இரவாமை ஈதல் இரட்டி யுறும் - ஈகை, நாலடியார் 95

நேரிசை வெண்பா

மறுமையும் இம்மையும் நோக்கி ஒருவற்(கு)
உறுமா(று) இயைவ கொடுத்தல் - வறுமையால்
ஈதல் இசையா(து) எனினும் இரவாமை
ஈதல் இரட்டி யுறும். 95

- ஈகை, நாலடியார்

பொருளுரை:

மறுமை இம்மை நிலைகளைக் கருதி கூடிய பொருள்களைத் தக்கமுறையில் ஒருவனுக்குக் கொடுக்க வேண்டும்; அப்படிக் கொடுப்பது வறுமையினால் மாட்டாதாயினும் பிறரை இரவாமலிருப்பது அவ்வறுமைக் காலத்தில் கொடுத்தலினும் இரு மடங்கு தக்கதாகும்.

கருத்து:

வறுமைக் காலத்தில் தான் பிறரை இரவாதிருத்தலும், தன்னிடம் இரந்து வந்தவர்க்கு இயைந்தன கொடுத்தலும் ஒருவனுக்குக் கடமை.

விளக்கம்:

உறுமாறு கொடுத்தல் - உள்ளமும் உரையும் செயலும் இனியனாய்த் தருதல்; பொருந்தும் வகையில் என்றபடி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-Mar-19, 3:42 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 9
மேலே