்கும்
சுத்தும் முத்தும் பார்த்துப்புட்டு
சோடியாக முங்கிடுவோம்
முங்கியெழுந்த நேரத்துல
தொட்டித்தண்ணி சுட்டிருக்கும்..!

வந்த சனம் போன சனம்
வியாபாரி எவனெவனோ
அதிகாரி போலீசின்னு
அத்தனையும் கூட்டியாந்து
பச்சை மண்ண புடிக்கிக்கிட்டான்
பரிதவிச்சி நிக்குறனே..!

கைமாறி போனபூமி
தடம் மாறி போன வாழ்க்கை
பட்டணந்தான் போன ராசா
எட்டி வந்து காணலியே
முட்டி மோதும் நெனப்புலதான்
கொட்டும் மழை கண்ணுலதான்..!

#சொ.சாந்தி

எழுதியவர் : சொ.சாந்தி (11-Mar-19, 3:19 pm)
சேர்த்தது : C. SHANTHI
பார்வை : 37

மேலே