மழைப்பெண்கள் - -------------------சிறுகதை

வெளியே மழை பெய்து கொண்டிருந்தது. மெல்லிய தூறல் போட்டபடி இருக்கும் மழை திடீரெனச் சினங்கொண்டு சடசடவெனப் பெய்வதும் பிறகு அடங்கி தூறலுக்குத் திரும்புவதுமாய் போக்கு காட்டிக் கொண்டிருந்தது. தகர ஷீட் மீது பட்டுத்தெரிக்கும் மழைத்துளிகள் ஜல்லிக் கற்களை கொட்டி விட்டதைப் போன்ற இரைச்சலை அந்த அறைக்குள் எழுப்பியது. இந்த மழையிலும் கூட கனப்பு அடுப்பாய் தகித்துக் கொண்டிருக்கிறது அறை. மின்விசிறியின் இயக்கம் இல்லாமல் நிமிடத்தைக் கூட கடக்கவியலாத அறையின் வெம்மை கோடைக்கால உஷ்ணத்தை தமிழ்செல்வனுக்குள் பாய்ச்சியது. ஜன்னலின் வழியே உட்புகும் வெளிச்சம் மட்டுமே அறையை நிரப்பியிருக்க அறை சற்று இருட்டாக இருந்தது.

குறுகலான அச்சாலையில் இருபுறங்களும் எழுந்து நிற்கும் கட்டடங்கள் ஒன்றின் மூன்றாவது மாடியிலிருக்கிறது தமிழ்செல்வனின் சின்னஞ்சிறிய அறை. எவ்வித ஒழுங்கு முறைக்குள்ளும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாத அவ்வறையின் ஜன்னல் அருகே சலனமற்று அமர்ந்திருந்தவனின் பார்வை அச்சாலையை வெறித்திருந்தது. அநாமத்துக்கும் வெறிச்சோடிக் கிடக்கும் அச்சாலையில் குடையைப் பிடித்தபடி நடைபயின்று வரும் வெகு சிலரைப் பார்ப்பது சிறு ஆறுதலாய் இருந்தது.

சாலையின் குழிகளில் தேங்கியிருந்த மழை நீர் சாலையை சமப்படுத்தியது போலிருந்தது. இச்சாலையில் ஏதேனும் வாகனம் அதிவேகமாகச் சென்றால் கணிசமான பேர் மீது நிச்சயம் சேறு கலந்த நீரை வாரி இறைத்து விட்டுத்தான் போகும். மழை நாட்களில் அப்படியொரு துயரும் இருக்கிறது.

அச்சாலை நெடுகில் எங்கிலும் மரங்கள் இல்லாதது ஓர் வெறுமையை அளிப்பதாக இருந்தது. மழைக்குப் பிறகான அசைந்தாடலில் தன் கிளைகளில் தேங்கியிருக்கும் மழைத்துளிகளை அதன் வழி செல்வோர் மீதெல்லாம் தெளிக்க மரங்களால்தானே முடியும். ஈரம் படிந்திருக்கும் சாலையில் தன் பூக்களை உதிர்த்து அதில் நடந்து செல்லும் பல ஆனந்திகளின் உதட்டோரப் புன்னகையை அவைகள்தானே சாத்தியப்படுத்தும் என்றே அவனுக்குப்பட்டது.
அப்போது ஆனந்தியின் நினைவுகள் வந்தமர்ந்து கொண்டது அவனுக்குள். இது வாடிக்கைதான். அவளின் நினைவுகளை அவ்வப்போது கிளறி விட்டுச் செல்லும் கருவி ஒன்று வெவ்வேறான வடிவங்களில் தன்னைச் சுற்றி இயங்கியபடியே இருப்பதாக அவன் நினைப்பதுண்டு.

அவன் ஆனந்தியின் முகமறிந்தது ஒரு மழை நாளில்தான். வேலப்பா கலை அறிவியல் கல்லூரியில்தான் அவன் இளங்கலை வரலாறு படித்தான். அச்சிறுநகரின் ஒதுக்குப்புறத்தில் தோட்டங்காடுகள் சூழ தனித்து விடப்பட்டதைப் போல் அமைந்திருந்தது அக்கல்லூரி. அதன் வாயிலிலிருந்து வளாகக் கட்டடங்களை இணைக்கும் தார்ச்சாலையின் இருபுறங்களிலும் குல்முகர் மரங்களும், புங்கை மரங்களும் அணி சேர நின்று நிழல் பரப்பிக் கொண்டிருக்கும். அக்கல்லூரிக்கு அடித்தளமிட்ட போதே அம்மரங்களும் வேரூன்றப்பட்டு விட்டன. கட்டடங்களுடன் சேர்ந்து அவைகளும் வளர்ந்தன. நான்கு தளங்களாக கட்டடம் எழுந்து நின்ற போது அவைகள் கம்பி வேலிக்குள் இருந்து தலையை நீட்டிக் கொண்டிருந்தன. முட்டி எழுந்து அவைகள் கிளைகள் பரப்பி அச்சாலையை நிழற்சாலையாக்கின. அவற்றிலிருந்து உதிரும் பூக்களும், இலைகளும், காய்களுமாய் எப்போதும் அச்சாலை கதம்பமாய் இருக்கும். சாலையின் இருபுறங்களிலும் திண்டுகள் அமைக்கப்பட்டிருந்தன. கூட்டாகச் சேர்ந்து வெட்டிக் கதை பேச அவை இடம் தந்தன. நான்கு பையன்கள் சேர்ந்து விட்டால் போதும். தறிகெட்டு ஓடும் மாட்டைப் போல பேச்சு தீர்மானமில்லாத திசையிலெல்லாம் பயணிக்கும். அவற்றுள் பெண்களே பிரதான பேசுபொருளாக இருப்பார்கள். வாழ்வின் எத்தகைய நெருக்குதல்களுக்கும் ஆளாகாத அப்பருவத்தில் பெண்களை அலசுவதைத் தாண்டிய இன்பம் வேறென்னதாக இருக்க முடியும்? என்ற கேள்வியே அவர்களை வியாபித்திருந்தது.

மழை பெய்து அடங்கிய ஒரு காலைப்பொழுதில் கல்லூரி சற்று பரபரப்பு குறைந்தபடி இயங்கிக் கொண்டிருந்தது. மழை ஈரம் படிந்த சாலை கன்னங்கரேலென்றிருந்தது. குளிர்ந்த காற்று மெலிதாக வீசிக்கொண்டிருக்க அசைந்தாடும் மரக்கிளைகளில் இருந்து பூக்கள் உதிர்ந்த வண்ணம் இருந்தன. அக மகிழ்ந்து போனான் தமிழ்செல்வன். மழை பெய்து ஓய்ந்த பிறகு சுற்றுப்புறம் கொள்ளும் நிசப்தம் அவனுக்குப் பிடித்தமானது. அன்றாடம் வந்து போகிற கல்லூரிதான். ஆனால் மழை நாட்களில் மட்டும் அது புது உரு கொள்வதாகவே அவனுக்குத் தோன்றியது. அப்போது யாரிடமும் பேசவில்லை. தனது சகாக்களின் கலகலப்பான உரையாடலிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டவனாய் அமர்ந்திருந்தான்.

மழை கண்ட முகங்கள் மென் நடையிட்டு கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்தன. அவற்றுள் பரிட்சயமான முகங்கள் அவனைக் கடந்த போது மெலிதாகப் புன்னகைத்து விட்டுப் போயின. ஆர்ச்சை நோக்கி அவன் பார்வை திரும்பிய போதுதான் அவளைப் பார்த்தான். கருமேகங்களுக்குள் வெட்டிச் செல்லும் மின்னலைப் போல கருமை படர்ந்த அத்தார்ச்சாலையில் வெள்ளை நிற சுடிதாரணிந்து அவள் வந்து கொண்டிருந்தாள். இரண்டு லாங் சைஸ் நோட்டுகளையும், செவ்வக வடிவிலான ஸ்டீல் டிபன் பாக்ஸையும் தாங்கியிருந்தாள். மழையால் பொலிவு பெற்றிருக்கும் அச்சாலையில் அவள் ஒவ்வொரு அடியாக முன்னேறி வர வர நுணுக்கமாய் அவளை அளக்க முடிந்தது. திருநீறு பூசிய நெற்றியில் புள்ளி அளவில் கருப்பு நிற ஸ்டிக்கர் பொட்டு. ஒற்றை சடைப்பின்னலை முன்புறமாக இருத்தியிருந்தாள். அது மார்பகத்தின் மேட்டில் ஏறி இறங்கி இடை வரையிலும் நீண்டு கிடந்தது. மொட்டுகள் விரிந்த நிலையில் முல்லைப் பூச்சரம் கொண்டை ஊசியின் தாங்கலில் நின்று கொண்டிருந்தது.

தமிழ்செல்வன் அவளை மட்டுமே கண்ணுற்றிருந்தான்.
குளிரை அவ்வப்போது உணரும்போது உடலைக் குறுக்கியும் விரித்தும் தன்னை நனைத்த துளிகளை சிலுப்பித் தள்ளுகிற ஆட்டுக்குட்டியைப் போல் அவள் வந்து கொண்டிருந்தாள். எதிர்சென்ற யாரோ ஒருத்திக்கு அளித்த பதில் புன்னகையில் தெற்றுப்பல் அழகாகத் தெரிந்தது. வாழ்தலுக்கான அர்த்தங்கள் யாவும் அந்தப் புன்னகைக்குள் புதையுண்டு கிடப்பதாக எண்ணிச் செத்தான். சாந்தத்தின் வடிவுகள் அத்தனைக்குமான அவளது வதனம் அவனை எல்லாவற்றிலிருந்தும் அந்நியப்படுத்தியது. அவள் மீது மட்டுமே அவனது பார்வை நிலை கொண்டிருந்தது. சட்டென வெட்டி மறையும் மின்னலைப் போல ஒரு நொடிப்பொழுது மாயமாக அவள் அவனை ஆக்கிரமித்துக் கொண்ட கணத்தை அது குறித்த பிரக்ஞையின்றிக் கடந்தான்.
அவள் அவனைக் கடக்கும் கண நேரத்தில் குல்முஹர் மரம் உதிர்த்த சிவப்புப் பூ ஒன்று அவளது தலைமயிர் மேல் விழுந்து தனது பயணத்தை நிறைவு செய்தது. கைக்குட்டையை மடக்கி வைத்திருந்த இடக்கையால் அப்பூவை வருடித் தள்ளினாள். ஒரு ஸ்பரிசத்தினை இழந்த பூ கீழே விழுந்து செத்துப் போனது. அவள் அவனைக் கடந்து போனாள்... கவர்ந்தும் கூட. விளங்கிக் கொள்ள முடியாத அந்த உணர்வின் தவிப்பிலிருந்து வெளிவராதவன் மெல்லச் சென்று அவள் ஸ்பரிசம் கண்ட பூவை எடுத்தான். யாருமறியா வண்ணம் புத்தகத்துக்குள் ஒளித்து வைத்துக் கொண்டவன் வளாகத்தை நோக்கி நடையிட்டான்.

அவள் பெயர் ஆனந்தி என்பதையும் அவள் இளங்கலை இயற்பியல் படிக்கிறாள் என்பதையும் அவன் அறிந்து கொண்டான். அவளை எதிர்கொள்ளலில் உண்டாகும் பரவசத்தில் மூழ்கித் திளைக்கத் தொடங்கினான். குறுகிய காலத்திலேயே அவள் இருக்குமிடத்தில் அவனைக் காணலாம் என சிலர் மனதுக்குள்ளாக முனகிக் கொள்ள வைத்தது அவனது பின் தொடரல். சிலவற்றுக்குக் காரணங்கள் தேவைப்படுவதில்லைதானோ என்று யோசித்தான். இந்த மயக்கத்துக்கு என்ன பெயரை சூட்டுவது என்கிற குழப்பமும் அவனுக்குள் இருந்தது. முதலில் அவளிடம் தான் அறிமுகமாக வேண்டும். பின்னர் அவள் வாழ்வுக்குள்ளான தனது பங்கினை நிறுவ வேண்டும் என்கிற எண்ணம் மட்டுமே அவனுக்குள் முதன்மையானதாக இருந்தது. அவளது அண்மைக்கான சாத்தியங்களைத் தேடித் துலாவினான். அவள் மதிய உணவருந்தும் குழுவில் தன்னை இணைத்துக் கொள்வதற்கான முன்னெடுப்புகளின் வெற்றியாக அவனும் அதன் அங்கமானான். அந்நாளிலிருந்து தன் மீதான பிம்பத்தை அவனே கட்டமைத்து அவளுக்குப் பிரதிபலித்தான். கண நேரங்களில் அவளை சிரிக்க வைக்கவும், சற்றே இதழ்கள் மலர்ந்து மெல்லிய புன்னகையை வெளிப்படுத்த வைப்பதுமே அவனது உரையாடலின் மிக முக்கிய நோக்கமாக இருந்தது. அக்குழுவினருக்கே அவன் அணுக்கமானான்.

ஆனந்திக்கும் அவனுக்குமான உரையாடல்கள் எல்லாம் மதிய உணவருந்தும் மேசையோடு நிறைவு பெற்று விடுவதை அவன் விரும்பவில்லைதான். எல்லையில்லாப் பெருவெளியென விரிந்து கிடக்கும் இந்த வாழ்வின் தனது பங்காளி அவள் என்பதை அடியுரைத்துச் சொல்ல வேண்டும் என்று தோன்றும். அவளிடம் தனக்கான முக்கியத்துவத்தினை அறியும் அவனது முயற்சிகள் அனைத்தும் ஏமாற்றத்தையே தந்தன. அவளின் ஒவ்வொரு அசைவும் தனக்கானவை என்கிற எண்ணங்களை எல்லாம் அவள் தன் இயல்பின் வழியே பஸ்பமாக்கிப் போனாள். தமிழ்செல்வனால் அவளைப் புரிந்து கொள்ள முடியவில்லை. புதையலுக்கான கனவொன்றுக்குள் சிக்குண்டவனாய் அவன் தினம் தினம் தவித்தான். தவிப்புகளை வார்த்தைகளாக வெளித்தள்ளி விட எத்தனித்தான்.

அவை திரண்டு வந்தடைந்தன ஒரு வெள்ளைத்தாளுக்குள்…

‘‘சில கணங்களை எழுதிட முடியறது இல்ல ஆனா எனக்கு எழுதுறத தவிர வேற வழியில்ல அதுக்கான முயற்சிதான் இது. சில கிறுக்கல்கள் நல்லா இருக்குனு தோணும் அதுக்கு காரணம் அந்த நிமிஷத்தோட மனநிலைதான். என்ன எழுத வெச்சது எது? சத்தியமா நீதான்... இல்லை உன் மேலான காதல்... எப்படி இத பிரிச்சுப் பார்க்குறதுன்னு தெரியல… இது ஒருவிதமான கிறுக்குத்தனம்னு சொல்லலாமா? பிரபஞ்ச உருவாக்கத்த சில தியரிகளை வெச்சு சொல்லிடலாம் ஆனா காதலை? கிட்டதட்ட இரண்டுக்கும் சின்ன வித்தியாசங்கள் இருக்கு. பிரபஞ்சம் எப்படி உருவாச்சுன்னு தெரியும் ஆனா ஏன் உருவாச்சுங்கிறதுக்கு பதில் இல்லை. ஆனா இந்தக் காதலைப் பொறுத்தவரைக்கும் எப்படி? ஏன்? இந்த ரெண்டு கேள்விக்குமே பதில் இல்லை. இந்த பிரிவும் துயரமும்தான் காதலா? கேள்வியாவே கேட்டுகிட்டு இருக்கேன் பதில் நீ தான்னு தெரிஞ்ச பின்னாடியும். இப்ப மணி 3.21, தூங்காம விழிச்சிட்டு இருக்கேன். இந்த நேரத்தில எதையாவது சொல்லனும்னு தோணுது. இது கொஞ்சம் பைதியக்கரத்தனமா கூட இருக்கலாம் ஆனா சில நேரம் இப்படிதான் இந்த மனசு எதையாவது பேசவோ இல்ல பினாத்தவோ செய்யுது. இந்த நேரத்துல கூட எனக்கு இருக்க ஒரே ஆறுதல் என் ஞாபகத்துல இருக்க உன் சிரிப்புதான். ஒரு வேலை நீ என் கூட இருந்திருந்தா இப்போ உன்கூட ஒரு கப் டீ சாப்பிடனும், அப்படியே உன் கூட நடக்கணும்.... ஒரு வேளை நாம ரெண்டுபேரும் சந்திச்சா என்ன பிடிக்காம போக நிறைய காரணம் இருக்கு ஆனா என்னை ஏத்துக்க என் காதல் மட்டும்தான் இருக்கு. இன்னைக்கு walk to remember-னு ஒரு படம் பாத்தேன் அதில் வந்த ஹீரோ தன் காதலையும், காதலியையும் நினைசிகிட்டே நடந்து போவான். நானும் அவனை மாதிரிதான் இருக்கேன். ஒரு குல்முஹர் பூ எல்லாருக்கும் அவங்க ஸ்கூல், காலேஜ், நண்பர்கள்னு எவ்வளோவோ ஞாபகபடுத்தும் எனக்கு உன்னையும் சேர்த்து. உன்னை தொட்ட அந்த குல்முஹர்க்கு உன்னோட வாசம்தான் தெரியுமா? அந்த பூவுக்கு இருந்த அதிர்ஷ்டம் எனக்கு இல்லாம போச்சு ஆனா அந்த பூ என்கிட்ட இருக்கு இன்னும் உன் ஸ்பரிசத்தோட…’’

தவிப்பு கொண்ட மனதின் கிறுக்கல்கள் எந்த ஆழத்துக்கும் செல்லும் என்பதைப் போல் அவன் எழுதிக்கொண்டே போனான். புரியாமையின் உருவாகவே இருக்கும் அவளிடம் தன்னையேனும் புரிந்து கொள்ள வைக்கும் வேட்கை கொண்டு அக்காகிதத்தை எழுத்தால் நிரைத்தான். எழுதி மடிக்கப்பட்ட அக்காகிதத்தை அவளிடம் கொடுக்க அவன் முற்பட்ட போதெல்லாம் அவனே அதிலிருந்து பின் வாங்கவும் செய்தான். ‘மன்னியுங்கள் சகோதரா’ என்று அக்கடிதத்தை அவள் திரும்பக் கொடுப்பது போலான எதிர்மறை கற்பனைகள் அவன் பதட்டத்தைக் கூட்டும். நிராகரிப்பின் ஏமாற்றம் என்பது தாங்கிக்கொள்ளவியலாத பெருவலி. அக்கொடிய வலி பூதாகரமாக நின்று அவனை அச்சுறுத்திக் கொண்டே இருந்தது. அவளுடன் தனியே பேசுவதற்கான சந்தர்ப்பத்தை எதிர்நோக்கிக் காத்திருப்பான். அரிதாகவே கிடைக்கும் அப்படியொரு வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ளத் தெரியாத அறிவிழியாய் எதையோ உளறிக் கொட்டிவிட்டு வந்து விடுவான். அவளிடம் எத்தனையோ பேசியிருக்கிறான். எப்போதும் புன்னகையுடனேயே அதை அவள் எதிர்கொண்டிருக்கிறாள். இந்த விண்ணப்பத்தை மட்டும் அப்படியாக வெளிப்படுத்தி விட இயலாத காரணம் புரியாமல் குழம்பித் தவித்தான்.

அந்தக் காகிதம் இவன் அறையிலேயே பல காலம் முடங்கிக் கிடந்தது. அவளை எவ்வளவு அண்மையாக உணர்ந்தாலும் சில நொடிகளிலேயே அவள் அந்நியப்பட்டு நகர்ந்து கொண்டிருந்தாள். ஒரு தீர்மானத்துக்குள் கொண்டு வந்து விட முடியாதபடி அவள் தன்னை வெளிப்படுத்தினாள். அவள் ஒவ்வொருவரிடமும் ஒரு எல்லையினை வகுத்துக் கொண்டுதான் பழகினாள். தமிழ்செல்வனும் அதற்கு விதிவிலக்கானவனாய் இல்லை. ஏக்கப்பார்வை வீசியபடி அவனும் அந்த எல்லையின் விளிம்பில் நின்று கதறிக் கொண்டிருந்தான். அந்த ஏமாற்றம் அவனுக்குள் ஏற்படுத்திய வெறுமையை அவன் தன் மௌனத்தின் வழியே காண்பித்தான். ‘‘என்னாச்சு இவனுக்கு’’ என்றே பலரும் பேசிக்கொண்டார்கள். விரக்தி நிலைக்குள் தான் ஆட்பட்டிருப்பதை அவன் அறிந்த போதுதான் அதுவும் நிகழ்ந்தது.
அவளது வகுப்பின் சக மாணவனுக்கும் அவளுக்குமான ஊடலை மதிய உணவருந்துதலின்போது அவளே அதிகாரப்பூர்வமாக அறிவித்தாள். தங்க நாற்கர சாலையில் அடிபட்டுச் செத்த நாயின் மேலேறிச் செல்லும் வாகனங்களைப் போல் இந்த வாழ்வும் சூழலும் தன்னை சக்கையாய் நசுக்கிக் கொண்டிருப்பதாகத் தோன்றியது அவனுக்கு. கண்ணீர் முட்டிக் கொண்டு நிற்க அவசரமாய் அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றான். கழிவறைக்குள் சென்று கேவிக்கேவி அழ வேண்டும் போல இருந்தது. முகத்தை மட்டும் கழுவிக்கொண்டான்.

நிழற்சாலை ஓரத் திண்டில் அமர்ந்து குல்முஹர் பூ ஏதேனும் உதிர்ந்து விழுகிறதா என்பதைப் போல் அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தான். அவ்வப்போது அக்கரிய நிழற்சாலையின் மீதும் அவன் பார்வை விழுந்து கொண்டே இருந்தது. அப்போது மெல்லிய தூற்றலாய் மழை பெய்தது. சற்று நேரத்துக்குள்ளாகவே அவன் ஒரு விடுதலை உணர்வை அடைந்தான். அவளின் மீதான தனது தவிப்புகளிலிருந்தான விடுதலை. மனதை ஆற்றுப்படுத்திக் கொள்ள முற்பட்டான். அதனைத் தவிர வேறு வழியும் இல்லை என்பதை மனதுக்குள் சொல்லிக் கொண்டான். மௌனம் என்றைக்குமே பதிலாகி விடாது எனக்கூறி சுற்றி உள்ளவர்கள் எல்லோரும் அவனை நோக்கி ஏளனமாகச் சிரிப்பது போன்றான பிரம்மை ஏற்பட்டது. முடங்கிக் கிடக்கும் அந்தக் காகிதம் தன்னை சபித்தபடியே அதன் வார்த்தைகளை உதிர்த்துக் கொண்டிருப்பதாக எண்ணியதும் சோகம் அவனைக் கவ்விக் கொண்டது. தன் அகத்துக்குள்ளேயே அவளின் அணுக்கத்துக்கான கோரிக்கை அறையப்பட்டுக் கிடப்பதை அவன் தாமதமாகத்தான் உணர்ந்தான். நேரம் தாழ்த்திப் புரிந்து கொள்ளப்படுபவைகள் எல்லாமே அநாவசியமானவை என்று புத்திக்கு உரைத்தது. அவன் மனநிலை அப்போது யாரிடமேனும் தனது கிறுக்குத்தனத்தைப் புலம்பித் தள்ள வேண்டும் என்பதாகவே இருந்தது. ஏன் இது நடக்க வேண்டும்? புரியவில்லை. அன்றைக்கொரு மழைநாளில் கருமையைப் போர்த்தியிருந்த அச்சாலையில் அவள் வெள்ளை நிற சுடிதார் அணிந்து எதற்காக வந்தாள்? அவளிடமே கேட்க வேண்டும் போலிருந்தது. மனதின் புலம்பல்கள் அனைத்தும் கேள்விகளாக உருக்கொண்டாலும் அவை அர்த்தமற்றவை என்பதை அவன் ஏனோ உணர்ந்தும் உணராததைப்போல் இருந்தான்.

காலத்தின் இயல்பே அதன் கொடூர வஞ்சனைதான். எந்த மாற்றத்தையும் நிகழ்த்தவல்லாமல் வெறும் அதன் பதிவுகளை மறுபிரசுரத்துக்கு ஆட்படுத்திக் கொண்டே இருப்பது வஞ்சனைதானே? ஆனந்தியின் நினைவுகள் அவனுக்கு அப்படியாகவே இருந்தன. இழந்த ஒன்றுக்கான ஏக்கங்களும் ஒரு வகையில் இருத்தலுக்கான அர்த்தங்களில் ஒன்றாகிப் போய் விட்டதை நினைக்கும்போது காலத்தின் பதிவுகள் அதி உன்னதமாக வெளிப்படுவதையும் அவன் உணர்ந்தே இருந்தான்.

****

ஆனந்தியின் நினைவுகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டவனாய் சாலையிலிருந்து பார்வையை விலக்கி எழுந்தான். லுங்கியை அவிழ்த்து இறுக்கிக் கட்டியவன் வெளியே இருக்கும் கழிவறைக்குச் சென்று சிறுநீர் கழித்து விட்டு வந்தான். விரிக்கப்பட்டிருந்த பாயின் தலைமாட்டில் இருந்த ‘டோட்டல்‘ சிகரெட்டினை எடுத்துப் பற்ற வைத்தான். மூன்று மிடருகள் இழுக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட புகை அச்சிறிய அறையை நிரைத்தது. மணி பார்த்தான். 5 ஐ நெருங்கிக் கொண்டிருந்தது. ‘‘சரியாக இருக்கும்’’ என்று நினைத்தவன் ஹேங்கரில் மாட்டப்பட்டிருந்த சட்டைகளில் சிவப்பு நிற கட்டம் போட்ட சட்டையை எடுத்து அணிந்தான். கருப்பு நிற பேண்டை எடுத்து மாட்டிய பிறகு லுங்கியை கழற்றி எறிந்தான். எல்லா சுவிட்சுகளும் அணைக்கப்பட்டிருக்கிறதா என்று ஒரு முறை பார்த்தவன் கதவுக்கருகே விரித்து வைக்கப்பட்டிருந்த குடையை எடுத்துக் கொண்டு கதவைப் பூட்டி விட்டுக் கிளம்பினான். படிக்கட்டில் இறங்கிக் கீழே வந்ததும் சிகரெட்டைக் விட்டெறிந்தான். அது மழைநீர் பட்டு அமிழ்ந்தது.
தார் பெயர்ந்திருந்த இடத்தில் கால் பதித்த போது பொதபொதவென இருந்தது. புதிதாக வாங்கியிருந்த உட்லேண்ட் செருப்பை இப்படி சேற்றுக்குக் கொடுக்கிறோமே என்று ஒரு நொடி அங்கலாய்ப்பு ஏற்பட்டது. அதையெல்லாம் பொருட்படுத்திக் கொள்ளக்கூடிய நிலையில் இப்போது தான் இல்லை என்று ஆறுதல்படுத்திக் கொண்டான்.

முதன்மைச் சாலையை அவன் அடைந்து வலப்புறமாகத் திரும்பினான். அப்போது ஒரு மின்னல் வெட்டி மறைய, பின்னாலேயே இடி இடித்தது. ‘’அர்ஜுனா… அர்ஜுனா ஆத்தோரம் போ’’ அவனையும் மீறியதொரு அனிச்சையாய் அவன் ரகசியம் போல் அச்சொற்களை உச்சரித்து விட்டு, யாரேனும் கேட்டிருப்பார்களா? என்று ஒரு கணம் சுற்றம் பார்த்தான். இந்த சொற்கள் இன்னமுமா ஒட்டிக் கொண்டிருக்கிறது? என்று விளங்காத புதிர் போல வினவினான். ஏதோ ஒன்றாய் இந்த ஜீவிதத்தில் எஞ்சி நிற்கிறாள் ப்ரியா.

சாந்தா காலனி என்று அறியப்படும் பத்து வீடுகள் கொண்ட குடியிருப்பில்தான் அவனது பதினைந்தாவது வயது வரை வாடகைக்கு இருந்தார்கள். எதிரெதிராக ஐந்தந்து வீடுகள் இருக்கும்படியான அமைப்பு கொண்ட அந்தக் காலனியில் அவனது வீட்டுக்கு நேரெதிர் வீடு ப்ரியாவினுடையது. பாவாடை சட்டையணிந்து, இரட்டை சடை பின்னிக்கொண்டு வெள்ளை, சிவப்பு, கருப்பு என நாளொரு வண்ணமாய் ரிப்பன் போட்டு வருவாள். பால்ய விளையாட்டுகளில் உருக்கொண்ட சிநேகிதம் அவர்களுக்குள். அவளுக்கு விளையாடுவது பிடிக்கும். அதைவிட அதில் வெற்றி பெறுவது மட்டுமே பிடித்தமானது. அஞ்சாங்கல் ஆட்டம், பரமபதம், செஸ் என நீளும் அவர்களின் விளையாட்டுப் பட்டியலில் பெரும்பாலும் அவளுக்குதான் வெற்றி. அவள் அடைந்த வெற்றிகளைப் போலவே அவனால் அளிக்கப்பட்ட வெற்றிகளும் கணிசமானவை. தோல்வியை விரும்பாதவளுக்குப் பரிசாக வெற்றியைத்தானே அளிக்க முடியும். தன்னிடம் தோற்பதையும், தன்னை வெல்வதையும் எந்த இலாப நட்டக் கணக்குகளுக்கும் சேர்த்து விட முடியாது என்றே அவன் நினைத்தான்.

அவர்கள் தினமும் பள்ளிக்கு ஒன்றாகவே அனுப்பி வைக்கப்பட்டார்கள். ஒருவர் கை கோர்த்து ஒருவர் செல்வது பள்ளிக்கூடச் சுவரில் வரையப்பட்டிருக்கும் ஓவியத்தை நினைவு கூர்வதைப் போல் இருக்கும். உலகில் பரிணமித்திருக்கும் உயிர்கள் யாவும் அவளுக்கு பிடித்தமானவையாக இருந்தன. அவர்களின் காலனிக்கு அடுத்த பள்ளத்து மேட்டில் தெருநாய் ஈன்றிருந்த குட்டிகளில் கடுவனாய்ப் பார்த்து ஒன்றைத் தூக்கி வந்து கொடுத்தான் தமிழ்செல்வன். வார்த்தைகள் வராமல் கண்ணீர் முட்ட அக்குட்டியை வாங்கிக் கொண்டவள் மூக்கோடு மூக்கு உரசினாள். காது மடல்களை இதமாய் வருடிக் கொடுத்தபடி மடியில் கிடத்தினாள். ‘‘இவனுக்கு நீதான் அப்பா... நாந்தான் அம்மா... சரியா?’’ எனக் கொஞ்சல் மொழியில் கேட்டாள். அவனும் சரியெனத் தலையசைத்தான். ‘‘இவனுக்கு என்ன பெயர் வைக்கலாம்’’ என்றாள். சற்று யோசித்தவன் குங்ஃபூ முத்திரை போல் கையை வைத்தபடி ‘புரூஸ்லீ’ என்றான்.

‘‘என்ன பேர் இது’’

‘‘புரூஸ்லீயத் தெரியாதா?’’

‘‘தெரியாதே’’

‘‘அவரையெல்லாம் யார்னாலயும் அடிக்கவே முடியாது. அவர் கூட சண்டப் போட்டவங்க நிறைய பேர் அடிதாங்காம செத்துப் போயிருக்காங்க’’

‘‘அப்படியா’’

‘‘ஆமா... அவர் காட்டெருமையை கழுத்துல இழுத்துக் குத்துனாரு பாரு... பொளந்துகிட்டு கை இன்னொரு பக்கம் வந்துடுச்சு’’

ஆச்சரியம் தாளாமல்

‘‘ஆமாவா’’ என்றாள்.

‘‘உண்மையாத்தான் சொல்றேன்... தெரியுமா... வைரத்தை அரைச்சு பால்ல கலந்து கொடுத்து அவரைக் கொன்னுட்டாங்க’’

‘‘எதுக்கு’’

‘‘அவரை யார்னாலயும் அடிச்சு ஜெயிக்க முடியலை. அதனாலதான்’’ என்றான்.

இதுவரை கேள்விப்பட்டே இருக்காத இதுமாதிரியான செய்திகளின் உண்மைத்தன்மை பற்றியெல்லாம் யோசிக்காத அக்குழந்தை அவற்றை வியப்புடன் கேட்டுக் கொண்டது. அவனைப் போலவே அவளையும் புரூஸ்லீயின் ரசிகையாக்கி விட்ட பின் இருவரும் அந்த நாயை புரூஸ்லீ என்றே கூப்பிட்டனர்.

புரூஸ்லீக்குப் பற்கள் வலுப்பெறும் வரையிலும் பால் மட்டுமே கொடுத்து வந்தனர். நில்லாமல் வாலை ஆட்டிக் கொண்டு எந்நேரமும் அவளை மெல்லக் கடிப்பதும், நகங்களால் பிராண்டுவதுமாக புரூஸ்லீ சேட்டை செய்து கொண்டிருந்தது. அவள் அப்பாதான் புதன்கிழமை சந்தையில் சங்கிலி ஒன்றினை வாங்கி வந்து அதனைக் கட்டிப் போட்டார். சாப்பிடும் நேரம் போக ப்ரியாவுடன் விளையாடும் நேரம் தவிர்த்து அது சங்கிலி அனுமதிக்கும் எல்லைக்குள் மட்டும் உலவிக்கொண்டிருந்தது.
அன்றொரு மழைநாளில் அவர்கள் இருவரும் புரூஸ்லீயுடன் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அது கடிக்க முற்படும்போதெல்லாம் அவன் அதன் நெற்றிப்பகுதியில் அறை விட்டான். ‘‘இப்ப இருந்தே இதை கடிக்காம பழக்கணும்’’ என்று அதற்கு விளக்கமும் கொடுத்தான். திடுமென பெருஞ்சத்ததோடு இடி இடித்தது. காதைப் பொத்திக் கொண்டு ‘‘அர்ஜுனா அர்ஜுனா ஆத்தோரம் போ’’ என்று சொல்லிக் கொண்டே வீட்டுக்குள் ஓடி கட்டிலுக்கடியில் உட்கார்ந்து கொண்டாள் ப்ரியா. அவள் பின்னாலேயே அவனும் ஓடி அவளுக்கருகே குனிந்தவாக்கில் உட்கார்ந்து கொண்டான். மந்திரம் போல அவள் அர்ஜுனரை ஆத்தோரம் போகச் சொல்லிக் கொண்டே இருந்தாள்.

‘‘இப்படி சொன்னா என்ன ஆகும்’’

‘‘இடி இடிக்குறப்போ இது மாதிரி சொன்னோம்னா அது ஆத்தோரம் போயிடுமாம். நம்ம மேல விழாதாம்’’

‘‘யாரு சொன்னா இதை’’

‘‘என் க்ளாஸ்மெட் சிவகாமிதான் அன்னைக்கு சொன்னா... இடி இடிக்குறப்பவெல்லாம் அவ இப்படித்தான் சொல்லுவாளாம்’’

‘‘அப்படின்னா ஆத்தோரத்துல இருக்கிறவங்க மேல இடி வுழுந்தா பரவாயில்லையா’’ என்றான்.

அவள் சற்று தடுமாறி

‘‘அப்படியில்லை... நம்ம மேல விழுகாதுல்ல’’ என்றாள்.

‘‘அர்ஜுனா... அர்ஜுனா... ப்ரியா மேல விழு.... அர்ஜுனா... அர்ஜுனா... ப்ரியா மேல விழு’’ என்று அவனும் மந்திரம் போல உச்சரிக்க ‘‘டேய் லூசு போடா’’ என்று அவள் சிணுங்கினாள்.

பள்ளி முடிந்தும் வீடு திரும்ப முடியாதபடியாய் மழை வாட்டிக் கொண்டிருந்தது. நின்றதும் போகலாம் என வகுப்பறை வாயிலிலேயே காத்திருந்தவளை ‘‘நனைஞ்சுக்கிட்டே போலாம் வா’’ என்று இழுத்துக் கொண்டு போனான். அவளின் வெள்ளைச்சட்டை மழைத்துளிகளின் நீர்மையினால் கண்ணாடியின் தன்மைக்கு மாற்றம் கண்டிருந்தது. அதன் வழி தெரிந்த அங்கங்களை எவ்வித உணர்ச்சித் தூண்டுதலும் இன்றிப் பார்த்த அப்பருவம்தான் எத்தனை மேன்மையானது.

‘‘நனையைப் புடிச்சிருக்கா’’ வேகமாக நடையிட்டபடியே அவளிடம் கேட்டான்.

‘‘புடிச்சிருக்கு... ஆனா அம்மாகிட்ட அடி வாங்கிடுவேனோனுதான் பயமா இருக்கு’’ என்றாள்.

‘‘அதெல்லாம் வாங்க மாட்ட...’’ என்று தைரியம் கொடுத்தான்.

இருவரும் காலனியை நெருங்கும்போதுதான் அதன் வாசலின் முன் உள்ள காகிதப் பூ மரத்துக்கு அடியில் சிலர் குடைகள் தத்தம் குழுமியிருப்பதைப் பார்த்தனர். துர்நிகழ்வுக்கான அறிகுறியைப் போல அவர்கள் கீழே எதையோ பார்த்துக் கொண்டிருந்தனர்.

‘‘எழவெடுத்த நாய் எவன்னு தெரில’’ ப்ரியாவின் அம்மா குரல் அச்சலசலப்பிலும் தனியாகக் கேட்டது. நடையைத் துரிதப்படுத்தி இருவரும் கும்பலுக்கு அருகே சென்றனர்.

ப்ரியாவின் அம்மா அவளை ஓடி வந்து அணைத்துக் கொண்டு ‘‘நீ.... பார்க்காத’’ என்று சொல்லியபடி அவள் முகத்தை வயிற்றுக்குள் புதைத்துக் கொண்டாள். விசயத்தின் தீவிரத்தை உணர்ந்த தமிழ்செல்வன் வேகமாய் முன்னகர்ந்து போய்ப் பார்த்தான்.

பின்னங்கால்கள் ஒடிந்து குருதி பரவ புரூஸ்லீ வாழ்தல் நிமித்தம் போராடிக் கொண்டிருந்தது. அதன் இறுதி சுவாசத்தை எதிர்நோக்கிக் காத்திருப்பது போல் ஏதும் செய்யாமல் அவர்கள் வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

‘‘ஒரு கார்க்காரன் வேகமா வந்திருப்பான் போல... மழையில கண்ணு மண்ணு தெரியாம அடிச்சுத் தூக்கிட்டான்’’ என அங்கிருந்தவர்களில் யாரோ, யாருக்கோ சொன்னது கேட்டது. கூடவே ப்ரியாவின் அழுகையும்.
பீடித்துக் கொண்ட அந்தப் பெருஞ்சோகத்தினுள்ளேயே அவள் நீண்ட நாட்கள் அடைபட்டுக் கிடந்தாள். அவளைத் தேற்றுவதற்கான அவனது எத்தனிப்புகள் அனைத்தும் குறி தப்பிய அம்பாய் எங்கோ சென்று விழுந்தன.

‘‘தமிழு... அன்னைக்கு மட்டும் மழை பெய்யாம இருந்திருந்தா புரூஸ்லீ இருந்திருப்பான்ல’’ என்பாள்.

அவன் பதிலேதும் பேச மாட்டான். புரூஸ்லீயின் நினைவுகள் அவளிடம் மேலோங்கும்போதெல்லாம் அவளையும் மீறி கண்ணீர் பீறிட்டு வரும். முடிந்தவரை அதற்கான வாய்ப்புகளைத் தவிர்க்கவே பார்ப்பான்.
பாவாடை சட்டையிலிருந்து அவள் தாவணிக்கு மாற்றம் கண்டபோது எல்லாமே மாறிவிட்டது. ‘‘நான் வயசுக்கு வந்துட்டனாம்... உன் கூடவெல்லாம் அளவாத்தான் பேசனுமாம்... அம்மா சொல்லுச்சு’’ என்று சொல்லிச் சென்றாள். நட்பு என அறியப்பட்ட அந்த உறவே புதிராக மாறி நின்றது. அதன் பிறகு அவர்கள் எதிர்கொள்ளும்போதெல்லாம் தத்தம் சம்பிரதாயச் சிரிப்புடனேயே கடந்து போனார்கள். தமிழ்செல்வனால் அதனை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. ‘‘நான் என்ன செஞ்சேன் உனக்கு’’ என்று அவளை வழி மறித்துக் கேட்க வேண்டும் போலத் தோன்றியது. ஏன் பழகுகிறார்கள்? ஏன் விலகுகிறார்கள்? என்பது புரியாமல் தவித்தான்.

அவள் அவனிடத்தில் விட்டுச் சென்ற நினைவுகளை ஒரு புதையல் போல காத்து வந்தான். பத்தாம் வகுப்பு முடித்ததுமே அவளை சத்தியமங்கலத்துக்குப் பக்கத்தில் எங்கோ கட்டிக் கொடுத்து விட்டார்கள். எல்லாக் கதைக்கும் ஒரு முடிவு இருக்கவே செய்கிறது என அவன் நினைத்த பிறகு ப்ரியா அவனது குவியத்தில் இருந்து மறைந்து போனாள். ஆனாலும் அவள் வந்து போன தடயங்கள் இன்னும் தன்னிடத்தில் இருப்பதை அவன் மீண்டுமொருமுறை உறுதி செய்து கொண்டான்.

***
அவன் மயிலாப்பூர் குளம் நிறுத்தத்துக்கு வந்திருந்த போது மழை தன் வீச்சைக் குறைத்துக் கொண்டிருந்தது. குடையை மடக்கியவன் அல்லயன்ஸ் புத்தகக்கடைக்கு அடுத்து இருந்த டீக்கடைக்குள் புகுந்தான். கதகதப்பு வேண்டி கட்டஞ்சாயா வாங்கி அருந்தியபடியே வடக்கு மாட வீதியில் தன் பார்வையை இருத்தியிருந்தான். எப்படியும் இன்றைக்கு அவள் வந்திருக்கக் கூடும் என்கிற நம்பிக்கை வேர்பாய்ச்சலாய் பரவியிருந்தது.
ஒரு வெள்ளிக்கிழமை, மஞ்சள் வெயில் பரவியிருந்த மாலை வேளையில் செருப்பணியாத வெறும் கால்களுடன் கபாலீசுவரர் கோவில் பிரகாரத்தை அவன் சுற்றி வந்து கொண்டிருந்தான். மனம் ஓர் ஆழ்ந்த அமைதியைத் தேடுவதாக இருந்தது. அவனிடத்தில் எச்சலனமும் இருக்கவில்லை. எது குறித்த பிரக்ஞையுமின்றி அவன் பாட்டுக்கு பிரகாரத்தைச் சுற்றிச் சுற்றி வந்தான். தரையில் பரவியிருந்த இளஞ்சூட்டை கால்கள் உணர்ந்தபடி இருந்தன. நாசியில் கமழும் திருநீறு வாசனையும், சீராக ஒலிக்கும் மணியோசையும் அவனை எல்லாவற்றிலிருந்தும் அந்நியப்படுத்தியிருந்தது. ஒவ்வொரு முறை கோவிலுக்கு வரும்போதும் அவன் நிகழ் உலகிலிருந்து அந்நியப்பட்டுப் போவதைப் போல் உணர்ந்திருந்தான். யாருமற்ற அத்துவான வெளியில் தன்னந்தனியாக நடந்து செல்வதைப் போல் அவன் யாதுமற்று எல்லாமுமாவதாகவே உணர்ந்தான்.

கற்பகாம்பாளை தரிசித்த பின்னர்தான் கபாலீசுவரரை தரிசிக்க வேண்டும் என்பது போல் அக்கோவிலின் வரிசை அமைப்பு இருந்தது. வரிசைக்கென அமைக்கப்பட்டிருந்த கம்பிகளைத் தாண்டியும் கூட்டம் நீண்டிருந்தது. கற்பகாம்பாள் சந்நிதிக்கு நேர் எதிரே எழுப்பப்பட்டிருந்த மண்டபத்தில் பரத நாட்டிய அரங்கேற்றம் ஒன்று நடந்து கொண்டிருந்தது. பெண்ணுக்கான நளினத்தோடு எண்ணிலடங்கா பாவனைகளை வெளிப்படுத்திக் கொண்டிருந்த நாட்டியக் கலைஞரை சில நொடிப் பார்வையில் கடந்து வந்தான். மண்டபத்துக்கு முன்புறம் இருந்த அன்னதானக்கூடத்தின் முன்பாக வரிசை நீண்டிருந்தது. அவனும் அந்த வரிசையில் தன்னை இணைத்துக் கொண்டான். அன்று நெய் மணம் கமழும் கிச்சடியை தானமாக வழங்கிக் கொண்டிருந்தார்கள். தொண்ணையில் தரப்படும் சூடான கிச்சடியை வாங்கிகொண்டு ஒவ்வொருவராக விடுபட்டுச் செல்லவே கூட்டம் ஒவ்வொரு அடியாக முன்னேறிக் கொண்டிருந்தது.

‘’நிக்குற கூட்டத்தைப் பார்த்தா நமக்குக் கிடைக்கிறது சந்தேகந்தாண்டி” இவனது முதுகுப்புறத்திலிருந்து ஒரு பெண் குரல்.

சில அடிகள் தாண்டி முன்னேறிய பிறகு பகுதியளவு கிச்சடியை உள்ளடக்கியிருக்கும் பாத்திரம் கண்ணுக்குத் தெரிந்தது. சிவப்புப் புடவை அணிந்திருந்த பெண்ணொருத்தி கிச்சடியை தாராளமாக அள்ளி வைத்துக்கொண்டிருந்தாள்.

‘’கடவுள் இருக்காண்டி… நமக்கு கிச்சடி கன்ஃபர்ம்” உற்சாகம் ததும்ப அதே குரல் மீண்டும்.

‘’மானத்த வாங்காதடி” என்றது இன்னொரு பெண் குரல். அது அவள் தோழியுடையது என்பதை யூகிக்க முடிந்தது.

இவன் வரிசையில் தனக்கு முன் உள்ளவர்களை மனதுக்குள்ளாக எண்ணிப் பார்த்தான். 7 பேர் இருந்தார்கள். வரிசைப்படி எட்டாவது ஆளாக இவன் கிச்சடியைப் பெறுவான். அந்தக் கணக்குக்காக அதன் பிறகு விடுபட்டுச் செல்கிற ஒவ்வொருவரையும் அந்த எண்ணிக்கையிலிருந்து குறைத்துக் கொண்டே வந்தான்.

6,5,4,3,2,1 எண்ணிக்கை முடிந்ததும் இவன் கைக்கு தொண்ணை வந்தது. காதோரத்தில் நரை கண்டிருந்த அப்பெண்மணி கிச்சடியால் தொண்ணையை நிரைத்துக் கொடுத்தாள். வாங்கிக் கொண்டு வரிசையை விட்டு விலகித் திரும்பும்போதுதான் அவளைப் பார்த்தான்.

உற்சாகம் ததும்பிய அந்தக் குரலுக்குச் சொந்தக்காரியான அவள் பிங்க் நிற சுடிதார் அணிந்திருந்தாள். தொண்ணையைக் கையிலேந்தியபடி கிச்சடிக்காக குனிந்திருந்த அவளிடம், மாறாத புன்னகை நிலை கொண்டிருந்தது. அவளது தெற்றுப்பல் அந்தப் புன்னகைக்கு இன்னமும் அழகூட்டியிருந்தது. நெற்றியில் சிறு தீற்றலாய் குங்குமம். தொண்ணையைத் தாங்கியிருந்த இடது கை மணிக்கட்டில் சிவப்பும் கருப்புமாய் கயறுகள் கட்டப்பட்டிருந்தன. இடது தோள்பட்டையில் பருத்தி நூலால் தயாரிக்கப்பட்ட கைப்பை தொங்கியது. கிச்சடியை வாங்கியதும் நிமிர்ந்தவள் தனது தோழிக்கு இடம் விட்டு வரிசையிலிருந்து விலகித் திரும்பினாள்.

தமிழ்செல்வன் முன் நோக்கி நடக்கத் துவங்கினான். இன்னும் இரண்டு முறையாவது கோவிலை சுற்றி வருவதென்பது அவனது எண்ணமாக இருந்தது. ஊதி ஊதிச் சாப்பிட வேண்டிய சூடான கிச்சடியை காலி செய்வதற்கும் அது சரியாக இருக்கும் எனத் தோன்றியது. மெல்ல நடையிட்ட அவனை வெகு சீக்கிரத்தில் அவ்விருவரும் கடந்து சென்றனர். அவன் வேகத்தைத் துரிதப்படுத்தி அவர்களின் நிழல் போல பின்னால் போய்க்கொண்டிருந்தான். வலப்புறமாக சென்று கொண்டிருக்கும் அவளது ஒவ்வொரு அசைவுகளையும் அவனால் பார்க்க முடிந்தது. அவள் சூடான கிச்சடியை கையில் அள்ள தலைப்பட்டாள். விரல்களை அதனுள் பதித்ததும் அதன் வெம்மை தாளாமல் வெடுக்கென கையை எடுத்துக் கொண்டாள். அப்படியும் விரல்களில் பகுதி பகுதியாக கிச்சடி ஒட்டியிருந்தது. அது தந்த கடுஞ்சூட்டிலிருந்து விடுபட வேண்டி விரல்களைச் சப்பினாள். அவளின் குளிர்ந்த எச்சில்பட்டதும் வெப்பம் ஆறி அடங்கிய கணம் அவள் முகம் மலர்ந்தது.

‘’என்னடி இவ்ளோ சூடா இருக்கு’’ எனக் கேட்டாள். அக்குரலில் ஒட்டியிருந்த குழந்தைமையை இனம் கண்டவனாய் அவன் மெல்லச் சிரித்தபடியே ஒரு வாய் கிச்சடியை எடுத்து உண்டான்.

‘’ஊதிச் சாப்பிடணும் இல்லைன்னா அறுற வரைக்கும் பொறுக்கனும்… என்ன அவசரம் உனக்கு” என்று அதட்டினாள் தோழி.

‘‘நேத்தைக்கு தந்த பொங்கல் மாதிரியில்ல”

‘’எல்லா நாளும் ஒரே மாதிரி இருக்குமா?” தோழியிடமிருந்து அதே தோரணையிலான பதில் வந்தது.

அவள் எப்போதும் அப்படித்தான் போல என நினைத்துக் கொண்டான்.
ஒரு சுற்று முடிந்ததுமே பசு மடத்துக்கு எதிரே இருந்த சுற்றுச்சுவருக்கருகே இருவரும் உட்கார்ந்து கொண்டனர். அவர்களுக்கு அண்மையில் சுவற்றில் சாய்ந்தபடி தமிழ்செல்வன் அமர்ந்தான். அங்கிருந்து பிரம்மாண்டத்தின் உருவாக கோபுரக்காட்சி தெரிந்தது.
கிச்சடியைத் தின்றபடியே இருவரும் உரையாடிக் கொண்டிருந்தனர். ஸ்னேக் கேமில் முட்டையைத் தின்று வளரும் பாம்பினைப் போல அவர்களின் உரையாடலும் ஒன்றிலிருந்து ஒன்றாக வளர்ந்து கொண்டே போனது. தமிழ்செல்வன் விலக்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவளை உறுத்தாப் பார்வை. அவள் மூக்கின் வளைவும், கன்னத்தின் சதைத்திரட்சியும் அவ்வப்போது புன்னகைக்கையில் விழும் குழியுமாய் அவளது பக்கவாட்டுத் தோற்றத்தில் லயித்துக் கிடந்தான் தமிழ் செல்வன். காதின் முன்புறத்தில் இறங்கியிருந்த முடிகளும் கல் வைத்து செய்யப்பட்ட தங்கத் தோடும் அப்பிரதேசத்தையே செழிப்பாக்கியது போல் இருந்தன. அவ்வப்போது அவளது பார்வை அவன் மீது படர்வதும் உண்டு. ஒரு அந்நியனை எதிர்நோக்கும் அநாசயமான பார்வை அது. அப்போதெல்லாம் வெடுக்கென அவன் பார்வையை விலக்கிக் கொண்டான். ஒரு பெண்ணின் கூர் பார்வையை எதிர்கொள்வதற்கான ஆற்றலை தான் இன்னும் பெற்றிருக்கவில்லை என்றே நினைத்துக் கொண்டான்.

கிளம்பும் நிமித்தம் இருவரும் எழுந்தனர். அவள் சுடிதாரை இழுத்து விட்டு சரி செய்து கொண்டாள். கிச்சடி தீர்ந்த தொண்ணைகளை எடுத்துக் கொண்டு சற்று தள்ளியிருந்த ப்ளாஸ்டிக் குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு நகர்ந்தாள். அவள் நுழைவுவாயிலைத் தாண்டி வெளியே செல்லும் வரையிலும் தமிழ்செல்வன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அவள் உட்கார்ந்திருந்த இடத்தில் அவள் சூடியிருந்த முல்லையின் உதிரிப்பூ ஒன்று கிடந்தது. தமிழ்செல்வன் அதனை எடுத்து முகர்ந்து பார்த்தான். அதன் வாசத்தை அவள் வாசமாகவே உருவகப்படுத்திக் கொண்டான். கட்டுப்பாட்டினை இழந்த வாகனத்தின் சீற்றத்தைப் போல அவன் மனதின் போக்கும் இருந்தது. அவளின் அணுக்கத்தைத் தேடிப் பெறத் துடித்தது. அன்றிலிருந்து கபாலீசுவரர் கோவில் செல்வது அவனது தினசரியின் அங்கமாக மாறிப்போனது.

கோவிலுக்கு வருபவள் வடக்கு மாட வீதி வழியாக மயிலாப்பூர் குளம் பேருந்து நிறுத்தத்துக்கு செல்வாள் என்பதை அறிந்தவன் எந்தப் பேருந்தில் ஏறிச்செல்கிறாள் என்பது குறித்த அக்கறையற்றிருந்தான். இவனது எதிர்படல் ஒரு வாடிக்கையான நிகழ்வாய் மாறிப்போனதை அவள் உணர்ந்திருக்கக் கூடும் என்றே இவன் நம்பத் தொடங்கியிருந்தான். இந்த அலைக்கழிப்பும், பரவசமும் நாட்போக்கில் ஒரு அசுவாரஸ்யத்தை ஏற்படுத்தின. காலத்தின் நெருக்குதல்களால் இயல்பாகவே எழுந்திருந்த சலிப்பும், நினைவுகளின் பதிவுகளில் ஒன்றாக இவளையும் கொள்ளும் நிலையை விரும்பாத மனதின் பதைபதைப்பும் அவனை அவளிடம் வெளிப்படுத்தியே தீர வேண்டிய நெருக்குதலுக்கு ஆட்படுத்தியது. அதற்கான தீர்மானத்துக்குள் அவன் வந்து விட்டிருந்தான். நீரினை உறிஞ்சும் வேர் போல நரம்புகள் அத்தனையில் அச்சம் நீர்ப்பாய்ச்சலாய் ஓடத்தொடங்கியது. அதனை அவன் ரசிக்கவே செய்தான். அந்த மாலைக்கான இவனது காத்திருப்பு விடுதலை நாளுக்கான ஒரு கைதியின் காத்திருப்பைப் போலாக இருந்தது. அப்போது அவன் காத்திருப்பின் ருசிகரத்தினை உடைத்தெறிவதைப் போல் பெய்யத் தொடங்கியது மழை. ஊரையே முடக்கிப்போட்ட அசுர மழை. வீடுகள் மூழ்கின, மரணங்கள் எண்ணிக்கைகளாக வெளிப்பட்டுக்கொண்டிருந்தன, சாலைகளில் நிகழ்ந்ததொரு படகுப் போக்குவரத்து, தலைநகரைக் கவ்விக் கொண்ட இருள் என நான்கு நாட்களில் என்னென்னவோ நடந்தேறி விட்டது. ஆனால் ‘இன்றைக்கு அவள் வந்திருக்கக் கூடுமோ?” என்கிற கேள்விக்குள் மட்டுமே அவன் சுழன்று கொண்டிருந்தான்.

இந்தப் பேய்மழையில் அவள் வருவதற்கான சாத்தியங்கள் அறவே இல்லைதான். எதிர்பார்ப்பின் மனம் என்றைக்கும் நடைமுறையை அப்படியே ஏற்றுக் கொள்வதில்லை. பாம்பையும் சீண்டிப் பார்க்கும் குழந்தையென அவன் உண்மையோடு ஓர் கண்மூடித்தனமான விளையாட்டினை நிகழ்த்தினான். முன் தீர்மானமாய் தோல்வியை அறிந்ததொரு சுவாரஸ்யமான விளையாட்டாய் மூன்று நாட்களூம் குளம் நிறுத்தத்துக்குச் சென்று எதிர்பார்த்தபடியே ஏமாற்றத்தை வாங்கிக் கொண்டு திரும்ப வந்தான். அது ஒரு வீண் வேலையாக தன் மனம் கொள்ளாதது குறித்து எந்த விசாரணையும் அவனிடத்தில் இருக்கவில்லை.

இன்றைக்கும் அவன் அப்படித்தான் வந்திருந்தான்.
காலி டீ டம்ளரை டேபிள் மீது வைத்து விட்டு ‘கிங்ஸ் லைட்ஸ்’ வாங்கிப் பற்ற வைத்தான். நெஞ்சாங்கூட்டை நிரப்பிய புகை மெல்ல எழுந்து வெளியேறியது. அவனது காத்திருப்புக்கான விடை போல அவள் வந்து விட்டிருந்தாள். கருப்பு நிறத்தில் பூக்கள் மலர்ந்திருந்த மஞ்சள் நிறச் சுடிதாரணிந்து குடை பிடித்தபடி வடக்கு மாட வீதியில் தோழியுடன் அவள் வந்து கொண்டிருந்ததைப் பார்த்தான். இடப்புறமாகத் திரும்பி குளம் நிறுத்த நிழற்குடையில் பேருந்து வரும் வழி பார்த்து நின்றாள். குடையை மடக்கியவள் மழைத்துளிகளுக்கு தன் முகத்தைக் கொடுத்தாள். அதன் சாரலின் மென்மையை உணர்ந்த போது அவள் முகம் பிரகாசித்து ஒளிர்வதைப் பார்த்தான்.

கலவையான உணர்ச்சிகள் மேலிட சற்றும் தாமதிக்காமல் சாலையைக் கடந்து நிழற்குடைக்குச் சென்றான். அவள் மீதான தனது ஈர்ப்பினை மொழிவது சாதாரண காரியமாக இருக்கவில்லை. அவளை நெருங்குவதற்குள்ளாகவே மனம் பெரும் பதட்டத்துக்கு ஆளாகியிருந்தது. போலியான ஒரு துணிச்சலை ஏற்படுத்திக் கொண்டு அவளை நெருங்கினான். அவனின் திடீர் அண்மையின் காரணமாக அவள் தயங்கி நின்றாள். மனப்பாடச் செய்யுளை ஒப்புவிக்கும் மாணவனைப் போல ‘’என்னைக் கட்டிக்கிறீங்களா… உங்களை குழந்தை மாதிரி பார்த்துக்குறேன்” என்று கடகடவென சொல்லி விட்டு பெருமூச்சு விட்டான். முகம் இலேசாக வியர்த்திருந்தது. இதயத் துடிப்பின் வேகம் கூடியிருந்தது.
எதிர்பாராததொரு விண்ணப்பத்தின் காரணமான அதிர்ச்சியில் வார்த்தைகள் இல்லாமல் நின்றாள். ‘’ஏய் பஸ் வருதுடி” என்ற அவளது தோழியின் கூப்பிடுகுரல் அவளை அதனுள்ளிருந்து விடுவிப்பதாய் இருந்தது. 21g பேருந்து வந்து நின்றது. சீட் பிடிப்பதற்காக தோழி அவசரமாய் ஏறிச்சென்றாள். சீட்டில் உட்கார்ந்ததும் அவளைப் பார்த்துக் குரல் கொடுக்க அவனுக்கு பதிலேதும் கூறாமல் அவள் பேருந்தில் ஏறிக்கொண்டாள். அவளை தனதாக்கிக் கொண்ட பேருந்து அங்கிருந்து கிளம்பியது.

வெளிப்படுத்தாமையின் அவஸ்தையிலிருந்து வெளியேறிய அவனுக்கு ஒரு விடுதலை உணர்வு கிடைத்தது. நிழற்குடையிலிருந்து சாலையில் இறங்கி நடையிட்டான். தன் உருவகத்தில் இருக்கும் அவளது முகம் மட்டுமே வழித்துணையாய் அவனோடு சென்று கொண்டிருந்தது. மழை அப்போது வேகமெடுத்தது. ஏனோ அவனுக்கு குடையை விரிக்கத் தோன்றவில்லை.

- கி.ச.திலீபன், நன்றி: உயிர் எழுத்து, அக் 2018
---------------------------

கி.ச.திலீபன்

ஈரோடு மாவட்டம் தூக்கநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவன். திலீபன் என்கிற பெயரைக் கேட்டாலே பார்த்திபன் ராசையாவும் அவரது 13 நாள் உண்ணாநிலைப் போராட்டமும்தானே நினைவுக்கு வரும் ஆம் அப்போராளியின் நினைவாகத்தான் எனக்கு திலீபன் என்று பெயர் சூட்டப்பட்டது. எவ்வித முன் முடிவுகளுமற்றதுதான் இவ்வாழ்க்கை. பத்தாம் வகுப்பு முடித்ததும் ஜே.சி.பி ஓட்டுனராக காலம் தள்ள எத்தனித்தவன். எங்கெங்கோ பயணித்து இன்று இதழியல் துறையில் சங்கமமானது எதிர்பார்த்திராததுதான். காலைக்கதிர், ஜூனியர் விகடன், குமுதம், கல்கி, புதிய வாழ்வியல் மற்றும் சில ஊடகங்களில் பணி புரிந்திருக்கிறேன். தற்போது குங்குமம் தோழியின் நிருபராக பணியாற்றி வருகிறேன்... திரைத்துறையில் உதவி இயக்குனராகவும் பணியாற்றியிருக்கிறேன். எழுத்துக்கும் பயிற்சி அவசியம்... எழுத எழுதத்தான் எழுத்து வளமை ஆகும். ஆகவே இத்தளத்தை எனது பயிற்சிக்களமாக நினைக்கிறேன். நான் பத்திரிக்கையில் எழுதும் முக்கியமான கட்டுரைகள் இங்கு தரவேற்றப்படும் அத்தோடு பல சோதனை முயற்சிகளையும் மேற்கொள்ளப்போகிறேன்... உங்களது பின்னூட்டங்களை கைகூப்பி வரவேற்கிறேன்

எழுதியவர் : (14-Mar-19, 4:28 am)
பார்வை : 313

மேலே