பிறன்தாரம் நச்சுவார்ச் சேரும் பகை பழி பாவமென்று அச்சம் – நாலடியார் 82

நேரிசை வெண்பா

அறம்புகழ் கேண்மை பெருமைஇந் நான்கும்
பிறன்தாரம் நச்சுவார்ச் சேரா - பிறன்தாரம்
நச்சுவார்ச் சேரும் பகைபழி பாவமென்(று)
அச்சத்தோ(டு) இந்நாற் பொருள். 82

- பிறர்மனை நயவாமை, நாலடியார்

பொருளுரை:

புண்ணியம், புகழ், தக்கார் நேயம், ஆண்மை என இந்நான்கும் பிறன் மனைவியை விரும்புவாரிடத்திற் சேரமாட்டா;

பிறர் பகையும் பழியும் பாவமும் அச்சமும் என்று இந் நான்கு பொருள்களும் பிறன் மனைவியை விரும்புவாரிடத்துச் சேரும்.

கருத்து:

பிறன் மனைவியை விரும்புவார்க்குப் புண்ணியமும் புகழும் தக்கார் கூட்டுறவும் வீரமும் உண்டாகா.

விளக்கம்:

பெருமையென்றது பெருமிதம்: ஆவது ஆண்மை.

பிறிது கூறுவாருமுளர். அறம் முதலியவற்றிற்கு நேராக ஆசிரியர். பாவம் பழி பகை அச்சம் என நான்கும் முறையே கூறுதலின், அம்முறைமைப்படி அச்சத்துக்கு எதிராக உரைக்குமிடத்துப் பிறருரை சிறவாமை கண்டு கொள்க.

பாவம் பழி பகையென நிற்றற்குரியவை, செய்யுளாதலின் பகை பழி பாவமெனப் பிறழ நின்றன. ‘பாவம் என்று' என்பதிலுள்ள ‘என்று' என்பதை ‘அச்சமும் என்று இந்நாற்பொருள்' பெருமை என்று இந்நான்கும்' எனக் கூட்டிக்கொள்க.1 'அகப்பொருள்' ‘புறப்பொருள்' என்றாற்போல, இங்கும் பண்புகள் ‘பொருள்' எனப்பட்டன.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Mar-19, 6:05 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 29

மேலே