மெழுகாலயம் கண்ட பாண்டவரின் புத்திகூர்மை

வில்லிப்புத்தூரார் தனது திறமை அனைத்தையும் காட்டி அமைத்தது பாரதம். ஒரு பாடலில் பல்வேறு நுட்பமான விஷயங்களை அமைப்பது அவரது இயல்பு.

முந்தைய மன்னர் காலத்தில் சதிகள் எப்படி நடக்கும், ஒரு புத்திகூர்மையுள்ள மன்னன் அவற்றை எப்படி எதிர் கொள்ள வேண்டும், அன்றாட வாழ்க்கையிலும் கூட அவன் எவ்வளவு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதையெல்லாம் வியாஸ பாரதம் விளக்குகிறது.

அதையெல்லாம் உள்வாங்கி தன் கவித்துவத்தால் மெருகேற்றி, ஒரே பாடலில் பல அணிகளைப் புகுத்துவது, பல கதைகளைச் சொல்வது, பல நுட்பமான விஷயங்களைத் தெரியப்படுத்துவது போன்ற இவற்றையெல்லாம் தனது தனி நடையாக்கி, ஒரு புதிய பாணியை வில்லிப்புத்தூரார் உருவாக்கி வில்லி பாரதத்தைப் படைத்துள்ளார்.

ஆதிபருவத்தில் வாரணாவதச் சருக்கத்தில் வரும் பாடல்கள் அவரது கவிதா சக்தியையும் தமிழின் பால் அவருக்கிருந்த அபார ஈடுபாட்டையும் காண்பிப்பவை.

திருதராஷ்டிரன் எப்படியும் பாண்டவர்களை ஒழித்துக் கட்டுவது என்ற சதியாலோசனைக்கு உடன்பட்டு தனது கோணல் புத்தியுள்ள அமைச்சன் புரோசனனைத் தன் தீய செயலை நிறைவேற்ற ஆணையிடுகிறான். எப்படி?

புரோசனனை தருமனுக்கு மந்திரியாக நியமித்து திருதராஷ்டிரன் கூறுகிறான் :

புகன்ற கேள்விப் புரோசனன்றன்னையிம்

மகன்றனக்குநீ மந்திரியாகியே

இகன்றவர்செற் றினியோர்க்கினிமை செய்து

அகன்றஞாலமிவன் வழியாக்குவாய்.

(வாரணாவதச் சருக்கம் பாடல் எண் 113, வை.மு.கோ பதிப்பு)

பாடலின் பொருள் :

புகன்ற கேள்வி புரோசனன் தன்னை – சிறப்பித்துச் சொல்லப்பட்ட நூல் கேள்வியை உடைய புரோசனனை நோக்கி

நீ – இ – மகன் தனக்கு மந்திரி ஆகியே – நீ இந்த தருமபுத்திரனுக்கு மந்திரி ஆகி

இகன்றவர் செற்று – இவரது பகைவரை அழித்து

இனியோர்க்கு இனிமை செய்து – இவரது நண்பர்களுக்கு நன்மை செய்து

அகன்ற ஞாலம் இவன் வழி ஆக்குவாய் – பரந்த நிலவுலகத்தை இவனுக்கு உரித்தாக்குவாயாக!

அருமையான ஆணை போலத் தோன்றுகிறதல்லவா!

புரோசனனுக்கு மட்டும் புரியும் படி அவன் கூறிய ஆணை என்ன தெரியுமா?

இகன்றவர் செற்று – நம் துரியோதனாதியர்க்குப் பகைவர்களான இந்தப் பாண்டவர்களை அழித்து

இனியோர்க்கு இனிமை செய்து – வேண்டியவர்களான துரியோதனாதியர்க்கு நன்மை செய்து

அகன்ற ஞாலம் – பரந்த ராஜ்யத்தை

இவன் வழி ஆக்குவாய் – இந்த துரியோதனனுக்கு உரித்தாகும் படி செய்வாயாக!

அரசன் கூறியதன் உட்பொருளை நன்கு புரிந்து கொண்ட புரோசனன் வாரணாவதத்திற்கு பாண்டவர்களை அழைத்துச் செல்கிறான்.

உற்சாகமான வரவேற்பு.

அருமையான அரண்மனை. கிருகப் பிரவேசம் செய்தாகி விட்டது. அரண்மனையை உற்றுக் கவனிக்கின்றனர் பாண்டவர்கள்.

அவர் தம் புத்தி கூர்மை லேசுப்பட்டதா என்ன? மெழுகினால் அரண்மனை அமைக்கப்பட்டதைக் கண்டுபிடிக்கின்றனர்.

மெழுகினானமக் காலயம் வகுத்ததும் விரகே

ஒழுகுகின்ற தன் னொழுக்கமும் வஞ்சனை யொழுக்கே

எழுகடற்படை யாவையுமிவன் வழியனவே

தொழுதகையுளும் படையுள சூழ்ச்சியும் பெரிதால்

(வாரணாவதச் சருக்கம் பாடல் எண் 119, வை.மு.கோ பதிப்பு)

பாடலின் பொருள் :

மெழுகினால் நமக்கு ஆலயம் வகுத்ததும் விரகு ஏ – (இந்த புரோசனன்) நமக்கு மெழுகினால் அரண்மனை அமைத்திருப்பதும் வஞ்சனையே

ஒழுகுகின்ற தன் ஒழுக்கமும் வஞ்சனை ஒழுக்கே – இனியவன் போல நடந்து கொள்ளும் இவனது நடத்தையும் கூட வஞ்சனையான நடத்தையே

எழுகடல்படை யாவையும் இவன் வழியனவே – ஏழு சமுத்த்திரம் போன்ற சேனை எல்லாம் இவனது வசத்தில் உள்ளனவே

தொழுத கையுளும் படை உள – (பகைவர்கள்) அஞ்சலி செய்யும் விதமாக குவிக்கின்ற கைகளினுள்ளும் ஆயுதங்கள் இருக்குமல்லவா?

சூழ்ச்சியும் பெரிது – அவர்களுடைய சதியாலோசனையும் கூட மிகப் பெரியது தான்!

இங்கு வை.மு.கோபாலகிருஷ்ணமாசாரியார் விளக்கவுரையில் வில்லிப்புத்தூராரின் தமிழறிவைச் சுட்டிக் காட்டுகிறார்.

கடைசி அடியில் வள்ளுவரின் குறள் இருக்கிறது.

தொழுத கையுள்ளும் படையொடுங்கு மொன்னா

ரழுத கண்ணீரு மனைத்து (குறள் 834)

ஒன்னார் – பகைவர் கண்ணீர் சிந்தினால் அது அடுத்தவரைக் கெடுக்கத் தான்; அவர்கள் கை கூப்பி வணங்கினால் அதற்குள் கொல்வதற்கான ஆயுதம் இருக்கும்.

பரிமேலழகர் தனது உரையில், “பகைவர் தம் மென்மை காட்டித் தொழினும் , அழினும், அவர் குறிப்பையே நோக்கிக் காக்க வென்பதாம்” என்று சுட்டிக் காட்டுகிறார்.

“தொழுத தங்கையினுள்ளுந் துறுமுடியகத்துஞ் சோர

அழுத கண்ணீ ரினுள்ளு மணிகலத்தகத்தும் ஆய்ந்து

பழுது கண் ணரிந்து கொல்லும் படையுடனொடுங்கும் பற்றா

தொழிக யார் கண்ணுந் தேற்றந் தெளிருற்றார் விளிருற்றாரே”

என்று இப்படி சீவக சிந்தாமணிப் பாடலும் இதையே சுட்டிக் காட்டுகிறது.

இப்படி புரோசனனின் சூழ்ச்சியைக் கண்டு பிடித்த பாண்டவர்கள் என்ன முடிவு செய்தார்கள்? பாடலைப் பார்ப்போம் :

சங்கையுண்டினியுண்டியுஞ் சாந்தமும் பூணும்

பொங்கு நுண்ணிழைத்துகிலுமந் தாமமும் பூவும்

இங்கிவன் பரிந்தியற்றிய கோடலமென்றார்

கங்கை நீர் தவழ் கழனி சூழ் பழன நாடுடையார்


(வாரணாவதச் சருக்கம் பாடல் எண் 120, வை.மு.கோ பதிப்பு)

பாடலின் பொருள்
---------------------------

சங்கை உண்டு – இவனிடத்து நமக்குச் சந்தேகம் உள்ளது

இனி – இனிமேல்

இங்கு இவன் பரிந்து இயற்றிய -இந்த இடத்தில் இவன் நம் பக்கம் அன்புடையவன் போல நடிக்கிறான். (ஆகவே இவன் தரும்)

உண்டியும் – உணவுகளையும்

சாந்தமும் – சந்தனத்தையும்

பூணும் – அணிகின்ற ஆபரணங்களையும்

பொங்கு நுண் இழை துகிலும் – சிறந்து விளங்குகின்ற நுண்ணிய நூலினால் ஆகிய ஆடைகளையும்

அம் தாமமும் – அழகிய மாலைகளையும்

பூவும் – பூக்களையும்

கோடலம் – ஆராயாது கொள்ள மாட்டோம்

என்றார் – என்று தமக்குள் நிச்சயித்துக் கொண்டார்கள்

கங்கை நீர் தவழ் கழனி சூழ் பழனம் நாடு உடையார் – இப்படி நிச்சயித்தது யார் எனில் கங்கா நதியின் நீர் பாய்கின்ற கழனிகள் சூழ்ந்த மருத நிலத்தை உடைய குரு நாட்டுக்கு உரியவர்களாகிய பாண்டவர்கள்

இங்கு அக்கால அரசரின் வாழ்க்கை முறை சித்தரிக்கப்படுகிறது.

உணவு, நீர் முதலிய உண்ணப்படும் பொருள்களினால் தீங்கு வராமல் அரசரைக் காப்பாற்றுவதற்கு முதலில் அவற்றைக் கருங்குரங்கிற்கு இட வேண்டும்.

சந்தனம் முதலியவற்றை அரண்மனையில் உள்ள அரச அன்னப் பறவையின் கண்ணிலும் சக்கரவாகப் பறவையின் முதுகிலும் முதலில் தடவிப் பார்க்க வேண்டும்.

ஒருவேளை உணவில் விஷம் கலந்திருந்தால் அதைக் குரங்கு உண்ணாது. அதற்கு விஷ உணவு நன்கு தெரியும்.

அன்னமோ தவறான சந்தனத்தைக் கண்ணில் இட்டு விட்டால் கண்களிலிருந்து ரத்தத்தைச் சொரியும்.

சக்கரவாகமோ முகத்தைக் கடுக்கும்.


இப்படிப்பட்ட நுட்பமான விஷயங்கள் மூலம் அரசனை ஒவ்வொரு கணமும் காப்பாற்ற வேண்டியது மந்திரி மற்றும் மெய்காப்பாளரின் பொறுப்பு.

இப்படிப்பட்ட விஷயங்கள் எல்லாம் முந்தைய தமிழ் நூல்களில் அழகுற விரித்து உரைக்கப்பட்டுள்ளன.

சிந்தாமணியில் வரும் ஒரு செய்யுளைப் பார்ப்போம்:


பூந்துகில் மாலை சாந்தம் புனைகலம் பஞ்சவாசம்

ஆய்ந்தளந் தியற்றப்பட்டவடிசில் நீரின்ன வெல்லாம்

மாந்தரின் மடங்க லாற்றற் புதுமுகன் காக்கவென்றாங்

கேந்து பூண் மார்பனேவ வின்னண மியற்றினானே.


இப்படி ஒரு பாடலின் மூன்றே வரிகளில் பஞ்ச பாண்டவர்களின் மதி நுட்பத்தை வில்லிப்புத்தூரார் விளக்குகிறார்.

திருதராஷ்டிரன் பூடகமாக இரு பொருள் தரும் படி பேசுவதை இரு வரிகளில் விளக்குகிறார்.

வில்லி பாரதம் படிப்பவர்க்குச் சுவை பயக்கும் ஒரு நூல் மட்டுமன்றி பல நுட்பமான விஷயங்களையும் விளக்கும் நூலும் கூட!

***




ச.நாகராஜன்

எழுதியவர் : (20-Mar-19, 8:20 pm)
பார்வை : 31

மேலே