துச்சாரி நீகண்ட இன்பம் எனக்கு எனைத்தால் கூறு – நாலடியார் 84

நேரிசை வெண்பா

காணின் குடிப்பழியாம்; கையுறின் கால்குறையும்;
ஆணின்மை செய்யுங்கால் அச்சமாம்; - நீணிரயத்
துன்பம் பயக்குமால்; துச்சாரி; நீகண்ட
இன்பம் எனக்(கு)எனைத்தால் கூறு. 84

- பிறர்மனை நயவாமை, நாலடியார்

பொருளுரை:

பிறர் கண்டு விட்டால் குடிப்பழிப்பாம்; கையில் அகப்பட்டுக் கொண்டால் கால் ஒடியும்,

ஆண்மை யில்லாமையாகிய இப் பிறர்மனை புகுதலைச் செய்யுங்கால் அச்சம் நிகழும்;

நெடுங்கால் நிரயத் துன்பத்தைப் பின்பு உண்டுபண்ணும்.

தீயொழுக்கம் உடையோய்! நீ நுகர்ந்த இன்பம் இதில் எவ்வளவு? எனக்குச் சொல்.

கருத்து:

பிறன்மனை நயத்தலில் இடுக்கணும் இன்னலுமின்றி இன்பம் சிறிதுமில்லை.

விளக்கம்:

பிறன்மனை புகுகின்ற தொழில் பற்றிக் "கால் குறையும்" என்று முதன்மையாக எடுத்துக் கூறினாரேனும் இயையு பற்றிப் பிற உறுப்புகள் குறைதலுங் கொள்ளப்படும்.

"பிறன்மனை நோக்காத பேராண்மை"1 என்றாராகலின், பிறன்மனை நோக்குதல் இங்கு ‘ஆணின்மை' யெனப்பட்டது. .

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-Mar-19, 3:45 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 12

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே