நாவுளுயர் மெய்யினிமையும் பூவிலமர் செய்ய திருவும் - வாக்கு நயம், தருமதீபிகை 120

நேரிசை வெண்பா

பூவுள் மணம்தேன் பொருந்தி மிளிர்தல்போல்
நாவுளுயர் மெய்யினிமை நண்ணினால் - பூவிலமர்
செய்ய திருவின் செழுமனையாய்த் தேசுயர்ந்து
வையம் வழுத்த வரும். 120

- வாக்கு நயம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

மணமும் தேனும் மருவிப் பூ விளங்குதல் போல், மெய்யும் இன்சொல்லும் மேவி நா அமர்ந்தால் அது திருமகளுக்கு வாசமாய் அரிய மகிமை வாய்ந்து உலகம் தொழ உயர்ந்து விளங்கும். இப்பாடல் மெய்யுடைய நா தெய்வ நிலையம் என்கின்றது.

பூ, மணம், தேன் என்பன நா, மெய், இன்சொல்களுக்கு முறையே உவமைகளாயின. பூவுக்கு மணம் போல நாவுக்கு மெய் என்றமையால் அதன் நீர்மையும் நிலைமையும் நன்கு தெரியலாகும்.

மெய்ம்மை தோயாத நா, மணமற்ற மலர் போல் மதிப்பிழந்து விடும். உவகை நிலையமான அதன் சுவை இனிமை கருதி இன்சொல்லைத் தேன் என்றது செவியின் சுவையான அருவப் பொருளுக்கு நாவின் சுவையான உருவப் பொருள் இங்கே உவமையாய் வந்தது.

தேன் உண்டவர்க்கு உவப்பாம்; இன்சொல் கேட்டவர்க்கு இன்பமாம்; அது நாவளவில் இனிப்பாய் உடலோம்பி ஒழிகின்றது; இது, உள்ளும் தோறும் களிப்பாய் உள்ளம் புகுந்த உயிர் ஓம்பியுள்ளது. மெய்யும் இன்மொழியும் தம்மை உடையாரை உயர்த்தியருளும் தன்மையுடைமையை அடை மொழி விளக்கி எடை தெளிய நின்றது.

மணமும் தேனும் பூவின் உள்ளும் புறமும் பொருந்தி அதனைச் சிறப்புறுத்துகின்றன. உண்மையும் இன்சொல்லும் நாவின் அகத்தும் புறத்தும் அமர்ந்து அதற்கு மகத்துவம் அருள்கின்றன.

'செய்ய திருவின் செழுமனை’ என்றது. புனிதமான அந்நாவில் இலட்சுமி உரிமையோடு உவந்து வாசம் செய்வள் என்பதாம். மனை - வீடு.

நாமகள் நிலையத்தில் பூமகள் புகுந்தாள் எனவே கல்வியும். செல்வமும் ஒருங்கே பெருகிப் பல்வகை நலங்களும் சுரந்து எல்லாரும் போற்ற இசை வளர்ந்துள்ளமை தெளிவாம்.

சத்தியமும் இன்சொல்லும் உடையவன் புண்ணியமும் புகழும் பொருளும் பொருந்தி எண்ணிய இன்ப நலங்கள் யாவும் அருந்தி உலகம் விழைந்து தொழ விளங்கியிருப்பான் எனப்பட்டது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-Mar-19, 1:37 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 20

மேலே