பிறர்மனைமேற் சென்றார் அலியாகி ஆடிஉண் பார் - நாலடியார் 85

நேரிசை வெண்பா

"செம்மையொன் றின்றிச் சிறியா ரினத்தராய்க்
கொம்மை வரிமுலையாள் தோள்மரீஇ - உம்மை
வலியாற் பிறர்மனைமேற் சென்றாரே, இம்மை
அலியாகி ஆடிஉண் பார்" - 85

- பிறர்மனை நயவாமை, நாலடியார்

பொருளுரை:

முற்பிறப்பில், தமக்குள்ள செல்வாக்கு, அதிகாரம், பொருள், ஏவல் என்னும் வலிமைகளால் சிந்தித்துப் பார்க்கும் நடுநிலைமை என்னும் குணம் சிறிதுமில்லாமல், மனத்தளவில் தரக் குறைவான எண்ணம் கொண்ட மக்களைச் சேர்ந்தவராய், நறுமணப் பூச்சு கோலம் எழுதிய திரட்சியான மார்புகளை உடைய பிறர் மனையாளின் தோள்களைச் சேர விரும்பி, அயலார் மனைவியரிடம் இன்பம் துய்க்கச் சென்றவரே, இப்பிறப்பில், ஆண்மையற்ற அலிகளாய்ப் பிறந்து பிறர் நகைக்கக் கூத்தாடி பிறரிடம் இரந்து வயிறு பிழைப்பவராவர்.

கருத்து:

முற்பிறப்பிற் பிறர் மனைவியரைக் கூடியவரே இப் பிறப்பில் கூத்தாடி இரந்து உண்பவர்.

விளக்கம்: செம்மையென்பது நடுவுநிலைமைக்கே சிறப்பாக வழங்கும் பெயர்.

சிறிதென்னும் பொருட்டு. சிறியாரினம் என்றது,

பொதுவாகப் பெண்ணென்னும் பொருட்டுக் ‘கொம்மை வரிமுலையாள்' என்றார். ‘பெண்ணின் சேர்க்கையை விரும்பி' என்பது கருத்து.

மரீஇ - விரும்பியென்னும் பொருட்டு.

அலி, ஆண் தன்மையிழந்த பிறவி; பெண்ணின் நலத்தைத் துய்க்க இயலாத பிறவி. ஆடியுண்பாரென்றது,

தெருக்களிற் பிறர் நகைக்கக் கூத்தாடிப் பொருள் பெற்று வயிறு பிழைத்தலை யுணர்த்திற்று.

முற்பிறப்பில் ஆண் தன்மையும் வளம் முதலிய வலிமையும் உடையவராய்ப் பிறர் மதிக்க வாழ்ந்திருந்தவர், அவ் ஆண் தன்மையையும் வலிமையையும் அப்போது தவறாகச் செலுத்தினமையின், இப்பிறப்பில் அவ்விரண்டையும் முற்றுமிழந்து வருந்துவரென்றற்கு, ‘அலியாகி' எனவும், ‘ஆடியுண்பர்' எனவுங் கிளந்து கூறினார்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-Mar-19, 3:48 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 19

புதிய படைப்புகள்

மேலே