எப்பொழுதோ படித்தது ஒரு அரட்டை

எப்பொழுதோ படித்தது ஒரு அரட்டை

சமீபத்தில் “ஒரு புளியமரத்தின் கதை “ வாசித்தேன் எழுதியவர் சுந்தர ராமசாமி அவர்கள்
அந்த நாவலை பற்றி அதன் பின்புறத்தில் குறிப்பிடபட்டிருந்தது.
1966 இல் முதல் பதிப்பு வெளி வந்த காலத்திலிருந்து தீவிர வாசகர்களின் கவனத்தில் இருந்து வரும் “ஒரு புளியமரத்தின் கதை” ஒரு நவீன செவ்வியல் புனைவாக நிலை பெற்று விட்டது. மலையாளத்திலும், இந்தியிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ள இந்நாவலின் ஆங்கில மொழி பெயர்ப்பை “பெங்குவின்” வெளியிட்டது. 2000ல் நேரடியாக “ஹிப்ரு” மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு குறுகிய காலத்தில் இரண்டு பதிப்புகள் கண்டதுடன் அம்மொழிக்கு சென்றுள்ள முதல் இந்திய மொழி நூல் என்ற பெருமையும் பெறுகிறது. ஒப்பீட்டிலக்கிய விமர்சகர் கெ.எம். ஜார்ஜ் இந்நாவலை நோபல் பரிசு பெற தகுதியான நூலாக குறிப்பிடுகிறார்.
இனி இதன் ஆசிரியர் இந்நாவலை பற்றி ஐந்தாவது பதிப்பின் முன்னுரையில் குறிப்பிடுவதில் ஒரு சில
இது என்னுடைய முதல் நாவல் தமிழ் இலக்கியத்தின் நாவல் மரபைத் திசை திருப்பிவிட வேண்டுமென்றோ உரு, உத்தி இத்யாதிகளில் மேல் நாட்டு களஞ்சியத்திலிருந்து கொஞ்சம் கொள்ளையடித்துத்தான் தீருவது என்று ஆசைப்பட்டோ, திட்டம் வகுத்தோ எழுதிய நாவல் அல்ல இது. முதற் பதிப்பை கொண்டு வந்தவர் தமிழ் புத்தகாலயம் கண முத்தையா அவர்கள். ஐந்தாவது பதிப்பாக காலச்சுவடு வெளியிட்டுள்ளது.
இந்நாவலை எழுத தொடங்கியது ஐம்பதுகளின் பிற்பகுதியில் மன உலகில் இலக்கியமும், கிருஷ்ணன் நம்பியும் நிறைந்திருந்த காலம். அன்றைய தமிழ் மீது நம்பிக்கு திருப்தி இல்லை மொழி பிசிறின்றி இருக்க படிய வேண்டும் என்ற தாகம் என்னை சதா வாட்டிக் கொண்டிருந்தது. நம்பி ஏற்றுக்கொள்ளும்படி என் தமிழ் திரள வேண்டும் என்று ஏங்கிக் கொண்டிருந்தேன். முதல் அத்தியாயம் ‘சரஸ்வதியில்’ வெளியான போது நம்பி என் மொழி தனக்கு முழுமையான நிறைவு தருவதாக சொன்னார்.
புளிய மரம் என்பது எங்கள் ஊரில் நிற்கும் வேப்ப மரம். ஊரில் அதை வெட்ட சிலர் திட்டமிட்ட போது வேறு சிலர் மரத்தை “சாமியாக்கி” இவர்கள் என் நாவலை படித்திருக்க வாய்ப்பில்லை. அதை காப்பாற்றிய சமீபத்திய நிகழ்ச்சி (1960 ல் ) நாவல்களில் வர்ணித்திருக்கும் சில நிகழ்வுகள் (கலவரங்கள் ) இந்த ஆண்டு நிகழ்ந்தன.
மலையாளத்தில் மொழி பெயர்த்தது –ஆற்றூர் ரவி வர்மா, இந்தியில்- மீனாட்சி புரி
ஆங்கிலம்- எஸ்.கிருஷ்ணன் ( பெங்குவின் )
நாவலின் பின்னுரை- ராஜ் கெளதமன் . சுந்தர ராமசாமியின் கதையை 1971ம் ஆண்டு படிக்க நேர்வதற்கு முன் அவர் பெயரைக் கூட நான் அறிந்திருக்க வில்லை. மு.வ,. அகிலன், நா. பார்த்தசாரதி, ஜெயகாந்தன், கல்கி, முதலியவர்களின் படைப்புகளில் ஈடுபாடு கொண்டிருந்த காலம் அது. எம்.ஏ தமிழ் முதலாண்டு படித்த அந்த சந்தர்ப்பத்தில் சுந்தர ராமசாமியோடு, க.ந .சுப்ரமணியம், சி.சு.செல்லப்பா, சிதம்பர சுப்ரமணியம், ல.ச.ராமமிருதம், தி.ஜானகிராமன், செ.கணேசலிங்கம், (செவ்வானம், தாரையும் தாரகையும் ) ஹெப்ஸியா ஜேசுதாசன், ஆர்.ஷண்முகசுந்தரம், நீல.பத்மநாபன், ஆகியோரயும் அறிந்து கொள்ள முடிந்தது. அ..மாதவையா, பி.ஆர்.ராஜமையர், நாவலாசிரியர்களும் பரிச்சயமானார்கள். இவர்களை -யெல்லாம் பாடத்திட்டத்தில் நுழைத்து வைத்த பெருமை அப்போதைய மதுரை பல்கலைக்கழகத் தமிழ் துறையை சேர்ந்த சி.கனகசபாபதியை சாரும்.
நாவலை பற்றி
நாவல் என்றால் நடுநாயகமான ஒரு கதை தலைவனை சுற்றி நிகழ்ச்சிகள் புனையப்பட்டிருக்கும் என்ற கருத்தை சி.சு.செல்லப்பாவின் “ வாடி வாசலும் “ சுந்தர ராமசாமியின் “ஒரு புளியமரத்தின் கதையும்” அழித்து விட்டன.
புளிய மரத்தின் வரலாற்றை பின்புலமாக கொண்டு நாகர்கோவிலின் நகரமயமாதலை சொல்லிய உத்தி,. நபர்களையும், நிகழ்ச்சிகளையும், குண விகாரங்களையும் படு கிண்டலாக சொன்ன அங்கதம் ஓங்கிய நடை. அதாவது புற உலக எதார்த்த சித்தரிப்பும், அதனை எடுத்துரைத்த ஹாஸ்ய ரசமிக்க நடையும். மனிதரின் சுய நல வெறிச் செயலாலும், அகங்காரத்தாலும் ஒரு புளிய மரம் ஒரு கிளையை இழந்து முச்சந்தியில் நின்று முடிவில் பட்ட மரமாகிப்போன கதைதான்
“ஊர் சார்ந்த கனவும் அரசியல் சார்ந்த கனவும் சிதறிப்போனதில் மனதில் படர்ந்த வெறுமையும் ஏமாற்றமுமே ஒரு புளிய மரத்தின் கதை பிரதிபலிக்கிறது- சொன்னவர் எழுதியவரே..
நான் படித்த வரையில் :
புளியமரத்தை சுற்றி நிகழ்வுகள் (கதைகள் அல்ல) அதாவது நாகர்கோவிலின் நகரமயமாதல், மனிதர்களுக்குள் (வியாபாரிகளுக்குள்) ஏற்படும் புகைச்சல், அந்த மரத்தை சுற்றி வந்து கடைசியில் அதனை அழித்து விட்டால் ஒருவனின் வியாபார விளைச்சல் காணாமல் போக்கிடலாம் என்ற எண்ணம் அதனால் இறுதியில் அந்த மரம் பட்டுப் போதல்.
நீங்கள் வாசிக்கும்போது இதை கதையாக நினைத்து படிக்க ஆரம்பிக்காதீர்கள், நாகர் கோவிலின் புளிய மர ஜங்சனில் உங்களை நிற்க வைத்து உங்களை சுற்றி நடந்த நிகழ்வுகள், ஊரின் வளர்ச்சி, உருமாற்றம் அதனை உங்கள் கவனத்திற்கு கொண்டு வந்து விடும்.

உதாரணமாக ஒரு சில
ஒரு நாள் பூரம் திருநாள் மகாராஜா கால் பந்தாட்ட போட்டியை பார்த்துவிட்டு கண் கலங்கி கண்ணீர் பொல பொலவென வந்து விட்டது. அனைவருக்கும் பதைபதைப்பு ஏன் கலங்குகிறார் ? கேட்க பயம். அந்தரங்க காரியதரிசி ஸ்தாணு நாத ஐயர் அவரிடம் கேட்க
“ஸ்தாணு, நமது ராஜ்ஜியத்தில் இவ்வளவு ஷாமம் வந்து விட்டதா? என்ன இது கேவலம் ஒரு பந்துக்கு பத்து பன்னிரெண்டு பெரியவர்கள் அடித்து கொள்கிறார்களே ? ஆளுக்கு ஒரு பந்தை கொடுத்து போக சொல்லக்கூடாதா?
புளிய மரம் இருந்த இடமோ ஒரு திடல், அங்கு பையன்கள் மாலை நேரத்தில் பலின் சடு குடு விளையாடினார்கள், குழிப்பந்து விளையாடினார்கள் ஒரு பக்கம் காளை வண்டிகளை இரவில் அவிழ்த்துப்போடும் வண்டிப்பேட்டையாக மாறியது. பஸ் நாகரிகம் தலையெடுத்த போது “திடல்” பஸ் ஸ்டாண்டாக மாறி விட்டது. பஸ் ஸ்டாண்டை சுற்றி கடை கண்ணிகளும் ஒன்றிரண்டு ஓட்டல்களும் முளைத்தன. நாளாவட்டத்தில் அதொரு சந்திப்பாக உருமாறிற்று. ஊரில் எத்தனையோ சந்திப்புக்களும் புளிய மரங்களும் இருந்தாலும், புளிய மரம் என்றால் இந்த புளிய மரம்தான் ஜங்சன் என்றால் இந்த ஜங்சன்தான்.
“காற்றாடி மரத்தோப்பு” நகர்ப்பூங்காவாக உருமாறிய காலம் தாமோதர ஆசானின் பழைய காலம் அல்ல. புளிய மர ஜங்சன் திமிலோகப் பட்டுக்கொண்டிருந்த காலம். புளிக்குளம் மறைந்து சுற்றி வர பஜாரும், தெற்கே பஸ் ஸ்டாண்டும் முளைத்து விட்ட காலம் அது.
காலத்தின் கோலம் வெகுவாக மாறிவிட்டது துலக்கமாகவே தெரிய வருகிறது. காற்றாடி மரத்தோப்பு நவீன பூங்காவாக உருமாறிய நாட்களில் உலகம் அதி வேகமாக சுழன்று விட்ட மாதிரி தோன்றுகிறது.
“இதோ மணி ஏழு அடித்து விட்டது அரண்மனையின் முன் குழந்தைளின் ஏகக் கூட்டம், ரோட்டின் இரு பக்க ஓடைகளிலும் புழுதி மண்ணின் குழந்தைகள் உட்கார்ந்து கொண்டிருக் கின்றன சில குழந்தைகள் ‘கேட்டின் இடுக்கு’ வழியாக பார்த்துக் கொண்டிருக்கின்றன. கோவணதாரியான் ஒன்று கேட்டின் முன்னால் படுத்து குப்புற படுத்துக்கொண்டு குதி காலால் பிட்டியில் அடித்துக்கொண்டே “ரன்னிங் கமெண்ட்ரி “ சொல்கிறது
“டப்பவை ஒடைக்கறாங்க டோய்…..…தண்ணியெ ஊத்தறாங்க டோய்…..…வேய் கொஞ்சமாட்டு ஊத்தும் வேய்…..என்ன வேய்….…மடமடான்னு கொட்டுதீரே…….அன்னா…பெரியசாமி வாறாரு….சாமி வணக்கம்,..: குட் மானிங்… கேட்டெத் திறக்க தாடி வருது, டோய்…..மகா ஜன்ங்கள் எல்லாரும் ரெடியா இருங்க
“இந்த மரத்துலதான் எம்புட்டுக் காய்” என்றாள் தோட்டிச்சி
இன்னைக்கு வாந்தி எடுத்தா உனக்கு ?
அடேயப்பா என்ன வாந்தி..காலையில எந்திரிச்சதும் வயித்தை கொமட்டிகிட்டு வந்துட்டு
அவள் பழத்தை சுவைப்பதை கண் கொட்டாமல் பார்த்து !
புளிச்சுக் கெடக்கோவ் என்று கேட்டாள் அவள்
அடேயப்பா என்னா புளி புளிக்குது, மண்டெய போயி புடிக்குது, வயத்து குமட்டலுக்கு சுகமா இருக்கு மூன்று தடவை பழத்தை வேகமாக நாக்கில் இழுத்துக்கொண்டாள்
“இவன் இந்த பாடு படுத்துதானே நாலைக்கு இந்த புளிய மரத்தை நான் வெட்டி சாச்சுருதேன் அப்பம் இவன் என்ன செய்வான் ? இல்லே கேக்கேன்….என்றான் இசக்கி
புளிய மரத்தை வெட்டி சாச்சுட்டா ஆ என்ன சொல்லுதிய நீங்க ?
குப்பை கொறையும் காலையில மட்டும் பெருக்கனா போரும்னு நினைச்சுருவான்.
கல்லாப்பெட்டி காலியாயிடும் அண்ணாச்சி, கல்லாப்பெட்டி காலியாயிடும்
என்ன அர்த்தமில்லாம சொல்றீய !
யோசிச்சுத்தான் சொல்றேம் அவனுக்கு யாவாரம் சாமான வெச்சு நடக்கற யாவாரம் இல்லை. இதே சாமான் அந்த பக்கமும் இந்த பக்கமும் நூறு கடையில கிடைக்கும் அவனுக்கு யாவாரம் நிழலே நம்பி, நடக்கிற யாவாரம் நிழலு போச்சுன்னா யாவாரம் படுத்துடும் டவுட்டே வானாம் உங்களுக்கு
இரவு ஒரு மணிக்கெல்லாம் அவன் மரத்தின் மேல் ஏறினான், நாட்டு வைத்தியரிடம் வாங்கி வைத்திருந்த பாதரசம் கலந்த விஷ பதார்த்தம் சிறு சீசா ஒன்றில் அவன் மடியிலிருந்தது. தாய் தடியிலிருந்து கிளைகள் வெடித்து செல்லுமிடத்தில் அவன் கத்தியால் சிறு பள்ளம் தோண்டினான் மருந்தை குழி வாயில் ஊற்றி விட்டு வாழையிலையில் மடக்கி வைத்திருந்த சாணியை எடுத்து குழிமேல் அப்பினான்.
முச்சந்தி புளிய மரம் காய்ந்து கருகி நின்று கொண்டிருந்தது. அழிந்து போய்விட்டது அதன் சடலம்தான் அகற்றப்படாமல் நின்று கொண்டிருக்கிறது. இப்பொழுது அது மரம் அல்ல தெய்வமும் அல்ல,. பிணம்தான்.
எவ்வளவோ பார்த்து விட்ட மரம்தான் அது, மேடும் பள்ளமும் எவ்வளவோ பார்த்த மரம்
அன்றெல்லாம் மனித நடமாட்டத்தை அது அவ்வளவாகக் கண்டதில்லை. இந்த உலகில் மனித சந்தை இத்தனை விரிந்து கிடப்பது அப்போது அதற்கு தெரியாது. அவர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கு உரித்தான விசித்திரமான மனசுகளும் உண்டு என்பதும் அப்போது அது அறிந்திராத ஒன்று.
புளிய மர ஜங்சனை “புளிய மரம்” அகற்றப் பட்ட பின்னர் ஊரில் இருந்த நாட்கள் வரையிலும் ஏதோ ஒரு சூன்ய வெறி மனசை பாதிக்காமல் தாண்டி செல்லவே என்னால் முடிந்ததில்லை. இதே உணர்ச்சிக்கு எங்கள் ஊரை சேர்ந்த பலரும் ஆளாகியிருக்கலாம்.
வாசகர்களும் கூட அந்த மரத்தின் இழப்பை அந்த நாவலின் இறுதியில் அடைவீர்கள்.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (16-Mar-19, 9:05 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 81

மேலே