புன்மையுறும் பொய்வாய் புகின் – பொய், தருமதீபிகை 132

நேரிசை வெண்பா

ஊக்கம் அழிக்கும்; உயர்வொழிக்கும்; ஒள்ளியதன்
ஆக்கம் சிதைக்கும்; அறிவகற்றும்; - மீக்குயர்ந்த
நன்மையொன்றும் இல்லாமல் நாசப் படுத்துமே
புன்மையுறும் பொய்வாய் புகின். 132

– பொய், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

பொய் ஒருவன் வாயில் புகுந்தால், உள்ளே அவனது ஊக்கம் அழியும்; உயர்வு ஒழியும்; செல்வம் தொலையும்; அறிவு குலையும்; நன்மைகள் யாவும் நாசமாகும். இது, பொய்யால் விளையும் கேடுகளை உணர்த்துகின்றது.

கல்வி, அழகு, புகழ், புண்ணியம் முதலிய உயர் நலங்களை மீக்கு உயர்ந்த - மிகவும் மேலான. நன்மை என்றது.

பொய் பேசுகின்றவனுக்கு நெஞ்சில் தைரியம் இராது; எப்பொழுதும் அச்சமும் திகிலுமே நிறைந்திருக்கும் ஆதலால், 'ஊக்கம் அழிக்கும்' என அதன் அழிவு நிலை அறிய வந்தது.

பொய்யன் மதிப்பிழந்து எங்கும் இழிக்கப்படுதல் கருதி ’உயர்வு ஒழிக்கும்' என்றது. அதன் புலை நிலை தெரிய புன்மையுறும் பொய் என்றது.

தன்னை வாயில் வைத்தவனை ஈனன் ஆக்கி எல்லா நலங்களையும் அடியோடு கெடுத்துக் குடிகேடு செய்து முடிவில் நரகத்தில் வைத்துவிடும். பொய்யால் விளையும் நீச நிலைகளை நினைந்து இரங்கியதால் நாசப் படுத்துமே! என்றது.

அறுசீர் விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)

அண்ணிய கிளையும் இல்லும்
..அரும்பெறல் மகவும் அன்பும்
திண்ணிய அறிவும் சீரும்
..செல்வமும் திறலும் தேசும்
எண்ணிய பொருள்கள் யாவும்
..இயற்றிய தவமும் ஏனைப்
புண்ணியம் அனைத்தும் சேரப்
..பொய்ம்மையால் பொன்று மன்றே. - பாரதம்

பொய்மையே பாவம் எல்லாம்
..விளைதரு பூமி யாகும்
பொய்மையே பிறவி எல்லாம்
புகப்புரி வித்தும் ஆகும்
பொய்மையே வறுமை எல்லாம்
போதரப் புரிவ தாகும்
பொய்மையே நரகம் எல்லாம்
புகுதரப் புகுத்தா நிற்கும். 1

ஏனைநல் லொழுக்கம் முற்ற
..இருப்பினும் இன்மை செய்யும்
ஊனமில் ஈன்றாள் மாட்டும்
..அருவருப்(பு) ஒருங்கு செய்யும்
மானமிக் கவராம் சான்றோர்
..மருங்குநான் புகல்வ தென்னே?
ஈனமார் பொய்மை கூறல்
..எற்றைக்கும் பொல்லா தாகும். 2 - காசி ரகசியம்

பொய்யின் நீசமும், அதன் நாசங்களும் இவற்றால் அறியலாகும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Mar-19, 5:47 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 26

மேலே