எவன்கொலோ உட்கான் பிறன்இல் புகல் – நாலடியார் 83

இன்னிசை வெண்பா

புக்க விடத்தச்சம் போதரும் போதச்சம்
து'ய்'க்கும் இடத்தச்சம் தோன்றாமற் காப்பச்சம்
எக்காலும் அச்சம் தருமால் எவன்கொலோ
உட்கான் பிறன்இல் புகல். 83

- பிறர்மனை நயவாமை, நாலடியார்

பொருளுரை:

பிறர் மனைவியை விரும்பிச் சேர எண்ணினால், அவர் வீட்டிற்குள் நுழையும் போது அச்சத்துடன் நுழைய வேண்டும்.

அந்த வீட்டை விட்டு வெளியில் வரும்போது நாலாபுறமும் பார்த்து யாரும் பார்த்து விடவில்லையே என்ற பயத்துடன் வெளியேற வேண்டும்.

அவர் வீட்டினுள் இருந்து இன்பம் துய்க்கும்போதும் அச்சத்துடனேயே இருக்க வேண்டும்.

பிறர்க்குத் தெரிந்தால் அவமானமாயிற்றே என்று சுயமரியாதையையும், குலப்பெருமையையும் காத்துக் கொள்வதற்காகவும் அச்சப்பட வேண்டும்.

இவற்றை எண்ணிப் பார்க்காமல், எந்நேரமும் அச்சப்பட வேண்டிய செயலை, என்ன பயன் கருதி, பிறன் மனைவியைத் துய்க்க எண்ண வேண்டும்?

கருத்து:

பிறன் மனைவியை விரும்பிச் செல்வதால் முழுதும் அச்சமேயல்லாமல் இன்பமில்லையே.

விளக்கம்:

எவன் கொலோ என்பதற்கு என்ன பயன் கருதியோ என்பது பொருள்.
உட்குதல் - கருதுதல்; புகல் விரும்புதல் - விரும்பி யொழுகுதல்

முடிவுரை:

1. எனவே, அவமானமும், அச்சமும் ஏற்படுத்தக் கூடிய செயலாம் பிறர் மனைவியை விரும்புவதைத் தவறென்று உணர்ந்து, அத்தகைய எண்ணமும், நடவடிக்கையும் உள்ளவர் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Mar-19, 6:08 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 56

சிறந்த கட்டுரைகள்

மேலே