பிறன்தாரம் நம்பற்க நாணுடையார் – நாலடியார் 81

நேரிசை வெண்பா

அச்சம் பெரிதால் அதற்கின்பம் சிற்றளவால்
நிச்சம் நினையுங்காற் கோக்கொலையால் - நிச்சலும்
கும்பிக்கே கூர்ந்த வினையால் பிறன்தாரம்
நம்பற்க நாணுடை யார். 81

- பிறர்மனை நயவாமை, நாலடியார்

பொருளுரை:

உண்டாகும் அச்சம் பெரிதாதலாலும், அப்பேரளவான அச்சத்துக்கு ஈடாக அடையும் இன்பம் சிறிதளவேயாதலாலும்,

நாடோறும் நினைக்கு மிடத்து அதற்கு ஏற்ற தண்டனை உண்மையாக அரசனது கொலைக் கட்டளை யாதலாலும்,

நாடோறும் அழல்வாய் நரகுக்கே உருவாகிய செயலாதலாலும்

பழிபாவங்கட்கு அஞ்சுதலுடையார் பிறன் மனைவியை விரும்பாமலிருப்பாராக!

கருத்து:

பிறன் மனைவியை விரும்பி யொழுகுவார்க்கு எந்நாளும் இருமையிலும் துன்பமே யாகும்.

விளக்கம்:

நிச்சம் - உண்மையாக. கும்பியென்பது ‘தீச்சூளை' யாதலின் இங்கு ‘அழல்வாய் நரகம்' எனப்பட்டது.

கூர்தல் - உள்ள தன்மை சிறந்து வருதல். ஆதலின், இங்கே அது; நரகுக்கே உருவாகிவரும் செயல் என்னும் கருத்தில் வந்தது.

"நம்பும் மேவும் நசையாகும்மே"1 என்பது தொல் காப்பியமாதலின், ‘நம்பற்க' என்பதற்கு ‘விரும்பற்க' என்பது பொருளாயிற்று.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-Mar-19, 11:13 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 55

சிறந்த கட்டுரைகள்

மேலே