மனநலம் எய்தினான் மாநிலத்துக்கு இனநலனே யாவன் இசைந்து - மனநலம், தருமதீபிகை 108

நேரிசை வெண்பா

ஊற்றினிதேல் ஊறிவரும் ஊறல் இனிதாகி
ஆற்றுமுயிர்க்(கு) ஆரமிர்தம் ஆகுமே – தோற்றும்
மனநலம்ஒன்(று) எய்தினான் மாநிலத்துக்(கு) என்றும்
இனநலனே யாவன் இசைந்து. 108

- மனநலம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

இனிய ஊற்றிலிருந்து ஊறி வருகின்ற நீர் உயிரினங்களுககு அமிர்தமாய் அமைந்து நிற்கும்; அதுபோல், உள்ள நலமுடையான் உலகிற்கு நல்ல துணையாய் இசைந்தருளுவான் என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல், உள்ளத் தூய்மை தெள்ளமிர்தம் என்கின்றது.

மனம் நல்லதாயின், அந்த மனிதனுடைய செயல் இயல்கள் எல்லாம் யாண்டும் நன்மை சுரந்தே வரும்; அதனால், உலகம் உவந்து, சூழ்ந்து உறவு கொண்டு உறுநலங்கள் :பல பெறும்; ஆதலால், மாநிலத்திற்கு அவன் ஓர் இன்ப ஊற்றாய் எண்ண நேர்ந்தான். நெஞ்சின் பண்பும் பயனும் பகர்ந்த படியிது.

இனிய ஊற்று புனித மனத்திற்கும், அதிலிருந்து சுரந்து வரும் தண்ணீர் நல்ல எண்ணங்களுக்கும்; அமிர்தம் அவற்றின் இன்ப நலங்களுக்கும் ஈண்டு உவமைகளாய் வந்தன.

இனிய மனமுடையான் உலகிற்கு அமுதம் என்றமையால் அவனது இயல்பும் உயர்வும் இன்ப நிலையும் இனிது புலனாம்.

‘அகத்தளவே சகத்தளவு’ என்னும் பழமொழி, மனநலத்தின் மாட்சியையும் ஆட்சியையும் நன்கு வெளிப்படுத்தி யுள்ளது.

அகக்கண் ஆகிய மனம் மாசின்றித் தெளிவடைந்த பொழுது, ஆன்மஎழில் ஒளி மிகப் பெறுவதால், உலகிற்கு அவன் ஓர் உதய பானுவாய் இனிதமைந்து அருள்கின்றான் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Mar-19, 3:48 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 26

மேலே