கைக்கடிகாரமெனும் சிற்பம்

Watchmaker Masahiro Kikuno – In Tune with Time என்ற டாகுமெண்டரி திரைப்படத்தைப் பார்த்தேன். சர்வதேச அளவில் கைக்கடிகாரங்களை வடிவமைப்பு செய்யும் மசஷிரோ கிகுனா என்ற இளைஞரின் உலகை ஆவணப்படுத்தியுள்ளது இப்படம்.

ஜென் துறவி ஒருவர் கைக்கடிகாரம் செய்ய முற்படுவது போல அத்தனை நிதானமாக, ஆழ்ந்த புரிதலுடன் அசாத்தியமான கலைத்திறமையுடன் கிகுனா கைக்கடிகாரங்களைத் தயாரிக்கிறார்.

இந்த ஆவணப்படம் கடிகாரம் தயாரிப்பதை மட்டும் காட்சிப்படுத்தவில்லை. காலத்தை நாம் எப்படிப் புரிந்து கொண்டிருக்கிறோம். எப்படிக் கையாளுகிறோம். காலம் என்பதை எப்படிக் கனவாக இளைஞர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை மெய்தேடல் கொண்டதாக விளக்குகிறது.

கிகுனா ராணுவப் பயிற்சி பெற்றவர். தற்செயலாகக் கடிகாரத் தயாரிப்பில் ஆர்வம் கொண்டு அதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். அவரது பெற்றோர் இந்த முயற்சிக்குப் பெருந் துணையாக விளங்குகிறார்கள். ஒரு காட்சியில் அவர்கள் தனிமையில் வேலை செய்யும் தங்கள் மகன் மசஷிரோ கிகுனாவை வியந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

டோக்கியோவிலுள்ள சிறிய அறை ஒன்றில் தனியாக அமர்ந்தபடியே நாள் முழுவதும் வேலை செய்து கொண்டேயிருக்கிறார் கிகுனா.

கைக்கடிகாரம் தயாரிப்பது எளிமையான விஷயமில்லை. அதிலும் புகழ்பெற்ற ஜப்பானிய சுவர் கடிகாரங்களின் நுட்பத்தைக் கைக்கடிகாரமாக மாற்றுவது பெரிய சவால். அதை எப்படிச் சாத்தியப்படுத்துகிறார் என்பதை முழுமையாக ஆவணப்படுத்தியிருக்கிறார்கள்.

தான் வடிவமைத்த கடிகாரத்துடன் ஸ்விஸ் பயணம் செய்யும் கிகுனா அங்கே காட்சிக்கு வைக்கிறார். அவருக்குப் புகழாரம் சூட்டப்படுகிறது. ஒரு கடிகாரம் செய்ய ஒரு ஆண்டு ஆகும் என்பதால் அவர் அதிக ஆர்டர்களை ஏற்றுக் கொள்வதில்லை. மசஷிரோ கிகுனாவின் உலகம் தனித்துவமானது. அவரைப் போல நுட்பமாகக் கடிகாரங்களை உருவாக்குகிறவர்கள் ஒன்று கூடி தங்களின் கலைத்திறனை வெளிப்படுத்துகிறார்கள். பிரபல கடிகார நிறுவனங்கள் இவர்களைக் கண்டே பயப்படுகின்றன. எந்தப் பிரபல நிறுவனத்தாலும் இவர்களை வெல்லமுடியாது. காரணம் இவர்கள் தனியான கலைப்படைப்பு உருவாக்குகிறார்கள். நகல் என்பதே அதில் கிடையாது. எவரது விருப்பத்திற்காகவும் இவர்கள் கடிகாரங்களைத் தயாரிப்பதில்லை. தங்களின் கலைத்திறனை, நுட்பத்தை உலகம் அறியச் செய்யவே கடிகாரங்களை உருவாக்குகிறார்கள். தனித்துவமிக்கக் கலைஞர்களாகச் சுதந்திரமாக வாழுகிறார்கள்.



மலிவு விலைக்கடிகாரங்கள் சந்தையை ஆக்ரமித்துக் கொண்டபிறகு கைக்கடிகாரம் என்பதன் மதிப்பும் முக்கியத்துவமும் மெல்ல மறைந்துவிட்டன. கைக்கடிகாரம் என்பதே அலங்காரப் பொருளாக உருமாறிவிட்டது

ஆசை ஆசையாக வாங்கிக் கட்டிக் கொண்டிருந்த பிரபல தயாரிப்பு நிறுவன கடிகாரங்களை விடவும் டிஜிட்டில் கடிகாரங்கள் அதுவும் சீனத் தயாரிப்புகள் வந்த பிறகு கைக்கடிகாரம் உடையின் வண்ணத்திற்கு ஏற்ப் அணிந்து கொள்ளும் அலங்காரப் பொருளாகிவிட்டது

ரோலக்ஸ் வாட்ச் கட்டுகிற கனவு காணும் பலரும் இப்போது அந்தக் கனவிலிருந்து வெளியேறி விட்டார்கள். ஆனாலும் சுவிஸ் தயாரிப்புக் கடிகாரங்கள் தலைமுறையைத் தாண்டி இன்றும் ஒடிக் கொண்டிருக்கின்றன.

கடிகாரம் என்பது காலம் காட்டும் இயந்திரமில்லை. அது ஒரு அடையாளம். அப்பாவின் கடிகாரம், அம்மாவின் கடிகாரம் என்பதெல்லாம் நினைவோவியங்கள்.

பள்ளியில் படிக்கும் போது முதன்முறையாகக் கடிகாரம் ஒன்றைப் பரிசாக வாங்கினேன். அது முதல் இன்று வரை எத்தனையோ கடிகாரங்களைப் பாவித்திருக்கிறேன். மனதிற்குப் பிடித்தவை ஒன்றிரண்டே.

இன்றைக்கும் கடிகாரம் கட்டிக் கொள்ளாமல் வீட்டைவிட்டு வெளியே செல்லப் பிடிக்காது. கட்டிக் கொள்ளாமல் போய்விட்ட தருணங்களில் கை உறுத்திக் கொண்டேயிருக்கும். என் தாத்தா, பாட்டி எவரும் கடிகாரம் கட்டிக் கொண்டவரில்லை. சுவர்கடிகாரங்கள் தான் அவர்களின் உலகம். சூரியன் தான் அவர்களின் கடிகாரம்.

திருமணத்தின் போது விசேசமான கைக்கடிகாரங்களை வாங்கிக் கொள்வது அனைவரது பழக்கம். நானும் அப்படி ஒரு கடிகாரத்தை வாங்கியிருந்தேன். சில ஆண்டுகளுக்குப் பிறகு அது தண்ணீர் புகுந்து கெட்டுவிட்டது. ஒடாத கடிகாரங்கள் பல என் சேமிப்பில் இப்போதும் உள்ளன. ஒடாத கடிகாரம் கலைப்பொருளாகிவிடுகிறது.

கடிகாரங்களைப் பழுதுநீக்கும் கடையும் கடைக்காரர் கண்ணில் பொருத்தியிருக்கும் லென்சும் சிறுவயதில் எனக்கு வியப்பானவை. ஒரே நேரத்தில் அத்தனை கடிகாரங்கள் மாட்டப்பட்ட சுவரை வேடிக்கை பார்க்க அடிக்கடி கடிகாரக் கடைக்குப் போய்வருவேன்

சமீபத்தில் துபாய்ச் சென்றிருந்த போது பன்னாட்டு தயாரிப்பு கடிகாரங்கள் விற்கும் பெரிய அங்காடி ஒன்றுக்குச் சென்றிருந்தேன். பேரழகு மிக்கக் கலைப்படைப்புகள் போலக் கடிகாரங்கள் உருவாக்கப்பட்டிருந்தன. விலையும் மிக மிக அதிகம்.

சிற்பங்களைச் செய்வதைப் போலக் கடிகாரங்களை அழகிய முறையில் தயாரிக்கும் காலச் சிற்பிகள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் இயந்திரங்களின் உதவியின்றிச் சுயமாகக் கடிகாரங்களைத் தயாரிக்கக் கூடியவர்கள். கடிகாரம் ஒன்றை உருவாக்க ஒரு ஆண்டு முதல் இரண்டு ஆண்டுவரை செலவிடக் கூடியவர்கள்.

ஆண்டுத் தோறும் சுவிஸ் நாட்டில் இவர்களுக்கான அமைப்பு ஒன்று கூடுகிறது. புதிய கடிகார வடிவமைப்புகள் குறித்தும் உருவாக்கப்பட்ட கடிகாரங்களைக் குறித்தும் கூடி விவாதிக்கிறார்கள். காட்சிப்படுத்துகிறார்கள். அந்த அமைப்பில் 35 உறுப்பினர்களே உள்ளார்கள். அவர்கள் தொழில்முறை கடிகார வடிவமைப்பாளர்கள். அவர்களில் வயதில் மிகவும் இளையவர் ஜப்பானைச் சேர்ந்த மசஷிரோ கிகுனா. 32 வயதே ஆனவர். இவர் உருவாக்கியுள்ள கடிகாரங்கள் சர்வதேச சந்தையில் மிகவும் விலைமதிப்பு கொண்டவை. ஜப்பானிய பராம்பரிய முறையைக் கையாண்டு அவர் கடிகாரங்களை உருவாக்கி வருகிறார்.

சுவிட்சர்லாந்திலுள்ள ஸ்விஸ் வாட்ச் இன்ஸ்டிடியூட் பெருமைக்குரிய அமைப்பாகும். அவர்களே ஸ்விஸ் கடிகாரங்களை உருவாக்குவதற்கான கட்டுபாடுகள். நியதிகளை உருவாக்குபவர்கள். இன்று சுமார் நூறு நிறுவனங்கள் ஸ்விஸ் மேட் என்ற முத்திரையுடன் கடிகாரங்களை உருவாக்குகிறார்கள். அத்தனை பேரும் இவர்களின் முறையான அனுமதி பெற்றவர்களே

மத்திய காலத்தின்போது, மதச் சார்பான நோக்கங்களுக்காகவே கடிகாரங்கள் முதன்மையாகப் பயன்படுத்தப்பட்டன. தினசரி வாழ்விற்கான அவை பயன்படுத்தப்படவில்லை. காலத்தை எப்படி பகுப்பது என்பது பெரும்புதிராக இருந்தது.

கடிகாரம் எப்போதும் ஒரே மாதிரி அதாவது வலப்புறமாகச் சுற்றிவரக்கூடியது, இதனைக் கடிகார திசை என்று கூறுகிறார்கள். இதற்குக் காரணம் பூமியின் சுழற்சி என்கிறார்கள்

முட்கள் கொண்ட முதல் கடிகாரத்தைச் சீனர்கள் தான் தயாரித்தார்கள். சீனா நிலநடுக்கோட்டுக்கு வடக்கே உள்ளது. ஆகவே இடப் புறம் சூரியன் உதித்து வலப் புறம் மறையும். எனவே சீனர்கள் உருவாக்கிய கடிகாரம் இடமிருந்து வலமாகச் சுற்றுகிறது.

கடிகாரங்களை வடிவமைப்பு செய்கிறவர்கள் அதை அரிய கலையாகக் கருதுகிறார்கள். கடிகார வடிவமைப்பிற்காகத் தனியான பணிமனைகளை உருவாக்கிக் கொள்கிறார்கள். மிகவும் நுட்பமாக, பொறுமையாகச் செய்யவேண்டிய பணியது. சிற்பிகள் கற்களை, மரத்தைத் தேர்வு செய்வது போலவே இவர்களும் தங்களின் தயாரிப்பு எத்தகையது என்பதை முதலில் தேர்வு செய்கிறார்கள். பின்பு நுட்பமாக உதிரிபாகங்களை உருவாக்குகிறார்கள். பொறுமையாக பரிசோதனை செய்கிறார்கள். ஜப்பானிய பாரம்பரிய கடிகாரங்களின் தனித்துவத்தை அப்படியே மீள் உருவாக்கம் செய்ய முற்படுகிறார் கிகுனா.

டோக்கியோவிலுள்ள புகழ்பெற்ற கடிகாரத் தயாரிப்பு பள்ளி ஒன்றில் பயின்றவர் கிகுனா . மூன்று வருஷப் படிப்பு. அதன்பிறகே அவர் சுயமாகக் கடிகாரங்களை உருவாக்கத் துவங்கியிருக்கிறார்.

ஜப்பானில் கடிகார வடிவமைப்பாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. கடிகாரத் தொழில்நுட்பம் குறித்து எழுதப்படும் நூற்களும் குறைவு. ஆகவே இந்தத் தொழிலில் வெற்றி பெறுவது எளிதானதில்லை. ஆங்கிலம் தெரியாத இவர் படங்களைப் பார்த்தே கடிகார வடிவமைப்பைக் கற்றுக் கொண்டிருக்கிறார். இவரது வடிவமைப்பின் நேர்த்தியை கண்டு வியந்த Académie Horlogère des Créateurs Indépendants என்ற சர்வதேச அமைப்பு அவரை உறுப்பினராக்கி கௌரவித்துள்ளது.

தான் வடிவமைக்கும் ஒவ்வொரு கடிகாரத்திற்கும் ஒரு பெயரிடுகிறார் கிகுனா. கலைப்படைப்பு போலவே அந்தப் பெயர்களும் முக்கியமானதாகின்றன. நாம் கையில் கட்டியிருக்கும் மலிவு விலைக் கடிகாரங்களுக்கு இது போன்ற பெயர்கள் கிடையாது. அவை நகல் கருவிகள்.

ஜப்பானிற்குக் கடிகாரங்கள் ஸ்பானிஷ் மெஷினரிகள் மூலமாகவே அறிமுகமாகின. அவர்கள் கொண்டுவந்த கடிகாரங்களைக் கண்டு வியந்தே நகல் வடிவங்களை உருவாக்கியிருக்கிறார்கள்.

எடோ காலகட்டத்தைச் சேர்ந்த கடிகாரம் ஒன்றைக் காண ம்யூசியம் போகிறார் கிகுனா. அங்கே அதன் பழைய உதிரிபாகங்களை வியப்போடு அடையாளம் காணுகிறார். அந்தக் கடிகாரத்தினைப் போலவே ஒன்றை கைக்கடிகாரமாக உருமாற்ற முனைகிறார். அந்தச் சவாலில் எப்படி வெற்றி பெறுகிறார் என்பதைப் படம் மிக அழகாக விவரிக்கிறது

ஒரு ஜப்பானியன் என்ற முறையில் எனது கடிகாரங்கள் எனது பண்பாட்டு அடையாளம் கொண்டதாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதை உருவாக்கவே பாடுகிறேன் என்கிறார் கிகுனா. அவர் உருவாக்கிய கடிகாரத்தின் விலை 160,000 டாலர். கிட்டதட்ட ஒரு கோடிக்கும் மேல். இவரது கடிகாரத்தை வாங்குவதற்குப் பெரும்போட்டி நிலவுகிறது.

கடிகாரத்தின் துடிப்பு என்பது நம் இதயத்தின் துடிப்பை போன்றது. நம் உடலைப் போலவே கடிகாரத்தையும் நுட்பமாக, முறையாக கையாள வேண்டும். காலத்தின் துடிப்பு எத்தனையோ உண்மைகளை உலகிற்கு சொல்கிறது. கேட்க செவியுள்ளவன் மட்டுமே அதை அறிவான் என்கிறார்கள். கிகுனா அப்படியொரு செவி கொண்டவர்.

••



Copyright Sramakrishnan. All Rights Reserved

எழுதியவர் : (18-Mar-19, 4:54 am)
பார்வை : 51

மேலே